
சபரிமலையான் பக்தர்கள், ‘சாமியேயேயே சரணமய்யப்பா!’ என்று எழுப்பும் ஒலிக்கு, காரணக் கதை உண்டு!
ஐயப்பனின் அவதார நோக்கம் முடிவடைந்தபோது, அவர் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனிடம், `‘எனக்கு சபரிமலை மேல் ஓர் ஆலயம் எழுப்பு’' என்று அருளி, ஏதாவது இடர் ஏற்பட்டால், இந்த க்ஷுரிகாயுதம் மன்னனுக்கு உதவும் என்று தனது ஆயுதத்தை மன்னனது உடலில் குப்தமாகப் பொருத்தி, ஆலயத்துக்கான இடத்தை அம்பெய்து காட்டிவிட்டு மறைந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருப்பணியைத் துவங்கினான் பந்தள மன்னன். இந்திரன், ‘நமக்குச் சொந்தமான ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் பந்தள மன்னனுக்குக் கொடுத்துவிடுவார் பூதநாதன், அதற்கு முன்பே இந்த மன்னனை அழித்துவிட வேண்டும்’ என்று பொறாமை கொண்டு, வேடுவன் உருவில் வந்தான். `‘மன்னா! எனக்குச் சொந்தமான வனத்தில் இருந்து வெளியேறு’' என்றான். ராஜசேகர பாண்டியனோ, `‘ஹரிஹரசுதனாரின் ஆணைப்படி அவருக்கு ஆலயம் கட்டும் இந்தத் திருப்பணியில், நீங்களும் இணையுங்கள் வேடுவரே!’' என்று அழைக்க, சினம்கொண்ட இந்திரன், தனது வஜ்ராயுதத்தை ஏவினான்.
மன்னன் செய்வதறியாமல் கைகளை வானோக்கி உயர்த்திக் கூப்பி, `‘சாமியேயேயே சரணமய்யப்பா’' என்று பெரும் குரலெழுப்பினான். அப்போது அவனது உடலில் மணிகண்டனால் ஒளித்து வைக்கப்பட்ட க்ஷுரிகாயுதம், ‘விர்’ரெனப் புறப்பட்டு வஜ்ராயுதத்தை தவிடுபொடியாக்கி, இந்திரனை நோக்கி விரைந்தது. இந்திரன் தப்பிக்க பிரம்மன், உமாபதி, திருமால் என்று அனைவரிடமும் அடைக்கலத்துக்கு ஓடி, இறுதியாக பூதநாதனிடமே சரணடந்தான். பூதநாதனோ, `‘ஆயுதத்தை உத்வாஸனம் செய்யும் சக்தி மன்னனுக்கே’' என்று கூறிவிட்டார்.
வஜ்ராயுதம் ஏவப்பட்டதிலிருந்து நடந்த எதையும் உணராத மன்னன், தன்னை மறந்த நிலையில் ‘சாமியேயேயே சரணமய்யப்பா...’ என்று விளித்துக்கொண்டிருக்க, இந்திரன் தனது சுய உருவில் மன்னன் கால்களில் விழுந்து வணங்கி, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். பந்தள மன்னனும் பூத நாதனை மனதில் வேண்ட, அந்த ஆயுதம் சாந்தமடைந்து மீண்டும் மன்னனின் உடலில் பொருந்திக்கொண்டது. இந்திரன், தேவசிற்பியான விஸ்வகர்மாவை மன்னன் கட்டும் சபரிமலைக் கோயில் திருப்பணிக்கு உடனிருந்து உதவும்படி பணித்து மறைந்தான்!
அன்று பந்தள மன்னன் தன்னைக் காப்பாற்ற வேண்டி தீனார்த்தியாய் கூவி அழைத்த ஐயனின் சரணங்களையே, இன்றும் பக்தர்கள் கூவி நலம் பல பெறு கிறார்கள்.
- சி.ராஜேஸ்வரி, திருப்பதி

‘உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா முடமான மகனை நடமாட வைத்தாய் கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய்...’
- மாதா கோயில்கள் தோறும் ஒலிக்கும் இந்தப் பாடலை நம்மில் பலரும் கேட்டிருப்போம். மனம் நெகிழ வைக்கும் இந்தப் பாடலைப் போன்ற செவிகளுக்கு இனிமையான பாடல்கள், மே மாதத்தில் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனித்திருப்பீர்கள். காரணம், கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மே மாதம் வணக்க மாதமாகவும், மாதாவின் மாதமாகவும் நினைவுகூரப்படுகிறது.
‘‘நமக்கொரு தாய் இருக்கின்றார், நம்மை என்றும் காக்கின்றார்” என்று பாடும் மாதமிது. “அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார் (லூக் 1:28). இம்மாதம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது வீடுகளில் ஒன்றுகூடி ஜெபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக, குழுக்களாக கூடி ஜெபமாலை சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். ஆனால், மாதாவின் வாழ்வை வாசிப்போர் மனதில் தெளிவாக ஒன்று புலப்படும். அது... மாதா அதிகம் பேசியதில்லை என்பது. அவள் பேசாமலே சாதித்த பெருமைக்குரியவள் என்று கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிறது. மாதா பரிசுத்த ஆவியின் அருட்பொழிவை முழுமையாகப் பெற்று இயேசுவை தன் உதிரத்தில் தாங்கி தங்களுக்கு ஆலயமாய் இருக்கின்றார் என்கிறார்கள். மேலும் முக்கியமாக, இயேசுவின் பிரசன்னமும் பரிசுத்த ஆவியின் நிறைவும் தேவ அன்பை அவரிடம் ஊற்றுவதாக கூறுகின்றனர். ‘‘நீ எனக்கு மட்டும் தாயல்ல, இந்த உலகத்துக்கே இனி நீதான் அம்மா’’ என்று இறைமகன் இயேசுவே உரிமை சாசனம் எழுதுகிறார்.
எல்லாவற்றையுமே மனதுக்குள் இருத்தி தியானித்த மரியாளைப் பற்றி ஆற அமர சிந்தித்தால் அவளது தெய்விகப் பெருமைகள் ஒவ்வொன்றாய் புலப்படும். மரியன்னையை அறியும் ஞானத்துக்காக நாம் எங்கும் தேடியலைய வேண்டாம். இருக்கிற இடத்திலேயே நேரம் ஒதுக்கி சிந்திப்போம். அதற்காகத்தான் திருச்சபை இந்த மே மாதத்தை ஒதுக்கி தியானிக்கப் பணிக்கிறது என்று கத்தோலிக்க கிறிஸ்தவம் கூறுகிறது.
எனவேதான் மே மாதத்தில் அன்னை மரியாளைப் போற்றி வணங்குகின்றனர். மேலும் இந்த நாட்களில் நேர்த்திக்கடனாக இனிப்புகள், தின்பண்டங்கள், பழங்கள் என தங்களால் இயன்றவற்றை ஆலயங்களில் வழங்குகின்றனர்.
- எம்.மரிய பெல்சின்

இஸ்லாமில் இருக்கும் நற்கொள்கைகளை, கடவுள் சொன்ன வார்த்தைகளை எல்லா இடத்தில் இருக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த சுமார் 400 வருடங்களுக்கு முன்பு ஷேக் அப்துல் காதிர் ஜிலானி உத்தரவின் பேரில் அவருடைய சிஷ்யர் ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி என்ற மகான் நடைபயணம் மேற்கொண்டார். அவர் வந்து சேர்ந்த இடம், சென்னை. இங்கேயே அவர் உயிர் பிரிந்தார். இந்த மகானின் உடல் இருக்கும் இடம்தான், சென்னை மவுன்ட்ரோடு தர்கா.
இந்த தர்கா பற்றி பேசும்போது நிறைய சம்பவங்களை பகிர்ந்துகொண்டார், தர்காவின் பரம்பரை டிரஸ்டி செய்யது மன்சூர்தின். அவற்றில் குறிப்பாக, ``ஆங்கிலேயர் ஆட்சியில், புதுப்பேட்டை மற்றும் மவுன்ட்ரோடுக்கு இடையில் ஒரு பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. ‘இது ஒரு மகானின் உடல் அடக்கம் செய்திருக்கும் புனித இடம்’ என்று பலர் கூறியும் கேட்காத ஆங்கிலேய அரசு, தர்காவை இடிக்க ஆட்கள் அனுப்பியது. மகான் இருக்கும் இடத்தை இடிக்க ஆரம்பித்ததும், அதில் இருந்து ரத்தம் வந்து, அந்த ரத்தம் இடித்தவர்கள் மேல் பட்டு அவர்கள் இறந்துபோக... அதன் பின், அந்தத் திட்டத்தை கைவிட்டது ஆங்கிலேய அரசு.
சுதந்திரம் வாங்கிய பின், சென்னையில் மழையினால் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மின்வாரியம் சென்னை முழுக்க மின்சாரத்தை துண்டித்தது. ஆனால், இந்த தர்காவில், மகானின் தலைபகுதிக்கு மேல் இருந்த பல்ப் மட்டும் அணையாமல் எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்த அனைவரும் வியந்தனர்.
மதம் மற்றும் மனித வேறுபாடுகள் எல்லாம் இந்த தர்காவுக்குக் கிடையாது. யாருக்கு குழந்தை பாக்கியம் இல்லையோ அவர்கள் இந்த தர்காவுக்கு வந்து மகானிடம் கேட்டுக்
கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், மனநிலை பிரச்னை நீங்க, தொழில் விருத்தி அடைய நினைப்பவர்களுக்கு இங்கு வருவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்'' என்று வியப்பான பல தகவல்களை சொல்கிறார், செய்யது மன்சூர்தின்.
வேண்டியது நிறைவேறியவர்கள், எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வியாழன் மாலை ஏதாவது ஒரு இனிப்பு மற்றும் பூக்களுடன் வந்து வழிபடலாம். இந்த தர்காவுக்கு தொடர்ந்து வருபவர்களுள் ஒருவர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அரசியல் தலைவர்களின் வருகையும் இங்கு அதிகம்!
- கே.அபிநயா