Published:Updated:

"விதி, சதி செஞ்சாலும்... வாழ்க்கைய விட்டுறாதீக!"

கிராமத்து மனுஷியின் நம்பிக்கைப் பாடம்

சதியான வாழ்க்கை, வளமான தொழில், நிறைவான சொத்து என இருந்துவிட்டு, திடீரென ஒரு நாளில் உயிர் ஒன்றைத் தவிர, உடைமை என்று எதுவும் இல்லாத வறுமை சொந்தமானால்? அப்படி ஒரு நிலைதான் சாந்திக்கும் ஏற்பட்டது. ஆனால், இன்று, பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்து, தன் மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்து கம்பீர நடை போட்டு வருகிறார் சாந்தி! ஊர்க்காரர்களுக்கு வாஞ்சையுடன் ‘சாந்தியம்மா!’

"விதி, சதி செஞ்சாலும்... வாழ்க்கைய விட்டுறாதீக!"

‘‘யேத்தா முத்துலட்சுமி... அந்த முறுக்கு மாவ எடுத்து விரசா பிசஞ்சாதேன் நாளைக்குள்ள அம்புட்டையும் சுட்டு எடுத்து கடைகளுக்கு சப்ளை கொடுக்க முடியும். யேய்யா ராசா... செத்த நேரம் இருங்க அதிரசத்த பெட்டியில, அடுக்கிட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன்!’’

- 50 வயதிலும் தேனீ போல் பறந்து கொண்டிருக்கும் சாந்தியம்மா, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி பகுதியில் விதவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயாரித்து கடைகளுக்கும், விசேஷங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் நம்பர் - 1 சுயம் சார்ந்த விற்பனையாளர்.

‘‘நானு கலியாணம் பண்ணிப்போன வீடு, வசதியான குடும்பம். மாமனாரும் வீட்டுக் காரரும் வாழை வெள்ளாமையும், வாழைக்கா யாவாரமும் பாத்துட்டு இருந்தாக. ரெண்டு லாரி வெச்சிருந்தோம். வாரத்துக்கு ரெண்டு நாளு பெங்களூருல இருக்குற பெரிய கடைகளுக்கு எல்லாம் எங்க தோட்டத்துக்காயோட, மத்த சம்சாரிககிட்டயிருந்தும் வாழைக்கா வாங்கி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தோம்.

தொழில்ல திடீர்னு 10 லட்சம் நஷ்டம் ஆயிருச்சு. குடும்பம் நொடிச்சுப் போச்சு. வாழ்வாங்கு வாழ்ந்துட்டு வறுமையைப் பொறுக்க முடியாத மாமனாரு, விஷம் குடிச்சு இறந்துட்டாரு. ‘சொந்தக்காரவுக முன்னால வாழ்ந்துகெட்ட குடும்பமா இருக்க வேணாம், வா வெளியூருக்குப் போகலாம்’னு சொன்ன என் வீட்டுக்காரரு, பொள்ளாச்சிக்கு என்னையும் எம் மூணு புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. அங்க காய்கறிக்கடை போட்ட எடத்துலயும், தொழில் கைகூடாம பசிதேன் மிஞ்சிச்சு!’’

- வியர்வையை முந்தானையில் துடைத்து, அடுப்பில் தீயைத் தூண்டிவிட்டபடி தொடர்ந் தார் சாந்தியம்மா.

‘‘வெள்ளம் தலைக்கு மேல போனதுக் கப்புறம் சாண் போனாயென்ன, மொழம் போனாயென்ன? நாம நம்ம சொந்த ஊருக்கே போயிருவோம். எல்லாரும் என்ன நெனப்பாகன்னு கலங்காம, பொழப்புக்கு வழி தேடுவோம்னு சொல்லி, அனுமந்தப்பட்டிக்கே வீட்டுக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். எத்தனையோ பேருக்கு மொதலாளியா இருந்தவர, இன்னொருத்தர்கிட்ட சம்பளத்துக்கு வேலைக்குப் போகச் சொல்ல எனக்கு மனசு வரல. ஆனாலும் அவரா சில எடங்கள்ல வேலைக்குப் போனாரு.

எனக்கு சமையல் நல்லா வரும். எட்டு வருசத்துக்கு முன்ன ஒரு படி அரிசி போட்டு, அதிரசம் சுட்டு, வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் வெச்சு வித்தேன். அன்னிக்கு எனக்குக் கெடச்ச லாபம் 50 ரூவா. நெதமும் இப்படியே நான் அதிரசம் சுட்டு விக்க, கெடைக்குற 50, 100 ரூவாயில அடுத்த நாளுக்கான சாமான் வாங்கனு ஓடிச்சு. இந்தத் தொழில் நம்மளக் காப்பாத்தும்னு மனசுல தெம்பு வரவும், 5,000 ரூவா கடன் வாங்கி, கணிசமா மளிகை சாமான், வீட்டுக்கு முன்னாடி பெரிய அடுப்புனு போட்டு அதிரசத்தோட சேர்த்து இன்னும் ரெண்டு, மூணு பலகாரங்கள் சுட்டேன். தரத்தையும், சுவையையும் பாத்துட்டு, வீடு தேடி ஆர்டர் வர ஆரம்பிச்சது!''

- சாந்தியம்மா நெருப்பில் வெந்து, குடும்பத் தின் வயிற்றைக் குளிர வைத்திருக்கிறார்.

‘‘என் மக, மருமகனோட துபாயில இருக்குறா. பெரியவன் பேக்கரி கடையிலயும், சின்னவன் செல்போன் கடையிலயும் வேலை பாக்குறானுங்க. ‘போதும்மா நெதமும் 10 மணி நேரம் அடுப்புச் சூட்டுல நீ கஷ்டப்பட்டது’னு அவனுங்க சொல்லும்போது பெத்த மனசு குளிர்ந்து போகுது. ஆனாலும் ஒடம்புல வலுவுள்ள வரை ஒழைப்போமே? முன்னயெல்லாம் நான் ஒரே ஆளாதேன் அதிரசம், எள்ளுச்சீடை, சமோசா, மைசூர் பாகுனு எல்லாம் செஞ்சேன். தொடர்ச்சியா விசேஷம், கடைகள், வெளியூர், வெளிநாட்டுக்குச் சீர்னு ஆர்டர்கள் குவிஞ்சுட்டே இருக்க, ஒரு மாஸ்டரையும், இந்தப் பொண்ணு முத்துலட்சுமியையும் வேலைக்கு வெச்சிருக்கேன். மாசம் பதினஞ்சாயிரத்துல இருந்து இருவதாயிரம் வரைக்கும் வருமானம் கெடைக்குது!’’ என்று பெருமிதத்தோடு சொன்னவர்,

‘‘வாழ்க்கை கொடுத்த வசதிய, விதி பறிச்சா, தொவண்டு போகாதீக. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவுகளும் மறுபடியும் வாழ்ந்து காட்டலாம்!’’

- பெரிய நம்பிக்கைப் பாடத்தை எளிமயாகச் சொல்லிவிட்டார் அந்த கிராமத்து மனுஷி!

ம.மாரிமுத்து, படங்கள்: சே.சின்னத்துரை

அடுத்த கட்டுரைக்கு