Published:Updated:

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

Published:Updated:

போலீஸ் கமிஷனர் ராஜகணேஷின் சதைப்பிடிப்பான சதுர முகத்தில் அதிர்ச்சி அலைகள் ஸ்லோமோஷனில் பரவின. செல்போனின் டிஸ்ப்ளேயில்  ஒளிர்ந்த எண்களை மறுபடியும் ஒரு தடவை உற்றுப் பார்த்தார்.

சந்தேகமேயில்லாமல் பத்து பூஜ்யங்கள்.

`இப்படியும் ஒரு செல்போன் எண்ணா?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புவனேந்திரனிடம் செல்போனைக் காட்டிக் கேட்டார்... “இது யாரோட நம்பர்?”

``தெ... தெரி... தெரியாது ஸார்!”

நள்ளிரவு வானவில்!

``புவனேந்திரன்! இதுவரைக்கும் நீங்க விளையாடின விளையாட்டு போதும்... இனிமேலும் இந்த தப்பான விளையாட்டை நீங்க கண்டினியூ பண்ண முடியாது. ஞானேஷ் விஷயத்தில் எனக்கு உடனடியா உண்மைகள் வேணும். இந்த அறைக்குள்ளே உட்கார்ந்து உங்களால உண்மையைப் பேச முடியாத பட்சத்தில் உங்களை லாக்கப்புக்கு கொண்டு போய் அந்த இடத்துக்கு உரிய மரியாதைகளோடு விசாரிக்க வேண்டியிருக்கும்!”

புவனேந்திரனின் விழிகள் பீதியில் உறைந்து போயின. கைகூப்பினார்.

``ப்ளீஸ் ஸார்... லாக்கப் எல்லாம் வேண்டாம். நடந்த உண்மைகளைச் சொல்லிடறேன்!”

``ம்... சொல்லுங்க! இந்த பத்து பூஜ்யம் யாரோட நம்பர்..?”

``அது யார்னு எனக்குத் தெரியாது ஸார். இன்னிக்கு மத்தியானம் ரெண்டு மணி சுமாருக்கு எனக்கு ஒரு போன்கால் வந்தது. கால் பண்ணினது யார்னு தெரிஞ்சுக்கிறதுக்காக செல்போனின் டிஸ்ப்ளேயைப் பார்த்தபோது அதுல NO NAME என்கிற வார்த்தையும் அதுக்கு கீழே பத்து பூஜ்யங்களும் இருந்துச்சு. அட்டெண்ட் பண்ணி, `பேசறது யார்'னு கேட்டேன். அதுக்கு மறுமுனையிலிருந்து பேசின நபர் ‘நான் யார்னு உனக்குத் தெரிய வேண்டியது முக்கியமில்லை. செய்ய வேண்டிய வேலைதான் முக்கியம். அந்த வேலையை செஞ்சு முடிச்சா உனக்குக் கிடைக்கப் போகிற தொகை பத்து லட்சம். அந்தத் தொகை இப்போ உன்னோட அறையில் மேஜைக்குக் கீழே ஒரு ஃப்ரீப்கேஸில் நாசிக் கரன்ஸிகளாய் மாறி உனக்காக காத்திட்டிருக்கு. போய்ப் பாரு. சரியா ரெண்டு நிமிஷம் கழிச்சு நான் மறுபடியும் போன் பண்றேன். அப்ப மேற்கொண்டு பேசுவோம்’னு சொல்லி லைனை கட் பண்ணிட்டான்.”

``ம்... அப்புறம்..?”

``நான் அரண்டு போனவனாய் என் னோட ரூமுக்குப் போய் மேஜைக்குக் கீழே பார்த்தேன். ஒரு ப்ரீஃப்கேஸ் இருந்தது. அதை ஓப்பன் பண்ணினேன். கட்டுக்கட்டா கரன்ஸி. ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். என்ன செய்யறதுனு யோசனை பண்ணிட்டிருக்கும்போதே மறுபடியும் பத்து சைபர் போன் வந்தது... ‘என்ன புவன்! ப்ரீஃப்கேஸைப் பார்த்துட்டியா..? அதுல இருக்கிற பத்து லட்ச ரூபாய் உனக்கு அட்வான்ஸ் அமௌன்ட். நான் சொன்ன வேலையை செஞ்சு முடிச்சா இன்னும் ஒரு பத்து லட்சம் உன்னோட மேஜை மேல இருக்கும். உன்னோட பதில் என்ன?’ இப்படி ஒரு அதிரடி போன் அழைப்பால நான் ஆடிப்போயிருந்தாலும் கொஞ்சம் துணிச்சலை வரவழைச்சுக்கிட்டு நான் பண்ண வேண்டிய வேலை என்னனு கேட்டேன். அதுக்கு செல்போன் மறுமுனையில் இருந்த அந்த நபர் ‘ரொம்பவும் சிம்பிளான வேலைதான்... நேத்து சாயந்தரம் அஞ்சு மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் உங்க ஹோட்டல் சி.சி.டி.வி. கேமரா பதிவு பண்ணியிருக்கிற எல்லா நிகழ்வுகளையும் டெலிட் பண்ணிட்டா போதும்’னு சொன்னான். `அப்படி டெலிட் பண்றதால யாருக்கு என்ன லாபம்?'்னு நான் கேட்டேன். `அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். உனக்கு இருபது லட்சம் வேணுமா... வேண்டாமா?'னு கேட்டான். நான் சில விநாடிகள் அரை மனசோடு யோசனை பண்ணிட்டு அந்த வேலையை செய்ய ஒப்புக்கிட்டேன். அப்படி நான் ஒப்புக்கிட்டதுக்குக் காரணம்... இந்த ஹோட்டலில் இருக்கிற சி.சி.டி.வி. கேமராக்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பதிவான நிகழ்ச்சிகள் தானாகவே டெலிட் ஆகிற சம்பவங்கள் சர்வ சாதாரணம். ஹோட்டல் நிர்வாகம் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காது.”

“ஒரு சின்ன வேலையைச் செய்யறதுக்காக ஒருத்தன் இருபது லட்ச ரூபாய் தர்றானேன்னு உங்களுக்கு சந்தேகம் வரலையா?”

“வந்தது ஸார்... ஆனா, ஒரு பெரிய தொகை எனக்குக் கிடைக்கப் போகிற சந்தோஷத்துல அது ஒரு சீரியஸ் விஷயமாவே என்னோட மனசுக்குப் படலை.”

“சரி... கிறிஸ்டோபருக்கு  இந்த விஷயத்தில் எப்படி சம்பந்தம்? அவர் இப்படி மூக்கத்தனமா தாக்கப்பட என்ன காரணம்?”

“இந்த ஹோட்டலில் இருக்கிற சி.சி.டி.வி. கேமரா யூனிட்டை ஆபரேட் பண்றதும், அப்ஸர்வ் பண்ணி ரிப்போர்ட் தர்றதும் கிறிஸ்டோபரின் வேலை. கிறிஸ்டோபருக்குத் தெரியாம கேமராவில் பதிவான நிகழ்ச்சிகளை டெலிட் பண்றது அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் கிறிஸ்டோபர் லஞ்சுக்கு போயிருந்த நேரத்துல நான் மாற்றுச் சாவியை உபயோகப்படுத்தி யூனிட் அறைக்குள்ளே நுழைஞ்சு, நேத்து சாயந்தரம் ஆறு மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் கேமராவில் பதிவான நிகழ்ச்சிகளை டெலிட் பண்ணி மறுபடியும் ரூமை லாக் பண்ணிட்டு வந்துட்டேன். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளேயே கிறிஸ்டோபர் என்னோட அறைக்கு வந்தான். ‘நான் லஞ்சுக்குப் போயிருந்த நேரத்துல எதுக்காக யூனிட் அறையைத் திறந்தீங்க... அங்கே உங்களுக்கு என்ன வேலை?'னு கேட்டான். எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம `காணாம போன ஒரு ஃபைல் அங்கே இருக்குமானு பார்க்க வந்தேன்'னு சொன்னேன். அதை நம்பாதவனாக சந்தேகப் பார்வையை வீசிட்டு, இறுகிய முகத்தோடு வெளியே போனான். அது என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. அந்த பத்து சைபர் செல்போன் பேர்வழி மறுபடியும் எனக்கு போன் பண்ணினபோது என்னோட மன உறுத்தலை அவன்கிட்டே சொன்னேன். அந்த சமயத்துலதான் அவன் அந்தக் குண்டைத் தூக்கி போட்டான்... `போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் எந்த நிமிஷமும் ஹோட்டலுக்கு வரலாம். ஞானேஷைப் பத்தி விசாரிக்கலாம். கேமராவில் பதிவான நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்பலாம். நீ எந்தவிதமான டென்ஷனையும் காட்டிக்காம ஒத்துழைப்பு கொடு. அதுக்குள்ளே கிறிஸ்டோபரோட கதையை என்னோட ஆட்களில் ஒருத்தன் முடிச்சுருவான். அவன் உயிரோடு இல்லைனா கேஸ் வேற டைரக்‌ஷன்ல டிராவல் பண்ண ஆரம்பிச்சுடும். இந்த பிரச்னையிலிருந்து நீயும் தப்பிச்சுக்கலாம். நானும் தப்பிச்சுக்குவேன்.”

நள்ளிரவு வானவில்!

“வரப்போற இருபது லட்ச ரூபாய் பணத்துக் காக நீங்க கிறிஸ்டோபரை பலி கொடுக்க தலையை ஆட்டிட்டீங்க?”

“எனக்கு வேற வழி தோணலை ஸார்... கிறிஸ்டோபர் என்னைக் கண்டிப்பா காட்டிக் கொடுக்காம இருக்க மாட்டான். சுலபமா பணத்தை சம்பாதிக்க ஆசைப்பட்டு இப்போ சுருக்குக் கயித்துக்குள்ளே மாட்டிக்கிட்டேன்.’’

“சரி... இனிமேலாவது நீங்க உண்மையைப் பேசணும்.”

“கண்டிப்பா ஸார்!” புவனேந்திரன் தலையை ஆட்டிக்கொண்டிருக்கும்போதே மேஜையின் மேல் இருந்த அவருடைய செல்போன் ‘திடும்’ என்று விழித்துக்கொண்டு ரிங்டோனை வெளியிட்டது.

கமிஷனர் ராஜகணேஷ் செல்போனின் டிஸ்ப்ளேயைப் பார்த்தார்.

NO NAME என்கிற வார்த்தைக்குக் கீழே பத்து பூஜ்யங்கள் விட்டு விட்டு ஒளிர்ந்தன.

“அவன்தான்..! லைன்ல வர்றான். ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க...” - செல்போனைத் தள்ளி வைத்தார் கமிஷனர்.

புவனேந்திரன் மைக்கை ஆன் செய்துவிட்டுப் பேசினார்.

“நான் புவன்..!”

“என்ன புவன்... உனக்கு முன்னாடி கமிஷனர் உட்கார்ந்திட்டிருக்கார் போலிருக்கு?”

பெங்களூரு.

பூங்கொடியின் முகத்தில் பரவிய அதிர்ச்சி அலைகளைக் கவனித்துவிட்ட திவாகர் அவளுடைய தோளை மெல்லத் தொட்டான்.

“போன்ல யாரு பூங்கொடி..?”

“ `லிட்டில் ரோஸஸ் கான்வென்ட், ஊட்டி’னு டிஸ்ப்ளேயில் வருது. அங்கிருந்து யாரோ ரிதன்யாவைக் கூப்பிடறாங்க...”

பூங்கொடி சொன்னதைக் கேட்டு கிச்சனில் ரவா உப்புமாவைக் கிளறிக்கொண்டிருந்த ரிதன்யா பதற்ற நடையோடு வேகவேகமாய் வந்தாள்.

“என்னோட சன் அபிநய் படிக்கிற கான்வென்ட் அது. அங்கிருந்து எனக்கு போன் வருதுன்னா ஏதாவது ஒரு முக்கியமான விஷயமாத்தான் இருக்கும்” - சொல்லிக்
கொண்டே பூங்கொடியின் கையில் இருந்த செல்போனை வலுக்கட்டாயமாக வாங்க முயன்றாள். திவாகர் கையமர்த்தினான்.

“பொறு... பொறு! அந்த முக்கியமான விஷயம் என்னான்னு நானும் பூங்கொடியும் தெரிஞ்சுக்க வேண்டாமா... ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசு.”

ரிதன்யா செல்போனை வாங்கி ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு நடுக்கமாக குரல் கொடுத்தாள்.

“ஹலோ..!”

மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது.

“மிஸஸ் ரிதன்யா..?”

“ஆமா...”

“மதர் ஆஃப் அபிநய்?”

“யெஸ்!”

“நான் லிட்டில் ரோஸஸ் கான்வென்ட் பிரின்சிபால் மரிய புஷ்பம் பேசறேன்...”

“சொல்லுங்க மேடம்... இவ்வளவு காலையில் போன் பண்ணியிருக்கீங்க... எனிதிங்க் இம்பார்ட்டன்ட்..?”

“யெஸ்..! நான் சொல்றதைக் கேட்டு நீங்க டென்ஷன் பட வேண்டாம். உங்க சன் அபிநய்க்கு கடந்த ரெண்டு நாட்களா விடாத காய்ச்சல். மாத்திரை கொடுத்துப் பார்த்தோம்... ஃபீவர் கட்டுப்படலை. ஹாஸ்பிடல்ல இப்போ அட்மிட் பண்ணியிருக்கோம்... ட்ரீட்மென்ட் ஈஸ் கோயிங் ஆன்.”

“அ... அய்யோ!” என்று அலறிய ரிதன்யா முகம் இருண்டு போனவளாய் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்தாள்.

“கன்ட்ரோல் யுவர்செல்ஃப் மிஸஸ் ரிதன்யா..! டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுத்ததில் இப்போ டெம்பரேச்சர் குறைஞ்சிருக்கு... இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ளே அபிநய் ரெக்கவர் ஆயிடுவான். யூ டோண்ட் வொர்ரி... நான் இப்போ போன் பண்ணினது, உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணத்தான்..!”

“நான் உடனே புறப்பட்டு வரட்டுமா மேடம்?”

“வேண்டாம்... நாட் நெசசரி... அபிநய்க்கு மறுபடியும் காய்ச்சல் வந்தாலோ அல்லது அதிகமானாலோ உங்களுக்கு உடனடியா காண்டாக்ட் பண்ணி தகவல் சொல்றேன். அந்த சமயத்துல வந்தா போதும். மறுபடியும் ரெண்டு மணி நேரம் கழிச்சு பேசறேன்” - மறுமுனையில் பிரின்சிபால் நிறுத்தி நிதானமான குரலில் பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட, ரிதன்யாவின் கையில் இருந்த செல்போனைப் பறித்தான் திவாகர்.

“உன் பையனுக்கு காய்ச்சல் என்கிற விஷயம் எனக்கு நேத்திக்கே தெரியும்... அங்கே இருக்கிற என்னோட ஆள் மூலமா தகவல் ராத்திரியே என் காதுக்கு வந்தாச்சு!”

ரிதன்யாவின் கண்கள் வெகுவாக கலங்கியிருக்க... கன்னங்களில் நீர்ச்சரங்கள். திவாகரைப் பார்த்து கைகூப்பினாள். குரல் உடைந்து சிதறியது.

“நா... நான் என் பையனைப் பார்க்கணும். ஊட்டிக்கு உடனடியா புறப்பட்டுப் போகணும்!”

“என்னது... ஊட்டிக்கு போகணுமா..! தாராளமா போ. அதுக்கு முந்தி எங்களுக்கு ‘நள்ளிரவு வானவில்லை’க் காட்டிட்டு போ!”

ரிதன்யா அழுகையில் வெடித்தாள்.

“என்னோட குழந்தை உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கான். அவன் மேல சத்தியம் பண்ணிச் சொல்றேன். எனக்கு ‘நள்ளிரவு வானவில்’ என்கிற வார்த்தை தெரியுமே தவிர அது எது மாதிரியான விஷயம், யார்கிட்டே இருக்குன்னு எனக்குத் தெரியாது... தெரியாது... தெரியாது!”

“நிஜமா யார்கிட்டே இருக்குன்னு உனக்குத் தெரியாதா?”

“தெரியாது..!”

“அப்புறம் ஏன் நேத்திக்கு காலையில் ‘அல்டிமேட் வொண்டர்ஸ்’ ஐ.டி. கம்பெனிக்குப் போய் அந்த கம்பெனியோட எம்.டி. யோகானந்தத்தையும், அவரோட மகன் ரூபேஷையும் என்கொயரி பண்ணினே?”

ரிதன்யா உஷ்ணமாக பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு தன் நெற்றியைப் பிடித்துக்கொண்டாள்.

“நான் நேற்றைக்கே உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். ‘நள்ளிரவு வானவில்’ என்கிற ‘கோட் வேர்ட்’டுக்கும் யோகானந்தின் கம்பெனியான அல்டிமேட் வொண்டர்ஸுக்கும் ஏதோ லிங்க் இருக்கலாம்னு என்னோட இம்மீடியட் பாஸ் டி.எஸ்.பி. நம்பெருமாள் சந்தேகப்பட்டார். என்கொயரி பண்ண என்னை அனுப்பினார்.”

“என்கொயரி பண்ணினியா?”

“ஆமா..! ஆனா, யோகானந்தும் அவரோட பையன் ரூபேஷும் நான் பண்ணின விசாரணைக்கு ஒத்துழைப்பு தரலை. அவர்களோட பேச்சும் நடத்தையும் என்னை மிரட்டற மாதிரி இருந்தது. அதுவுமில்லாமே நான் அவங்களை விசாரணை பண்ணிட்டிருக்கும்போதே ‘நள்ளிரவு வானவில்’ மேட்டரை முதன் முதலா சைபர் க்ரைம் செல்லுக்கு இன்ஃபார்ம் பண்ணின கலியுகம் டி.வி. ரிப்போர்ட்டர் இரண்டாம் நாரதன் சென்னை ஈ.ஸி.ஆர். ரோட்ல பைக்கில் போகும்போது கொலை செய்யப்பட்டார். அதற்கடுத்த சில மணி நேரத்துக்குள்ளேயே பெங்களூரு சைபர் க்ரைம் செல் எஸ்.பி. சந்திர கவுடா, யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஜீப்ல போயிட்டிருக்கும்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அடுத்தடுத்து நடந்த அந்த ரெண்டு விபரீத சம்பவங்களால எங்க சைபர் க்ரைம் செல் இந்த ‘நள்ளிரவு வானவில்’ மேட்டரை தற்காலிகமா நிறுத்தி வெச்சிருக்கு. இந்த நிலைமையிலே என்னால என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கிறே..?”

திவாகர் தன் உதடுகளில் மெலிதான சிரிப்பு ஒன்றைத் தவழவிட்டான்.

“உன்னால முடியும் ரிதன்யா..! இன்னிக்கு காலையில் பத்து மணிக்கு அந்த ’அல்டிமேட் வொண்டர்ஸ்’ ஐ.டி. கம்பெனி எம்.டி. யோகானந்தை மறுபடியும் பார்த்து ‘நள்ளிரவு வானவில்’ பற்றிப் பேசப் போறே!”

ரிதன்யாவின் இதயத்துக்குள் போர்க்கால முரசின் ஒலி கேட்டது.

- தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism