Published:Updated:

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

நள்ளிரவு வானவில்!

Published:Updated:

முன்கதை ‘சுருக்’!

இது இரண்டு ட்ராக் கதை. முதல் ட்ராக் சென்னை. இரண்டாவது ட்ராக் பெங்களூரு.

முதல் ட்ராக் (சென்னை)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அபிராமி, சந்திரசூடன் தம்பதியரின் ஒரே மகளான மீராவை டெல்லியில் இருக்கும் சாஃப்ட்வேர் கம்பெனியில் அதிகாரியாக பணியாற்றும் ஞானேஷ் என்கிற இளைஞன் பெண் பார்க்க வர இருக்கும் நேரத்தில், அவனுடைய அஸ்தி (சாம்பல்) ஒரு மண்சட்டியில் மீராவின் வீட்டு மொட்டை மாடியில் வைக்கப்பட்டு, எல்லோருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஞானேஷின் அப்பா... ரிடையர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதி, ஆடிப்போகிறார். ஞானேஷ் கொலை செய்யப்பட்டானா... கொலை செய்யப்பட்டிருந்தால் என்ன காரணம்..? விசாரணையை ஆரம்பிக்கிறது, போலீஸ். இதில் மீராவுக்கு பிரணவ் என்கிற காதலன் இருப்பது தெரிய வருகிறது. அதேபோல், ஞானேஷ் குறிப்பிட்ட நாளில் வருவதற்குப் பதிலாக இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்து ஒரு ஹைடெக் மீட்டிங்கில் கலந்துகொண்டிருப்பதும் தெரிய வருகிறது. போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் உண்மைகளைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அடையாறு ‘ஸ்கை வ்யூ’ ஹோட்டல் மேனேஜர் புவனேந்திரன், போலீஸ் பிடியில் சிக்குகிறார்.

நள்ளிரவு வானவில்!

இரண்டாவது ட்ராக் (பெங்களூரு)

பெங்களூரு சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி ரிதன்யா. கணவன் ஹரிகிருஷ்ணன், துபாயில் வேலை பார்க்கிறான். மகன் (5 வயது) அபிநய், ஊட்டி கான்வென்ட்டில் படிக்கிறான். துணிச்சலான பெண்ணான ரிதன்யாவிடம் ‘நள்ளிரவு வானவில்’ என்கிற ஒரு என்கொயரி ஆபரேஷனை ஒப்படைக்கிறார் மேலதிகாரியான டி.எஸ்.பி. நம்பெருமாள். இது ஒரு விபரீதமான ‘கோட்வேர்ட்’. விசாரணைக்காக பெங்களூரில் இருக்கும் ‘அல்டிமேட் வொண்டர்ஸ்’ என்கிற ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு போய், அதன் எம்.டி -யான யோகானந்த், அவருடைய மகன் ரூபேஷ் ஆகியோரை ரிதன்யா அணுக, அவர்கள் அவளை மிரட்டி அனுப்பி வைக்கிறார்கள். அதேநேரத்தில் ‘நள்ளிரவு வானவில்’ விஷயத்தில் தீவிரம் காட்டிய பெங்களூரு எஸ்.பி. சந்திரகௌடா மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கொலை செய்யப்பட, டி.எஸ்.பி. நம்பெருமாள், விசாரணையில் ஈடுபட வேண்டாம் என்று ரிதன்யாவை அனுப்பிவிடுகிறார் (யோகானந்துக்கு ஆதரவாக செயல்படுபவர்  டி.எஸ்.பி. நம்பெருமாள் என்பது ரிதன்யாவுக்குத் தெரியாது).

இந்த நிலைமையில் ‘திவாகர் - பூங்கொடி’ என்ற பெயர்களில் தம்பதி போல் வந்த இருவர் ரிதன்யாவை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து ‘நள்ளிரவு வானவில்’ பற்றி கேட்டு மிரட்டுகிறார்கள் அந்த சமயம் துபாயிலிருந்து கணவன் ஹரிகிருஷ்ணன் இந்தியாவுக்கு வரப்போவதாக போனில் தெரிவிக்கிறான். ஊட்டியில் படிக்கும் குழந்தை அபிநய்யின் உடல்நிலை சரியில்லையென்று கான்வென்ட் பிரின்சிபால் போன் செய்து தகவல் சொல்கிறார். ரிதன்யாவை ‘நள்ளிரவு வானவில்’லுக்காக மீண்டும் யோகானந்திடம் அனுப்ப முடிவு செய்கிறார்கள் திவாகரும் பூங்கொடியும்.

இனி...

ஒட்டுமொத்த உடம்பும் உறைந்து போன தினுசில் ரிதன்யா, திவாகரை ஒரு அனல் பார்வை பார்த்தாள்.

“எ... எ... என்னது..! அல்டிமேட் வொண்டர்ஸ் ஐ.டி. கம்பெனியின் எம்.டி. யோகானந்தை மறுபடியும் போய்ப் பார்த்து ‘நள்ளிரவு வானவில்’ பற்றி பேசணுமா?”

“ஆமா...”

“உனக்கென்ன தலையில் மூளை இருக்கா... இல்ல, அது இருக்க வேண்டிய இடத்துல வெறும் சதைதான் இருக்கா..?”

“என்ன சொன்னே..?” - திவாகர் விநாடிக்கும் குறைவான நேரத்தில் தன் இடதுகையை ரிதன்யாவின் முகத்தை நோக்கி வீச, அது சவுக்காய் சுழன்று அவளுடைய வலது கன்னத்தை நொறுக்கியது. பின் மண்டைக்குள் பிரளயம். வாய்க்குள் ரத்தம் புளித்தது.

திவாகர் தன் வலதுகையின் சுட்டுவிரலை உயர்த்தினான். “இதோ பார்..! இனியொரு தடவை நீ இது மாதிரி சத்தம் போட்டுப் பேசக்கூடாது. உன்னோட வாயிலிருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும் பயந்து பயந்து வெளியே வரணும். நாங்க என்ன சொல்றோமோ அதைக் கேட்டு அட்சரம் பிசகாம நடக்கணும். அதை விட்டுட்டு உன்னோட போலீஸ் புத்தியைக் காட்டினே... அப்புறம் என்னையும், பூங்கொடியையும் உன்னால சமாளிக்க முடியாது. சாம்பிளுக்கு ஒண்ணைக் காட்டட்டுமா?”

- சொன்னவன், பூங்கொடியைப் பார்த்து கண்ணசைக்க, அறைக்குள் போய் தன் சூட்கேஸைத் திறந்து, சிறிய குப்பி ஒன்றை எடுத்து வந்து திவாகரிடம் கொடுத்தாள்.

“இது என்னன்னு தெரியுதா?”

தன்னுடைய கன்னத்தில் விழுந்த அறையில் பொறிகலங்கிப் போயிருந்த ரிதன்யா மிரட்சியோடு ‘தெரியாது’ என்பது போல் தலையாட்டினாள். விழிகளில் நிரம்பியிருந்த நீர் சிதறியது.

திவாகர் நீல நிறத்தோடு பளபளப்பாக இருந்த அந்தக் குப்பியை ரிதன்யாவின் முகத்துக்கு முன்பாக நீட்டியபடியே சொன்னான்.

“இதுல இருக்கிறது ஒரு வகையான ‘ஐ ட்ராப்ஸ்”. இது சாதாரண ‘ஐ ட்ராப்ஸ்’ கிடையாது. தாதா டைப் மெடிசன். வெளிநாட்டில் மட்டுமே கிடைக்கிற அபூர்வமான ஜாதி. . இதிலிருந்து ஒரே ஒரு சொட்டு மட்டும் கண்ணுல விட்டா போதும், அந்தக் கண் அடுத்த 24 மணி நேரத்துக்கு தெரியாது. இருக்கிற இன்னொரு கண்ணால மட்டும்தான் பார்க்க முடியும். டெம்பரரி ப்ளைண்ட்னஸ். உன்னோட இடது கண்ணுக்கு போட்டு டெஸ்ட் பண்ணிப் பார்க்்கலாமா? இது ஒரு த்ரில் எக்ஸ்பீரியன்ஸ். என்ஜாய் பண்றியா?”

ரிதன்யா, பயத்தில் முகம் வெளுத்து பின்வாங்கினாள்... “வே... வேண்டாம்!”

“அது மாதிரியான விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்னு நீ நினைச்சா, நாங்க எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமே ஒத்துழைப்பு கொடுக்கணும். என்ன புரியுதா?”

“பு... பு... புரியுது... ஆனா, நான் என்ன சொல்ல வர்றேன்னா...?”

“நீ என்ன சொல்ல வர்றேனு எங்களுக்குப் புரியாம இல்லை. நீ அந்த அல்டிமேட் வொண்டர்ஸ் ஐ.டி. கம்பெனியின் எம்.டி-யான யோகானந்த்கிட்ட ஏற்கெனவே ‘நள்ளிரவு வானவில்’ பற்றின ஒரு என்கொயரியை டிபார்ட்மென்ட் மூலமா நடத்தி முடிச்சுட்டே. அந்த என்கொயரியை நீ நடத்திட்டு இருக்கும்போதே சில அசம்பாவிதங்கள்  நடந்தன. அதனால உன்னோட டி.எஸ்.பி. மேற்கொண்டு இந்த என்கொயரியை நடத்த வேண்டாம்... ட்ராப் பண்ணிடுன்னு சொல்லிட்டார். இதைத்தானே சொல்ல வர்றே?”

“ஆமா..!”

“இன்னிக்கு நீ அந்த யோகானந்தையும் அவரோட மகன் ரூபேஷையும் மீட் பண்ணப் போறது அவங்களோட கம்பெனியில் இல்லை.”

“பி... பி... பின்னே..?”

“ஒய்ட் ஃபீல்டில் ‘ப்ளஸன்ட் ஓஸன்’னு ஒரு ஸ்டார் ஹோட்டல் இருக்கு தெரியுமா?”

“ம்... கே... கே... கேள்விப்பட்டிருக்கேன்.”

“அங்கதான் யோகானந்தும் அவரோட சன் ரூபேஷும் நேத்து ராத்திரியிலிருந்து ஸ்டே பண்ணியிருக்காங்க. இன்னும் ரெண்டு நாளைக்கு அதே ஹோட்டலில்தான் இருக்கப் போறாங்க.”

“எதுக்காக அங்கே..?”

“பொதுவா இதுமாதிரியான பெரிய புள்ளிகள் வீட்டை விட்டுட்டு ஸ்டார் ஹோட்டல்களில் போய் தங்கறாங்கன்னா ஏதோ தப்பு பண்ணப்போறாங்கன்னு அர்த்தம்.”

“என்ன தப்பு?”

“சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரியா இருக்கிற உனக்கு அது எதுமாதிரியான தப்புன்னு தெரிஞ்சிருக்குமே?”

“நிஜமாவே எனக்குத் தெரியாது.”

“நீ சொல்றதை என்னால நம்ப முடியலை. இருந்தாலும் சொல்றேன் கேட்டுக்கோ... இந்திய தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி ஐ.டி. சம்பந்தப்பட்ட சில நுணுக்கங்களை மற்ற நாடுகளின் தொழில் அதிபர்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது. ஆனா, நம்ம நாட்டுலதான் பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... இல்லாதவனுக்கு ஒரு சட்டமாச்சே! ஐ.டி. துறையில் நம்ம நாட்டின் வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளின் தொழில் அதிபர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒரே ராத்திரியில் சம்பாதிச்சுடறாங்க யோகானந்த் போன்ற ஆட்கள்! வாரத்துக்கு ஒரு தடவை பொள்ளாச்சியில் சந்தை கூடற மாதிரி இந்த ஐ.டி. கம்பெனி புள்ளிகள் மாசத்துல ஒரு தடவையாவது ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூடி கோடிகளில் குளியல் போட்டுடுவாங்க.”

ரிதன்யா கலவரமானாள்.

‘‘அ... அ... அந்த இடத்துக்கு நான் போய் ‘நள்ளிரவு வானவில்’ விஷயமா மீட் பண்றதால என்ன பிரயோஜனம்?”

``நள்ளிரவு வானவில் உடனே கிடைக்கும்!”

“எ... எ... எப்படி..?”

‘’உன் கையில மந்திரக்கோல் இருக்குமே!”

``மந்திரக்கோலா?”

‘’ஆமா..! நீ அவரைச் சந்திக்க போறதுக்கு முன்னாடி நாங்க அந்த மந்திரக்கோலை உன் கையில கொடுப்போம்.”

சென்னை.

போலீஸ் கமிஷனர் அலுவலகம். காலை பத்து மணி.

நள்ளிரவு வானவில்!

கமிஷனர் ராஜகணேஷ், தனக்கு முன்பாக உட்கார்ந்திருந்த மீரா, சந்திரசூடன், அபிராமி, பார்த்தசாரதி ஆகியோரை மாறி மாறி பார்த்தபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

``ஞானேஷோட விவகாரத்தில் இப்போ ஒரு சில விஷயங்கள் வெளியே வந்திருக்கு. அவர் சென்னை வந்து அவ ரோட ஃப்ரெண்ட் மணிகண்டன் வீட்ல தங்கியிருந்தபோது ஒரு ‘ஹை-டெக் மீட்டிங்கில் கலந்துகொள்வதற்காக அடையாறில் இருக்கிற ‘ஸ்கை வ்யூ’ ஹோட்டலுக்குப் போயிருக்கார். அங்க யார் யாரைச் சந்திக்கப் போனார்... என்ன விஷயத்துக்காக போனார்னு கண்டுபிடிக்கிறதுக்காக நான் அந்த ஹோட்டலுக்கு நேத்து சாயந்தரம் ஏழு மணி சுமாருக்குப் போயிருந்தேன். ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் ஞானேஷோட நடமாட்டம் பதிவாகியிருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ஹோட்டலின் மானேஜர் புவனேந்திரன் மூலமா முயற்சி செய்தபோது சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிய வந்தன. யாரோ புவனேந்திரனுக்கு பத்து லட்ச ரூபாய் குடுத்து சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த ஞானேஷ் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை டெலிட் பண்ண வெச்சிருக்காங்க. அதை ‘ஸ்மெல்’ பண்ணிட்ட கேமிரா யூனிட்டின் ஆபரேட்டர் கிறிஸ்டோபரையும் கொலை செய்யும் எண்ணத்தோடு தாக்கியிருக்காங்க. அதிர்ஷ்டவசமா காயங்களோடு தப்பிச்சுட் டார். புவனேந்திரனை மடக்கி அவரோட ரூம்ல வெச்சு விசாரணை பண்ணிட்டு இருக்கும்போது பத்து பூஜ்யம் செல்போன் எண் கொண்ட அந்த நபரிடமிருந்து புவனேந்திரனுக்கு போன். ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசும்படியா சொன்னேன். அவரும் ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசினார். அந்த கான்வர்சேஷனை அப்படியே ரெக்கார்ட் பண்ணிட்டு வந்திருக்கேன். அதை இப்போ போட்டுக் காட்றேன். வாய்ஸை அப்சர்வ் பண்ணுங்க. அது உங்களுக்கு பரிச்சயமான குரலா இருக்கலாம்...”

- கமிஷனர் தன்னுடைய செல்போனை ‘ஆன்’ செய்தார். எல்லோரும் அதிர்ச்சி ஈஷிக்கொண்ட முகங்களோடு அந்த செல்போனையே பார்த்துக்கொண்டிருக்க... உரையாடல் ஆரம்பமாயிற்று.

“என்ன புவன்... போலீஸ் கமிஷனர் உனக்கு முன்னாடி உட்கார்ந்திட்டிருக்கார் போலிருக்கு..?”

“ஆ... ஆமா..!”

‘‘நிலைமை சரியில்லைன்னு நினைக்கிறேன்.”

‘‘ஆ... ஆமா...”

‘‘கிறிஸ்டோபர் பற்றின கவலையோ பயமோ உனக்கு வேண்டாம். அவனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியும். ஞானேஷ் விஷயத்துல நீ பண்ணின உதவிக்கு ரொம்பவும் நன்றி. போலீஸுக்கு உன்மேல சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிற காரணத்தால நான் இனிமே உனக்கு போன் பண்ண மாட்டேன். நான் கொடுத்த பத்து லட்ச ரூபாய் பணத்தை யார் கண்ணிலும் படாம ஒளிச்சு வை. போலீஸ் உன்னை விசாரணை பண்ணும்போது ஒரு தடவை ரெண்டு தடவை யோசனை பண்ணிட்டு பதில் சொல்லு.”

‘‘ம்... ம்..!”

“கமிஷனர் எதிர்ல உட்கார்ந்துட்டிருக்கிறதால உன்னால சரியா பேச முடியலைனு நினைக்கிறேன். இட்ஸ் ஓ.கே... இனிமே நீ என்னை மறந்துடு!”

உரையாடல் நின்று போக... செல்போனை அணைத்துவிட்டு பார்த்தசாரதியை ஏறிட்டார் கமிஷனர்.

“ஸார்! நீங்க ஒரு ரிடையர்ட் ஜட்ஜ். எத்தனையோ க்ரைம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை பண்ணின உங்களுக்கு உங்க மகன் ஞானேஷ் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் அதிர்ச்சியாத்தான் இருக்கும். மீரா வீட்டு மொட்டை மாடியில் ஒரு மண் சட்டியில் இருந்த அஸ்தி உண்மையிலே ஞானேஷோடதுதானா... இல்லை, வேற யாரோடதாவதான்னு கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். இந்த விவகாரத்தில் நமக்கு கிடைச்சிருக்கக் கூடிய ஒரே ஒரு தடயம், இந்த ரெக்கார்டட் வாய்ஸ்தான். இது யாரோட வாய்ஸா இருக்க முடியும்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா ஸார்?”

பார்த்தசாரதி இருண்டு போன முகத்தோடு தலையாட்டினார்.” எனக்கு வாய்ஸ் பிடிபடலை. ஏதோ புதுசா கேட்கிற மாதிரி இருக்கு!”

கமிஷனர் பார்வை இப்போது மீராவின் பக்கம் திரும்பியது. ‘‘நீ இந்தக் குரலை கேட்டிருக்கியாம்மா?”

“இல்ல ஸார்..!”

சந்திரசூடனும், அபிராமியும் தங்களுடைய பங்குக்கு தலைகளை ஆட்டி வைத்தார்கள்.

“நாங்களும் இந்த வாய்ஸைக் கேட்டதில்லை ஸார்!”

கமிஷனர் சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு, மேஜையின் மேல் கைகளை ஊன்றியபடி, நிறுத்தி நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

“செல்போனில் பேசியவன் சாதாரண நபர் கிடையாது. ஒரு அல்ட்ரா மாடர்ன் ஹைடெக் பேர்வழி. ஹோட்டல் மானேஜர் புவனேந்திரனுடன் அவன் பேச உபயோகப்படுத்தியது ஆர்டினரி செல்போன் இல்லை. நானோ செல்போன். அது மாதிரியான செல்போன்கள் நம் இந்தியாவில் கிடையாது. சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். நானோ செல்போனிலிருந்து ஒருவர் சாதாரண செல்போனுக்கு டயல் செய்தால் அழைப்பவரின் எண் பத்து பூஜ்யங்களாய்த்தான் டிஸ்ப்ளேயில் தெரியும். கூடவே ‘NO NAME’ என்கிற ஆங்கில வார்த்தையும் உற்பத்தியாகும்...”

பார்த்தசாரதி உஷ்ணமான பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு ”நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த நபர் யார்னு கண்டுபிடிக்கவே முடியாது போலிருக்கே?”

“சான்ஸே இல்லைன்னு சைபர் க்ரைம் ப்ராஞ்ச் பீப்பிள் சொல்லிட்டாங்க. அட் ப்ரசன்ட் வீ ஆர் ஹெல்ப்லஸ்..! பட், மீரா மனசு வெச்சா அந்த ‘கல்ப்ரிட்’ யார்ங்கிறதை கண்டுபிடிச்சுடலாம்.”

“நானா...?” நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள் மீரா.

‘‘யெஸ்... உன்னோட காதலன் பிரணவ் இப்போ எங்கே இருக்கான்?”

“தெரியலை ஸார்... ரெண்டு நாளா அவரோட போனைத்தான் எதிர்பார்த்திட்டிருக்கேன்.”

“அந்த பிரணவ் சரியில்லை. அவன்கிட்டே நிறைய தப்பு இருக்கு... இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறதா சொல்லி உன்னை ஏமாத்தியிருக்கான். அவன் கைக்கு கிடைச்சாத்தான் ஞானேஷுக்கு என்னாச்சுங்கிற உண்மை தெரிய வரும். அவனோட போட்டோ உன்கிட்டே இருக்கா?

கமிஷனர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவருடைய லேண்ட் லைன் டெலிபோன் விழித்துக்கொண்டு சிணுங்கியது. ரிஸீவரை எடுத்து காதுக்கு ஒற்றினார். மறுமுனையில் டெப்டி கமிஷனர் பேசினார்.

“ஸார்..! நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபாரன்சிக்  லேப்பிலிருந்து அந்த அஸ்தி பற்றின ரிப்போர்ட் வந்திருக்கு.’’

“ரிப்போர்ட் என்ன சொல்லுது?”

“அந்த சாம்பலில் இருந்த எலும்புத் துணுக்குகளின் மூலமா, டி.என்.ஏ. டெஸ்ட் பண்ணி ஞானேஷோட அப்பா பார்த்தசாரதியோட டி.என்.ஏ-வோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்காங்க.”

“ரிசல்ட் என்ன?”

“அது ஞானேஷோட சாம்பல்தான் ஸார்!”

- தொடரும்...

ராஜேஷ்குமார்  ஓவியங்கள்: அரஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism