Published:Updated:

கபடி கிராமம்... கலக்கும் பெண்கள்!

கபடி கிராமம்... கலக்கும் பெண்கள்!

ரு கிராமத்தில் பெண்கள் அனைவரும் கபடி வீராங்கனைகளாக இருப்பதுடன், மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் குவித்து, தங்கள் ஊரின் பெயரை உலகுக்குச் சொல்கிறார்கள். அந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு!

கபடி கிராமம்... கலக்கும் பெண்கள்!

சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்த அழகிய கிராமத்தில், ‘கபடி கபடி’ என்று கிரவுண்டில் இடைவிடாது பாடிக்கொண்டே இருக்கின்றன பெண் குரல்கள். தென்னமநாடு கிராமத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை கபடியில் கலக்க வைக்கும் பயிற்சியாளர் குலோத்துங்கனிடம் முதலில் பேசினோம். ‘‘இங்கயிருக்கிற அரசு உதவி பெறும் ஶ்ரீராமவிலாஸ் உயர்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியரா இருக்கேன். இங்க வந்து 23 வருஷம் ஆகுது. தஞ்சாவூர் எப்பவுமே கபடி வீரர்களுக்குப் பெயர் பெற்றது. நானும் முதலில் மாணவர்களுக்குத்தான் பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன். தேசிய அளவில் பதக்கங்கள் ஜெயிச்சிட்டு இருந்தாங்க. எங்க தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி, ‘இப்ப உள்ள பெண்களுக்கு விளையாட்டில் சுத்தமா ஆர்வம் இல்லை. அதனால உடலும் உறுதியா இருப்பதில்லை. அவங்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மேற்படிப்புக்கு  உதவும் வகையிலும் பெண்களுக்கும் கபடிப் பயிற்சி கொடுங்க’னு யோசனை சொன்னாங்க.

ஆரம்பத்தில், மிகச் சில மாணவிகளே கபடி விளையாட முன் வந்தாங்க. அதையேகூட ஊரில் யாரும் விரும்பல. ‘இன்னொருத்தர் வீட்டுக்குக் கட்டிக் கொடுக்கிற புள்ளைக்கு, கபடி ஆடி கை, கால் உடைஞ்சா, அவங்க வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிடும்’னு எல்லாம் சொல்லி, பெற்றோர் அனுமதி மறுத்தாங்க. அவங்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி, புரிய வெச்சோம். அந்த வெகு சில மாணவிகளுக்கு கடுமையான பயிற்சி கொடுத்தேன். அவங்க தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வாங்கினாங்க. அதைப் பார்த்து மற்ற பெற்றோர்களும் சம்மதிக்க... பள்ளி, கல்லூரி மாணவிகள்னு இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கபடி வீராங்கனைகள் உருவாக ஆரம்பிச்சாங்க. மாநில, தேசியப் போட்டிகளில் வென்று, இந்திய அளவில் பிரபலமானாங்க!’’ என்றார் பெருமிதத்துடன்.

கபடி கிராமம்... கலக்கும் பெண்கள்!

தேசிய அளவு கபடிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற காவியா மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற திவ்யா இருவரும், ‘‘நாங்க கிராமத்துப் பொண்ணுங்கங்கிறதால, ஆரம்பத்துல கால்சட்டை போட்டு, கூட்டத்துக்கு நடுவுல கபடியாடத் தயக்கமா இருக்கும். ஆனா, எங்க ஊர் சீனியர் அக்காக்கள் எல்லாம் விளையாடுறதைப் பார்த்துட்டு நாங்களும் ஆர்வமா கிரவுண்டில் இறங்கிட்டோம். எங்க ஊர்ல இப்போ பல தேசிய கபடி வீராங்கனைகள் இருக்கோம்!’’ என்றார்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தியபடி.

‘‘என் பொண்ணு ரொம்ப சோம்பலா இருப்பா. ஆனா, கபடி விளையாட ஆரம்பிச்சதும் அவ களைப்பெல்லாம் காணாமப் போயிருச்சு. அந்த வகையில எங்க ஊருல எல்லா பொண்ணுங்களுமே ஆரோக்கியமா, திடகாத்திரமா இருக்காங்க!’’ என்று தமிழரசி சந்தோஷமாகச் சொல்ல,

‘‘எங்க ஊர்ப் பொண்ணுங்க வெளியூர் போட்டிகளுக்குப் போகும்போது, நாங்களும் போவோம். பல் உடைஞ்சு, காலில் அடிபட்டுனு சிரமப்பட்டாலும் இறுதியா பதக்கமும் சிரிப்புமாதான் வருவாங்க. அதுமட்டுமில்லாம, கபடித் திறமையாலேயே பலரும் பைசா செலவில்லாம ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரிப் படிப்பு படிச்சுட்டு இருக்காங்க!’’ என்றார் ஊர்க்காரர் நாராயணசாமி உற்சாகமாக!

கிரவுண்டில் காற்றைப் போல நிரந்தரமாகிக் கிடக்கிறது ‘கபடி’ பாட்டு!

கட்டுரை, படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு