Published:Updated:

பனையில் அள்ளலாம் பணம்!

ஜுவல் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், பழக்கூடை, பவுச்...

பனையில் அள்ளலாம் பணம்!

ஜுவல் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், பழக்கூடை, பவுச்...

Published:Updated:

ருபுறம் உலகம் பிளாஸ்டிக் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதற்கு மாற்றாக இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்த, அதற்கு பலம் சேர்க்கும் விதமாக பனை ஓலைகளில் அன்றாடத் தேவைக்கான பொருட்களை அழகான வடிவங்களில் உருவாக்கி அசத்துகிறார்கள் மதுரை, ரிசர்வ் லைனிலுள்ள ‘விஷன் மல்லிகை சுயஉதவிக் குழு’ பெண்கள்!

பனையில் அள்ளலாம் பணம்!

ஜுவல் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், அர்ச்சனைக் கூடை, பழக்கூடை, பவுச் என்று பனை ஓலையில் பல பொருட்களைத் தயாரிக்கும் இந்த சுயஉதவிக் குழுவில் பணியாற்றுபவர்களில் 90%, விஷன் டிரஸ்ட்டைச் சேர்ந்த பெண்கள். நாம் அவர்களைத் தேடிச் சென்றபோது, பனை ஓலையின் பச்சை வாசம் மணம் மயக்க, பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது வேலை. ஜுவல்லரி பாக்ஸ் பின்னிக்கொண்டிருந்தார் பொன்னி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தமிழன் மறந்துவிட்ட பொருட்களில் சேர்ந்துபோன பனைதான், இப்போ எங்களுக்கு சோறு போடுது. முன்னயெல்லாம் பனை ஓலைப் பெட்டியைத்தான் மக்கள் சந்தைக்கு எடுத்துட்டுப் போவாங்க. இப்போ பாலித்தீன் அரக்கனுக்கு அடிமையாகிட்ட அவங்களை மறுபடியும் பனை ஓலைப் பெட்டியைத் தூக்க வைக்க முடியாதுதான். ஆனா, அதுலயே நவீனம் புகுத்தி, வடிவம் மாற்றி கொடுத்துட்டு இருக்கோம். கல்லூரிப் பேராசிரியைகளில் இருந்து மாணவிகள் வரை வாங்கிட்டுப் போறாங்க. நல்ல வரவேற்பு!’’ - செய்து முடித்த ஜுவல் பாக்ஸின் சந்தோஷமும் சேர்ந்துகொண்டது பொன்னியின் குரலில்.  

பனையில் அள்ளலாம் பணம்!

‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் இருப்பதால, அங்கயிருந்துதான் மொத்தமா பனை ஓலைகளை வாங்குறோம். ஒரு கட்டு ஓலை 30 ரூபாய். ஒரு கட்டுக்கு மூணு சின்னப் பொருட்கள் வரை முடையலாம். ஒரு பொருளுக்கு குறைந்தது 60 ரூபாய் லாபம் கிடைக்கும். கலர் கூடைகள் கொஞ்சம் கூடுதலான விலைக்குப் போகும். ஒரு நாளைக்கு நாலு பொருட்களாவது செஞ்சு 250 ரூபாய் வரை ஊதியமா பார்த்திடுவோம்.

விஷன் டிரஸ்ட் சார்பா இந்தக் கலையை பலபேருக்கு இலவசப் பயிற்சியா சொல்லிக் கொடுக்குறோம். வேலூரில் 130 ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு பயிற்சி வழங்கினோம். இப்போ புதுச்சேரியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்கச் சொல்லி கடிதம் வந்திருக்கு. கந்துவட்டியால கஷ்டப்பட்ட நாங்க, எங்க பொழப்புக்கு ஒரு வழி தேடித்தான், இந்தக் குழுவில் சேர்ந்தோம். இன்னிக்கு எங்களாலகூட எத்தனையோ பேரோட வாழ்வாதாரம் உயருதுன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு!’’ என்றபோது, கண்கள் மினுங்கின கிருபாவுக்கு.

பனையில் அள்ளலாம் பணம்!

டிரஸ்ட்டின் நிறுவனரான டாரத்தி, “எங்க நோக்கம்... சுற்றுச்சூழலுக்குப் பாதகமில்லாத பொருட்களைத் தயாரிப்பதும், அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதும்தான். இந்தத் தயாரிப்புப் பொருட்களோட லாபம் இடைத்தரகர்களுக்குப் போயிடக் கூடாதுனு, நுகர்வோர்கிட்ட இவங்களுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்துறோம். இப்போ வெளிநாட்டு ஏற்றுமதி வரை உயர்ந்திருக்காங்க இந்தப் பெண்கள்!’’ - ஏணியின் சந்தோஷத்தைச் சொன்னார் டாரத்தி.

‘‘நகைப்பெட்டியில் இருந்து அர்ச்சனைத்தட்டு வரைக்கும் நாங்க எத்தனையோ பொருட்கள் செஞ்சாலும், `ஒயின் பேக்'தான் ரொம்ப ஃபேமஸ். இதை கோவாவுக்கு அதிகளவுல அனுப்புறோம். அங்க வரும் வெளிநாட்டுப் பயணிகள் இதை விரும்பி வாங்கிட்டுப் போறதா சொன்னாங்க. இப்போ நிறையப் பள்ளிகளில் இருந்து லஞ்ச் பாக்ஸும், திருமணங்களுக்கு தாம்பூலப் பைகளும் ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுப் போறாங்க.

பனையில் அள்ளலாம் பணம்!

நேரங்காலம் பார்க்காம உழைப்போம். சமயத்துல பனை ஓலை கையைக் கீறி அறுத்துவிட்டாலும், இன்னிக்கு இந்தத் கைத்தொழில்தான் எங்க பிள்ளைகளை எல்லாம் படிக்க வைக்குதுங்கிறதால அதையெல்லாம் ஒரு விஷயமாவே நினைக்கிற தில்ல'' என்ற விக்டோரியா,

''எல்லோரும் பாலித்தீன் பொருட்களைத் தவிர்த்து இதுபோன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினா, எங்களைப் போன்ற எத்தனையோ பெண்களோட வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ததா இருக்கும்!’’ - வேண்டுகோளாய் சொன்னார்!

சு.சூர்யாகோமதி   படங்கள்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism