Published:Updated:

குரு மரியாதை

வைகையை மீட்கப் போராடும் அமெரிக்க அம்மணி

குரு மரியாதை

வைகையை மீட்கப் போராடும் அமெரிக்க அம்மணி

Published:Updated:
குரு மரியாதை

‘‘மதுரை, சித்திரைத் திருவிழாவைப் பார்த்துதான், எனக்கு அமெரிக்க ஹட்ஸன் (HUDSON) ஆற்றை அழிவில் இருந்து காக்கும் வழி கிடைத்தது!’’ - ஆர்வம் கொடுத்து ஆரம்பித்தார், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெலிசியா யங். இவர், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பான ‘எர்த் செலிபிரேஷன்'னின் செயல்பாட்டாளர். சமீபத்தில் ‘வைகையை மீட்போம்’ என மதுரையில் இவர் நடத்திய விழிப்பு உணர்வு ஊர்வலத்தை, ‘‘இது குருவுக்குச் செலுத்தும் மரியாதை போன்றது!’’ என குறிப்பிட்டவரிடம் கைகுலுக்கிப் பேசினோம்.

‘‘என் அம்மா கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அப்பா அமெரிக்கர். இந்திய வம்சாவழிப் பெண்ணான எனக்கு, இந்நாட்டின் பண்டிகை, கொண்டாட்டங்களில் விருப்பம் என்பதால், 1989-ல் இந்தியா வந்து அகமதாபாத் கும்பமேளா, ராஜஸ்தான் ஹோலி, மதுரை சித்திரைத் திருவிழா போன்ற திருவிழாக்களை ஆவணப்படங்களாக எடுத்தேன். குறிப்பாக, சித்திரைத் திருவிழா எனக்கு மிகவும் பிடித்துப்போனது. பல்லாயிரம் மக்களை ஓரிடத்தில் கூடவைத்து மகிழ்ச்சி பொங்க வைக்கிற அந்தத் திருவிழா, மதத்தோடு மட்டும் தொடர்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. அந்த நிகழ்வில் ஆற்றைச் சுத்தப்படுத்தி, தூர்வாரி, ஆண்டுக்கு ஒருமுறை அதன் வழிகளைச் சரிசெய்துகொடுக்கும் சமூகக் கடமைகளையும் மக்களைச் செய்ய வைத்தது அந்தத் திருவிழா’’ எனும் ஃபெலிசியா யங், அதன் அடிப்படையில்தான் அமெரிக்க ஆற்றைச் சுத்தம் செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு மரியாதை

‘‘அமெரிக்கா திரும்பிய நான், எங்கள் ‘எர்த் செலிபிரேஷன்’ அமைப்பின் சார்பாக ஹட்ஸன் ஆற்றிலும், நூற்றுக்கணக்கான பூங்காக்களிலும் இப்படி மக்கள் பெருந்திரள் கூட்டமாக கூடும் கொண்டாட்டங்களை உருவாக்கி, அதன் மூலமாகவே அவற்றைச் சுத்தப்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதனால், தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட்டதோடு, அவர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. பலனாக, இன்று ஹட்ஸன் ஆறு குப்பைக் கழிவுகள், வேதிக்கழிவுகள் எதுவும் இன்றி கடல் குதிரைகளும், சுறாக்களும், டால்ஃபின்களும் ஜீவிக்கும் ஆரோக்கிய ஆறாக உள்ளது.

குரு மரியாதை

இப்படி அமெரிக்காவில் உள்ள ஒரு ஆற்றைக் காப்பாற்ற அடிப்படைக் காரணமாக இருந்த மதுரை, சித்திரைத் திருவிழாவுக்கு நன்றி செலுத்த இங்கு வந்தபோது, வைகை ஆக்கிரமிப்புகள், கழிவுகள், மணல் கொள்ளைகள் என்று கூறுபோட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தேன்!’’ எனும் பெலிசியா யங், வைகையை மீட்க கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பல அரசியல் சந்திப்புகள், கல்லூரிகளில் சொற்பொழிவுகள், அரசு அனுமதி பெற்று பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்வுகள் என செயலாற்றி வருகிறார்.

குரு மரியாதை

‘‘தனம் அறக்கட்டளை, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுடன் கைகோத்து பேரணிகள் நடத்தி வருகிறேன். பிளாஸ்டிக் திமிங்கலத்தை வைகையில் மிதக்கச் செய்தது, வைகைக் கரைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது என்று பொதுமக்களின் கவனம் பெற்று அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டும் விதமாகப் பணியாற்றுகிறோம். வைகையைச் சுத்தமாக்க வெறும் ஐந்து ஆண்டுகள் போதுமானது. என்னால் முடிந்த பங்களிப்பாக, வைகை நதிக்கரையில் வாழும் மக்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தித் தரும் விதமாக, கொலம்பியா ஆர்கிடெக்ட் மாணவர்களை இங்கே வரவழைக்க இருக்கிறேன்’’ என்றவர்,

‘‘கொண்டாட்டங்கள் என்பது சமூகச் செயல்பாட்டை (சோஷியல் ஆக்‌ஷன்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று மதுரை மண்ணில்தான் கற்றேன். ஆனால், அதை இங்கு செயல்படுத்த உங்களை வேண்டுகிறேன். ஒரு காலத்தில் பாண்டிய மன்னனை எதிர்த்து வரும் போர்ப்படைகள், வைகை ஆற்றின் அகலத்தைப் பார்த்தே பின் வாங்கிய வரலாறு உண்டு.  ஆனால், இன்று பூனை தாண்டும் அளவுக்கு சுருங்கி ஓடுகிறது வைகை நதி. 6808.76 ஹெக்டேர் விவசாயப் பாசனத்தையும், அதைச் சார்ந்துள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்க, வைகையை மீட்க வேண்டியது அவசியம்!’’ - விடைபெற்று விமானம் ஏறினார், ஃபெலிசியா யங்!

சி.சந்திரசேகரன், படங்கள்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism