Published:Updated:

57 வயதினிலே!

57 வயதினிலே!

57 வயதினிலே!

57 வயதினிலே!

Published:Updated:

மீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘36 வயதினிலே’. இந்தப் படத்துக்கு இதுதான் டைட்டிலா, இல்லை ‘வாடி ராசாத்தி’ என்பது டைட் டிலா என குழம்பும் அளவுக்கு ஹிட் அடித்துள்ளது... படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாடி ராசாத்தி’ பாடல். நெருக்கம் தரும் குரல், உத்வேகம் தரும் வரிகள் என ஒரு பாடல் கிடைத்தால், அதுவும் பெண்களுக்கான பாடலாக இருந்தால் முணுமுணுக்கத்தானே செய்வோம்?! சந்தோஷ் நாரா யணன் இசையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில், லலிதா விஜய குமார் பாடியிருக்கும் இந்தப் பாடல், அப்படித்தான் நம் இதழ்களில் கசிந்துகொண்டே இருக்கிறது!

57 வயதினிலே!

‘தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும், திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டிப் பூட்டி வைக்கும்’ என்று பாடிக் காட்டும் லலிதா, பாடகர் பிரதீப்பின் அம்மா. இவருடைய மருமகள் கல்யாணியும் பின்னணிப் பாடகிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஜோதிகா, ‘36 வயதினிலே’னு மறுபடியும் நடிக்க வந்தார். நான் என்னோட 57-வது வயசுலதான் வெளியவே வந்திருக்கேன்!’’

- வாய்கொள்ளா சிரிப்புடன் ஆரம்பிக்கிறார் லலிதா.

‘‘என் அப்பாவோட ஊக்கத்தால திருவையாறு இசைக் கல்லூரியில இசை கத்துக்கிட்டேன். இப்போ சென்னை, சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் இசை ஆசிரியை. மாநில அரசோட ‘ராதாகிருஷ்ணன் விருதை' இசை ஆசிரியைப் பணிக்காக வாங்கியிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு என் கணவரோட ஒத்துழைப்புதான் என்னை இசையோட தொடர்ந்து பயணிக்க வெச்சது.

25 வருஷத்துக்கு அப்புறம் 2004-ல் தொலைதூரக் கல்வி மூலமா எம்.ஏ., மியூசிக் படிச்சு முதல் வகுப்புல பாஸ் பண்ணேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் பிரதீப் ப்ளஸ் டூ படிக்கும்போதே எனக்கு குருவா இருந்து, என்னோட குறை நிறைகளை சுட்டிக்காட்டுவான். மகளுக்கும் இசையில ஆர்வம் இருக்கு. என்னதான் வீட்ல நாங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் இசையைப் பத்தி பேசிக்கிட்டாலும்... பாடிக்கிட்டாலும், சினிமா பாடல் பாடணும்னு நான் ஒருநாளும் நினைக்கவே இல்ல!’’ என்று இயல்பாக பேசியவர், திரையுலகப் பதிவு குறித்து தொடர்ந்தார்.

‘‘இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்க எல்லாருக்குமே குடும்ப நண்பர். எப்பவுமே ஏதாவது வித்தியாசமா முயற்சி பண்ணிட்டே இருப்பார். திடீர்னு ஒருநாள், ‘ஆன்டி... நீங்க ஒரு பாட்டுப் பாடணும்!’னு சொல்லி பாட வெச்சதுதான் ‘வாடி ராசாத்தி!’. அதோட சர்ப்ரைஸ் நிக்கல. ‘நீங்க நடிக்கவும் செய்யணுமே!’னு சொன்னார். ஏதோ ஸ்டுடியோவுல பாடுற மாதிரி இருக்கும்னு பார்த்தா, கொரியோகிராஃபர் எல்லாம் இருந்தார். ‘அய்யோ... நான் மாட்டேன்!’னு சொன்னா, ‘ஜோதிகாவைப் பாருங்க... எப்படி பெர்ஃபார்மன்ஸ் பண்றாங்க’ன்னு சொல்லி, ஜோதிகா போல நடிக்கணும்னு சொன்னாங்க. பாட்டைப் படத்துல பார்த்தப்போ, எனக்கு வெட்கமும் சந்தோஷமும் கொள்ளல. சினிமாவுல பாடுவேன்னு நான் கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை. இப்போ எல்லாரும் கொண்டாடுறாங்க!’’

- ஆயுளின் பெரிய பாராட்டின் பரவசம் அவர் முகத்தில்!

‘‘வர்ற ஆகஸ்ட் மாசம் ரிட்டையர் ஆகப் போறேன். வாய்ப்பு கிடைச்சா, சினிமாவில் தொடர்ந்து கலக்குவோம். என்ன சொல்றீங்க?!’’

- ‘ராசாத்தி’ ரெடியாக இருக்கிறார்!

‘‘வாடி வாலாட்டி!’’

‘‘சிதம்பரம்தான் என் சொந்த ஊரு. வீட்டில் அப்பா, அம்மா, மனைவினு எல்லோரும் வழக்கறிஞர்கள். நான் பி.இ., சிவில் முடிச்சி, லா படிச்சு, இப்போ பாடலாசிரியரா நிக்கிறேன்!’’ எனும் விவேக் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் அறிமுகமாகி, இப்போது ‘இறைவி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பிஸி. ‘ராசாத்தி’ பற்றிப் பேசினார் விவேக்...

57 வயதினிலே!

‘‘பூவென பூட்டி வைக்கப்பட்ட பெண்கள், புயலென மாறினால் என்ன ஆகும் என்பதுதான் ‘36 வயதினிலே’. பாடல் வரிகள் படத்தை பிரதிபலிச்சாதான் அது நல்ல பாடலா இருக்க முடியும். ‘வாடி ராசாத்தி’, ‘ஹேப்பி’, ‘போகிறேன்’னு இந்தப் படத்தில் மூன்று பாடல்களையுமே நான் அப்படித்தான் எழுதினேன். ஜோதிகா மேடமோட ‘கம் பேக்’குக்கு யோசிச்ச வரிதான் ‘வாடி ராசாத்தி’. பொதுவா பெண்களை ‘வாடி’னு சொன்னா தப்பா இருக்கும். அதுவே ‘ராசாத்தி’னு சேர்த்ததால அது செல்லமா ஆயிருச்சு. பொண்ணுங்களை ‘வாலைச் சுருட்டிகிட்டு இரு’னு சொல்லி அடக்கக் கூடாதுனு சொல்லத்தான் ‘வாடி வாலாட்டி’ங்கிற வரி. ஃபினிஷிங் சாங்கா வைக்கலாம்னு நினைச்சு எழுதின பாட்டு, டைட்டில் சாங்கா மாறினதுக்குக் காரணம் ரசிகர்கள்கிட்ட கிடைச்ச வரவேற்புதான்.

‘போகிறேன்’ பாட்டுல ‘ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு, மீசைகள் இல்லா கனவுகள் கண்டு’னு ஒரு அடி வரும். அப்பா, கணவன், மகன்னு ஆண்களைச் சார்ந்தே வளர்க்கப்படும் பெண்களுடைய கனவுகளுக்குக் கூட, ஆண்மைத்தன்மை இல்லாமல் செய்துவிட்ட சமுதாயத்தை சாடுவதற்காக எழுதப்பட்ட வரி அது. ‘ஒரு ஆணா இருந்து பெண்களோட உணர்ச்சிகளை இந்த அளவு வெளிப்படுத்தியிருப்பது பெரிய விஷயம். அந்த அடிகள் எங்க அடி மனசுக்குள்ள ஏதோ ஒரு எழுச்சியை ஏற்படுத்துது’னு நிறையப் பெண்கள் சொன் னாங்க. எழுத்து மூலமா ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரணும்னு நினைச்சு இந்தத் துறைக்கு வந்த எனக்கு இதைவிட பெரிய பாராட்டு வேற என்ன இருக்க முடியும்?!’' என்று பூரிக்கிறார் விவேக். இவருடைய அம்மா விமலா உயர் நீதிமன்ற நீதிபதி. 

‘‘பெண்கள் மீதான என் மரியாதைக்கு ஆதிப்புள்ளி அம்மாதான்!’’ - சொல்லும்போது இமைகள் மூடித் திறக்கிறார் விவேக்!

பொன்.விமலா, க.தனலட்சுமி படங்கள்:  ப.சரவணகுமார், பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism