Published:Updated:

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

காதலை வாழவைக்கும் தருமபுரி கிராமம்

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

காதலை வாழவைக்கும் தருமபுரி கிராமம்

Published:Updated:

ந்த ஊரில் காதல் திருமணம் செய்யாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தவிர, நூற்றுக்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. `நாடகக் காதல்', `கௌரவக் கொலை' என்றெல்லாம் செய்திகளில் பூதமாகக் காட்டப்படும் அதே தருமபுரி மாவட்டத்தில்தான் இருக்கிறது இந்தக் கிராமமும்!

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

அரூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, எஸ்.பட்டி. முழுக்க முழுக்க தலித்துகள் வாழும் கிராமம். ஆனால், சாதிப்பெயரைச் சொல்லிக்கொண்டு தலித்திய கட்சிகள்கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கம்யூனிஸ கொள்கையில் ஊறி போயிருக்கிறார்கள் அதன் மனிதர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அக்கா... கொஞ்சம் வெளியில வாங்க. காதல் கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்களை எல்லாம் பேட்டி எடுக்க வந்திருக்காக...’’ என்ற சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து வந்த விஜயாவுக்கு வயது 58. அவர் முகத்தில் சிரிப்பும் அழுகையும் ஒருசேர உதிர்ந்தன.

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

‘‘என் சொந்த ஊரு பக்கத்துல இருக்குற கொங்கவேம்பு. 38 வருஷத்துக்கு முன்ன எங்க ஊரு ரேஷன் கடைக்கு வேலைக்கு வந்த இந்த ஊர்க்காரர் பரிதிமாலைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க சாதிக்காரங்க எல்லோருமா சேர்ந்து கம்பு, தடியோட இங்க வர, இந்த ஊரு ஆம்பளைக்கு நிகரா பொம்பளைங்களும் சண்டைக்கு வந்து, கல், கம்பு, மிளகாப்பொடினு கையில கிடச்சதையெல்லாம் வெச்சு அவங்களை மறிச்சாங்க.

கொஞ்ச வருஷத்துல என் வீட்டுக்காரர் உடம்பு சரியில்லாம இறந்துட்டாரு. திரும்ப எங்க ஊருக்கும் போக முடியாம நான் திக்கத்து நின்னப்போ, இதே ஊரைச் சேர்ந்த கருங்கண்ணன், என்னை மறுமணம் செஞ்சுக்கிட்டாரு. அன்னிக்கு என் காதலை காப்பாத்துனதும் இந்த ஊருதான், இன்னிக்கு என்னைக் கைவிடாமத் தாங்குறதும் இந்த ஊர்தான்!’’ என்றார் கண்கள் தளும்ப.

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

தன் 21 வருடக் காதல் வாழ்க்கையைச் சொன்ன 40 வயதான வனிதா, ‘‘சாதியைச் சொல்லி இன்னும் எங்க வீட்டுல என்னை ஏத்துக்கல. ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு நாங்க சந்தோஷமாதான் இருக்கோம். ஒரே ஒரு வருத்தம். அப்பாவுக்குத் தெரியாம அம்மா மட்டும் அப்பப்போ என்னை வந்து பாத்துட்டுப் போகும். கொஞ்ச நாளைக்கு முன்ன எங்கம்மா செத்துப்போச்சி. சாதிதான் முக்கியம்னு, என்னப் பெத்தவ முகத்தைக் கூடப் பார்க்கவிடல. தூரத்துல நின்னு அழுதுட்டு வந்துட்டேன். எங்க காதலுக்காக நான் சந்திச்ச ஒரே மிகப்பெரிய இழப்பு அதுதான். ஆனாகூட அதுக்குக் காரணம் நானோ, என் கணவரோ, காதலோ இல்ல. சாதிதான்!’’ - தெளிவும் நிதானமும் வனிதா வார்த்தைகளில்.

நாம் சென்ற நாளில் சத்தியப்பிரியா, பொன்னுத்துரை தம்பதிக்கு திருமண நாள். “நான் இவரைக் காதலிச்சப்போ, எஸ்.பட் டியைப் பத்தி தப்புத் தப்பா என்கிட்ட சொன்னாங்க வேற்று சாதியான எங்க வீட்டு ஆளுங்க. காதல் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து பார்த்தா, இது ஒரு தனி உலகம் மாதிரி இருக்கு. ஒட்டுமொத்த ஊரும் அவ்வளவு ஒற்றுமையா இருக்கு. கல்வியில் பின்தங்கிய பகுதியான தருமபுரி மாவட்டத்தோட ஒரு மூலையில் இருக்குற இந்த ஊருல, நூத்துக்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள், ஐந்நூறுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் இருக்காங்க. அதுமட்டுமில்லாம மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறைனு என பல துறைகளின் உயர் பதவிகளிலும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவங்க இருக்காங்க. நெல்சன் மண்டேலா, கிளாரா ஜெட்கின், சேகுவேரா, பகத்சிங், திலீபன், பிரபாகரன், சுகதேவ், ராஜகுரு, ஹோசிமின், டிமிட்ராவ்... இங்க உள்ள குழந்தைகளுக்கு வெச்சிருக்குற உலகப் புரட்சியாளர்கள் பெயர்களில் சில இதெல்லாம். இன்னிக்கு இளைஞர்களா வளர்ந்து நிக்குற அவங்களுக்கு, இந்தப் பெயர்களோட வரலாறும் தெரியும். ஸ்கைலாப்னு ஒருத்தர் எங்க ஊருல இருக்கார். பூமியை நோக்கி ஸ்கைலாப் விண்கலம் விழப்போவதா அறிவிக்கப்பட்ட தினத்துல பிறந்தவர்!’’ என்று நம்மை ஆச்சர்யப்பட வைத்தவர்,

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

‘‘எங்க அப்பா, அம்மா பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிருந்தாகூட இப்படியான ஊருக்கு வந்திருக்க முடியாது. இன்னிக்கு நான் ஒரு தனியார் பள்ளியில டீச்சரா இருக்கேன். அவர் பஞ்சாயத்துத் துணைத்தலைவரா இருக்கார். எங்க மனசுல எந்த சாதியும் இல்ல, எந்த பிரச்னையும் இல்ல... அன்பும் மட்டும்தான்!’’ - சத்தியப்பிரியாவின் கண்களில் மின்னல்.

ஆசிரியர் திருவேங்கடம் மீது காதல் வயப்பட்டதால் காஞ்சிபுரத்தில் இருந்து எஸ்.பட்டிக்கு வாக்கப்பட்டு வந்திருக்கிறார் ஆசிரியை பரமேஸ்வரி. ‘‘எங்க வீட்டுல சாதிக்காக காதலை எதிர்க்க, நான் காதலுக்காக சாதியை விட்டுட்டு வந்துட்டேன். இப்போ குருவர்ஷன்னு ஒரு பையன் இருக்கான். ரெண்டு பேருமே டீச்சரா இருக்கோம், பொருளாதாரத்துல நிறைவா இருக்கோம். இருந்தாலும், எங்க வீட்டுல என்னை ஏத்துக்க விடாம தடுக்குது சாதி. ஆனா, அந்தக் குறை தெரியாம வாழ வைக்குது ஒற்றுமையான இந்த ஊர்!’’ என்கிறார் பரமேஸ்வரி.

காதல் கிராமம்!

ஆசிரியர் அப்பாத்துரை!

"சாதி இல்லை அன்பு மட்டும்தான்!"

“1940-களில் தீண்டாமை தலைதூக்கியிருந்த காலத்துலதான் எங்க ஊர்ப் பள்ளிக்கு வந்தாரு ஆசிரியர் அப்பாத்துரை. அவர்தான் எங்க ஊர் இளைஞர்களுக்கு சுயமரியாதை, பொதுவுடமை கொள்கைகளை விதைச்சிருக்கார். அதுதான் இன்னிக்கு ஆலமரமா வளர்ந்து நிக்குது. சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தப்போ தலைமறைவான அப்பாத்துரை, இன்னிவரைக்கும் எங்களுக்குத் திரும்பக் கிடைக்கல. ஆனாலும் அவர் எங்க மனசுல எல்லாம் வாழ்ந்துட்டுதான் இருக்கார். இங்க நடந்திருக்குற நூத்துக்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்களுக்கு வேர் அவர்தான்!’’ என்கிறார் தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் நெபுஹத்நேஸர்.

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism