Published:Updated:

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

றுமையில் வாடும் குடும்பம், அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளி, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பெற்றோர் என்ற சூழ்நிலையிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பன்மடங்கு உயர்ந்தவர்கள்தானே! சமீபத்தில் வெளியான பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் அப்படி கைகுலுக்க வைத்த தங்கங்கள் சிலர் இங்கே!

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

மஞ்சுளா, 1073/1200, மலைவாழ் சமூக மாணவி, டி.டி.ஜி. மேல்நிலைப்பள்ளி, சீலையூர், கோவை மாவட்டம்

 ‘‘எங்க அப்பாவும், அம்மாவும் படிக்கவே இல்லை. கூலி வேலைதான் குடும்பத்தைக் காப்பாத்துது. அதனாலதான், ‘நீங்களாவது படிச்சு நல்ல வேலைக்குப் போங்க’னு கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வெச்சாங்க. எங்க ஊருல ஸ்கூல் இல்ல. தினமும் 20 கிலோமீட்டர் தூரம் பஸ்ல போயிட்டு வரணும். பஸ்ஸுக்கும் காசில்ல. ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்ந்தேன். எங்க சமூகத்துல கல்லூரிப் படிப்பெல்லாம் அவ்வளவு சுலபமில்ல. ஆனா, ‘நீ நல்ல மார்க் வாங்கு; எப்பாடு பட்டாச்சும் காலேஜுல சேர்த்து விடுறேன்’னு அப்பா சொன்னார். வணிகவியலில் 199, கணக்குப்பதிவியல்ல 197 வாங்கியிருக்கேன். பி.காம் படிக்க ஆசை. பேங்க் வேலைக்குப் போகணும்னு ரொம்ப ஆசை. என் ஆசை நிறைவேறிட்டா, அடுத்த ஆசையை நிச்சயமா நிறைவேத்திடுவேன்!’’

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

க.முத்துஷகிலா, 1165/1200, புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி

‘‘வரலாற்றில் மாநில அளவில் முதலிடமும், பள்ளியில் முதல் மாணவியாகவும் தேர்வாகியிருக்கேன். அப்பா தேங்காய் எண்ணெய் மில்லுல தேங்காய் அரைக்கிற கூலி வேலையும், அம்மா தினக்கூலி வேலையும் பார்க்கிறாங்க. அக்கா பி.காம் படிக்கிறா. நான் பத்தாவதுல 461 மார்க் எடுத்தப்போ, மேத்ஸ் பயாலஜி குரூப் எடுத்துப் படிச்சா, ஸ்கூல் ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்திங்கிறதுக்காகவே வணிகவியல் குரூப் எடுத்தேன். அம்மாகிட்ட தையல் கத்துக்கிட்டு, தினமும் சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அவங்க தைச்சுக் கொடுக்க வேண்டிய துணிகள் ஏதாச்சும் இருந்தா முடிச்சுக் கொடுப்பேன். பி.காம் படிச்சு சி.ஏ பண்ண ஆசை. காலேஜ்ல சேர்ந்ததும் ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்து, முடிஞ்சளவு அப்பா, அம்மாவைக் கஷ்டப்படுத்தாம அந்தப் பணத்தை படிப்புக்கு பயன்படுத்திக்குவேன்.’’

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

மகாலட்சுமி, 1142/1200, ஶ்ரீவிநாயகா மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்

‘‘திருச்சிதான் சொந்த ஊரு. நான் நாலாவது படிக்கும்போதே அப்பா இறந்துபோயிட்டாரு. அம்மா கட்டட வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. வீட்டுல மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாததால, ‘அண்ணன் படிச்சா உங்களைக் காப்பாத்துவான்’னு என்னையும், என் தங்கச்சியையும் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டாங்க அம்மா. நாங்க வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். மாசம் 600 ரூபாய் சம்பளம். அப்போதான் சித்ரானு ஒரு அக்கா, எங்க நிலைமையைப் பார்த்து, எங்கம்மாகிட்ட பேசி எங்களை கவர்மென்ட்டு ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. பத்தாம் வகுப்புத் தேர்வில், 477 மார்க் எடுத்து பள்ளிக்கூடத்தில் முதல் மாணவியா வந்தேன். அது தெரிந்து எங்களைத் தொடர்புகொண்ட நாமக்கல் விநாயகா மேல்நிலைப்பள்ளி பொறுப்பாளர் பொன்னுசாமி சார், எனக்கு அந்தப் பள்ளியில் இலவச ஸீட் கொடுத்தார். அந்த வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்தி, 1142 மார்க் எடுத்திருக்கேன். என்னோட மெடிக்கல் கட் ஆஃப் 194.75. டாக்டருக்குப் படிக்க ஆசை. எங்கம்மா, சித்ரா மிஸ், விஜயராணி மிஸ், தலைமையாசிரியர் தங்கராசு, சேர்மன் பழனிச்சாமி... இவங்க எல்லோரும் என்னை இவ்வளவு தூரம் அழைச்சிட்டு வந்துட்டாங்க. இதுக்கு மேல?’’

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

பிரேமலதா, 1021/1200, அறிஞர் அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு

‘‘செங்கல்பட்டு பக்கத்துல இருக்கிற புக்கத்துறை கிராமம்தான் என் ஊரு. 100 நாள் கூலி வேலைக்குப் போற எங்கப்பா, அக்காவை டிகிரி வரைக்கும் படிக்க வெச்சாங்க. என்னையும் கஷ்டப்பட்டாவது படிக்க வெச்சிருவாங்கனு நம்பிக்கையோட படிச்சேன். வறுமையான குடும்பம். டியூஷனெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியாதுனு, பாடத்துல ஏதாவது சந்தேகம்னா ஸ்கூல்ல டீச்சர்ஸ்கிட்டயே கேட்டுருவேன். தேர்வுக்கு சில மாதங்கள் முன்னால எனக்குக் காய்ச்சல் வந்து மீண்டு வந்தப்போ, தேர்வு நேரத்துல விபத்துல அம்மாவுக்கு கை உடைஞ்சிருச்சு. வீட்டு வேலைகளை எல்லாம் செஞ்சுட்டே படிச்சு தேர்வெழுதினேன். இன்னும் கொஞ்சம் மார்க் எடுத்திருக்கலாம்னு தோணுது. ஃபீஸ் குறைவா இருக்கும்கிறதால, அரசுக் கல்லூரியிலதான் சேரணும். ஐ.ஏ.எஸ் ஆவதுதான் லட்சியம்!’’

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

தேஷிமா, 1080/1200, திருமக்கோட்டை பொண்ணுகண்ணு வேதாம்பாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்டம்

‘‘எங்கப்பா வல்லூர் கிராமத்துல கீத்து வேயப்பட்ட சின்ன டீக்கடை வெச்சிருக்கார். ‘உங்க பொண்ணுதான் ஸ்கூல் ஃபர்ஸ்டாமே?’னு எல்லோரும் கேட்கிறது சந்தோஷமா இருக்குனு சொல்லும்போது, எனக்கு அதைவிட சந்தோஷமா இருக்கு. நான் பள்ளிக்கூடம் போற நேரம் போக, கடையில அப்பாவுக்கு உதவியா நிப்பேன். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. எங்கம்மாவுக்கு தாங்க முடியாத இடுப்பு வலி. வைத்தியம் பார்க்க காசில்லாம ரண வேதனையோட வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்காங்க. இதுல என்னைப் படிக்க வைங்கனு கேட்க, எனக்கே குற்ற உணர்ச்சியா இருக்கு.’’

வீட்டில் வறுமை கல்வியில் சாதனை!

வீரதேவிஶ்ரீ, 1037/1200, புனித இசபெல்லா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை

‘‘எங்கப்பா, செருப்புத் தைக்கும் தொழிலாளி. அரசு ஆஸ்பத்திரி எதிரே இருப்பார். வருமானம் சாப்பாட்டுக்கே பத்தாது. எங்க குடும்பத்துல யாருக்குமே எழுதப் படிக்கத் தெரியாது. அதுவே எனக்கு வைராக்கியம் தர, கஷ்டப்பட்டுப் படிச்சேன். கூடவே, அப்பா, அம்மாவுக்கு உதவியா பேக் தைச்சும் கொடுப்பேன். இப்போ நான் பாஸ் ஆன சந்தோஷத்தைவிட, கல்லூரியில் சேர்வது பத்தின கவலைகளே நிறைய இருக்கு. எங்கப்பா பணத்துக்காக அலைஞ்சிட்டு இருக்கார். படிச்சாதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்னு சொல்வாங்க. நான் படிச்சு மார்க் வாங்கி என்னை நிரூபிச்சிட்டேன். முன்னேற வழி கிடைக்குமா?’’

ச.ஜெ.ரவி, பா.ஜெயவேல், கே.குணசீலன், சி.ஆனந்தகுமார்,

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், இ.கார்த்திகேயன், ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு