Published:Updated:

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த கண்மணிகள்

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த கண்மணிகள்

Published:Updated:

வாய்ப்பு, வசதிகள் மறுக்கப்படும் இடத்தில் கிடைக்கும் வெற்றி... முக்கியத்துவத்துடன் மரியாதையையும் பெற்றுவிடுகிறது! வறட்சியான பொருளாதாரச் சூழல், அடிப்படை வசதிகளற்ற வீட்டுச் சூழல், அரசுப் பள்ளி எனப் படித்து, சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் பெரும் மதிப்பெண்களுடன் ஜெயித்திருக்கும் வெற்றிப் பெண்கள் இவர்கள்!

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

சலோமியா, 486/500

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி, ஆனைக்கட்டி, கோவை மாவட்டம்

‘‘அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கிப் படிச்சேன். எங்கப்பா என் சின்ன வயசுலயே இறந்துட்டார். என்னையும் என் ரெண்டு தங்கச்சிங்களையும் எங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்க்குறாங்க. இந்த வாழ்க்கையில அவங்க வெச்சிருக்குற ஒரே நம்பிக்கை, ‘நம்ம புள்ளைங்க நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயிருங்க’ங்கிறதுதான். இப்போ என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் முன்மாதிரியா, நான் நல்ல மார்க் எடுத்துட்டேன். எங்கம்மாவோட நம்பிக்கையையும் பலப்படுத்தியிருக்கேன். அதுலயும் சயின்ஸ்ல சென்ட்டம் வாங்கினதுல எங்கம்மாவுக்கு பெருமையும் சந்தோஷமும் தாங்கல. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் எங்க வீட்டுல நாங்க கொண்டாடின பெரிய சந்தோஷம் இதுதான்!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

நிஷா, 494/500

முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி

‘‘அக்கா, நான், தங்கச்சினு வீட்டுல மூணு பிள்ளைங்க. எங்கப்பா கூலித் தொழிலாளி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேலை பார்த்த எடத்துல ஏற்பட்ட விபத்துல சிக்கினதால, அப்பா இப்போ வேலைக்குப் போக முடியாத நிலையில இருக்கார். அம்மாவும், நாங்களும்தான் வீட்டுலயே புளி தோடு எடுக்கும் வேலை பார்க்குறோம். நாங்கள் இப்போ இருக்கும் வீடு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து அமைப்பால் வழங்கப்பட்ட நிதியில் கட்டினது. பத்தாம் வகுப்புக்கான கட்டணம் 385 ரூபாயைக்கூட சிரமப்பட்டுதான் கட்டினோம். இவ்வளவு கஷ்டத்திலும் எங்க மூணு பேருக்கும் ‘படிப்புதான் முக்கியம்’னு சொல்லி சொல்லி வளர்ப்பாங்க. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் எல்லோரும், ‘அரசுப் பள்ளினு தாழ்வுமனப்பான்மை கூடாது. நம்ம தலைவர்கள் எல்லோரும் இந்தப் பள்ளியில் படிச்சவங்கதான்’னு ஊக்கமா பேசுவாங்க. எங்கக்காவைப் போலவே, நானும் இப்போ எங்க ஸ்கூலில் முதல் மாணவியா வந்துட்டேன். அதோட கணிதம், அறிவியல், சமூக அறிவியல்னு மூணு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு வாங்கி மாநில ரேங்கும் வாங்கினதுல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆனந்தக் கண்ணீர்தான்!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

ரஷிகா, 484/500

அரசு உயர்நிலைப்பள்ளி, விக்கிரபாண்டியம், திருவாரூர் மாவட்டம்

‘‘எங்க அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலி வேலை செய்றாங்க. அம்மா வேலைக்குப் போறதால ஸ்கூல் விட்டு வந்ததும் வீடு கூட்டி, பாத்திரம் தேய்ச்சு, சமைச்சு வெச்சுனு எல்லா வேலைகளையும் நான்தான் பார்ப்பேங்கிறதால, சாயங்கால நேரத்துல படிக்க நேரமிருக்காது. விடியற்காலையிலதான் எழுந்து படிப்பேன். பத்தாவது வரைக்கும் படிக்க வைக்கிறதுக்குள்ளயே வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. மாநில ரேங்க் வாங்கணும்னு கஷ்டப்பட்டுப் படிச்சேன். அப்படி வாங்கியிருந்தா ஏதாச்சும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். நல்ல மார்க் எடுத்தும், அதுதான் ஏமாற்றமா இருக்கு!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

சிவசங்கரி, 473/500

புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி, கீழராமசாமியாபுரம், தூத்துக்குடி மாவட்டம்

‘‘அப்பா மளிகைக் கடையில வாரக்கூலியா வேலை பாக்குறாங்க. ஒரு அண்ணன், ஒரு தம்பி எனக்கு. அம்மா வீட்டுல பனைஓலைப் பாய் முடைவாங்க. ஒரு பாய் பின்னிக் கொடுத்தா 8 ரூபாய் கிடைக்கும். ஒருநாளைக்கு 10 பாய்க்கு மேல பின்ன முடியாது. நானும் இப்போ பாய் பின்னப் பழகியிருக்கேன். ஆனாலும், ‘நீ படிம்மா’னு என்னை வேலை செய்ய விடமாட்டாங்க. இருந்தாலும், பச்சை ஓலையை வெட்டிக் கொண்டுவந்ததும் முதல் நாள் முன்பக்கமும், ரெண்டாவது நாள் பின் பக்கமும் வெயில்ல காயவெச்சு, மூணாவதுநாள் தண்ணி தெளிச்சு ஈக்கு குச்சியை வெட்டி ஓலையோட ரெண்டு முனையையும் வெட்டி ஓலையை ஒழுங்குபடுத்தி பாய் பின்னுறதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிக் கொடுப்பேன். பின்னி முடிச்சதும் பாயை சுத்தி கட்டிக்கொடுத்துட்டு படிப்பேன். இந்த லீவுல பாய் பின்னியே `ப்ளஸ் ஒன்' ஃபீஸ் கட்ட, யூனிஃபார்ம் எடுக்க காசு சேர்த்துட்டேன். தவிர, ஆறுல இருந்து பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு டியூஷனும் எடுக்கப்போறேன்!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

இலக்கியா, 472/500

அருள்நெறி உயர்நிலைப்பள்ளி, அம்மன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

‘‘எங்க அப்பா கட்டடத் தொழிலாளி. உயரமான கட்டடத்தில் அந்தரமா தொங்கிட்டு அப்பா வேலை பார்க்கிறதைப் பார்த்தா, கஷ்டமா இருக்கும். ஆனாலும் வீட்டில் வருமானம் உயரலை. எங்க வீட்டுல ரெண்டு பேருமே பெண் குழந்தைங்க. எப்படி கரை சேர்க்கப் போறோம்னு அம்மா கவலைப்பட்டுட்டே இருப்பாங்க. ‘நாம ரெண்டு பேரும் நல்லா படிச்சு வேலைக்குப் போய் அப்பா கஷ்டத்தைத் தீர்க்கணும்’னு நானும் தங்கச்சியும் சொல்லிட்டே இருப்போம். எல்லோரும் ஸ்கூல் முடிஞ்சதும் டியூஷன் போவாங்க. எங்க வீட்டு நிலைமையில அதெல்லாம் முடியாது என்பதால, ஆசிரியர் சொல்றதை கவனிச்சுப் படிப்பேன். இப்போ எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமா இருக்கு. பன்னிரண்டாவதுலயும் இதேபோல நிறைய மார்க் வாங்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கு அப்புறம் என் படிப்பு என்னவாகும் என்பதுதான் கேள்விக்குறியா இருக்கு!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

மணிமேகலை, 474/500

எஸ்.சி.எம்.எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம், சிவகாசி

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே 90% கண் தெரியாது. 10% மட்டுமே மங்கலா தெரியும். கண் பார்வைக் குறைபாட்டோட இருக்கிற என்னை எதுக்குப் படிக்க வைக்கணும்னு எங்கப்பா, அம்மாகூட சண்டை போட, என்னை அஞ்சு வருஷத்துக்கு முன்ன தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க எங்கம்மா. இப்போ எங்கம்மாவும், அக்காவும் தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியா வேலை செய்யுறாங்க. டெய்லரான எங்க மாமா பால்பாண்டி தினமும் என்னை டூ வீலர்ல ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு, கூட்டிட்டு வருவாரு. இப்படி எல்லாரும் என் படிப்புக்காக கஷ்டப்படும்போது, நானும் கஷ்டப்பட்டுப் படிக்கணும்னு படிச்சேன். எங்க பார்வைக் குறைபாடுடையோர் பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் பிரனுபா தேவி, சந்திரன், சாந்தா ரூபி எல்லோரும் என்னை மாநில ரேங்க் எடுக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவாங்க.

மாமா, ரோட்டரி கிளப்பை அணுகி உதவி பெற்று, என்னை மாதிரி பார்வைக் குறைபாடு இருக்குற பிள்ளைங்களுக்கு எழுத்தைப் பெருசா தெரிய வைக்குற சி.சி.டி.வி மௌஸ் வாங்கிக் கொடுத்தாரு. வீட்டு டி.வி-யில அந்தக் கருவியை இணைச்சுட்டு புத்தகத்து மேல மௌஸை நகர்த்தினா, டி.வி. ஸ்க்ரீன்ல ஒவ்வொரு எழுத்தும் பெருசு பெருசா தெரியும். ஆனா, மெதுவாத்தான் படிக்க முடியும். நான் அப்படி தினமும் 4 மணி நேரம் படிப்பேன். எம்மேல என்னை விட நிறைய நம்பிக்கை வெச்சு, என் படிப்புக்காக அப்பாவை விட்டுப் பிரிந்து தீப்பெட்டி ஒட்டி என்னைப் படிக்க வைக்குற அம்மாவுக்கும், அக்காவுக்கும், எங்க மாமாவுக்கும் நன்றி சொல்லணும்!’’

வசதி இல்லை... வாய்ப்பு இல்லை... மார்க்குகளுக்கோ குறைவில்லை!

கிரிஜா, 468/500

 எஸ்.சி.எம்.எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம், சிவகாசி

‘‘குறைப்பிரசவத்தில் பிறந்ததால நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, கண் பார்வையில் கோளாறு எனக்கு. பார்வை மங்கலாத்தான் தெரியும். சிறப்புப் பள்ளியில் என்னைச் சேர்த்தாங்க. பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதே கவனமா உள்வாங்கிக்குவேன். பாடங்களை டேப்ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்து போட்டுக் கேட்பேன். எங்கம்மாவோட தோழி பரிமளா மேரி அத்தைகிட்ட நான் படிச்சதை எல்லாம் சொல்லிக் காட்டுவேன். அவங்கதான் கணக்குப் பாடத்தை எனக்குப் பொறுமையா சொல்லிக்கொடுப்பாங்க. இப்போ மாநில ரேங்க் எடுத்திருக்கிறதுல அப்பா, அம்மா, பள்ளி, பரிமளா அத்தைனு எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ப்ளஸ் டூ, கல்லூரினு தொடர்ந்து நல்ல மதிப்பெண் வாங்கி, நல்ல வேலைக்குப் போய், அவங்களுக்கு எல்லாம் என்னைப் பத்தின சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிரந்தரமா கொடுக்கணும்!’’

கே.குணசீலன், ரா.ராம்குமார், ச.ஜெ.ரவி, இ.கார்த்திகேயன், எம்.கார்த்தி
 படங்கள்: தி.விஜய், ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism