Published:Updated:

'கேன்ஸ்' காளீஸ்வரி!

'கேன்ஸ்' காளீஸ்வரி!

'கேன்ஸ்' காளீஸ்வரி!

'கேன்ஸ்' காளீஸ்வரி!

Published:Updated:

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 1946-ம் ஆண்டிலிருந்து சர்வேதச படத்திருவிழா, ஆண்டுக்கொருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த 68-வது சர்வதேச பட விழாவில், உலகின் பல மொழிகளில் இருந்து 19 படங்கள் விருதுக்காக போட்டியிட்டன. ‘கேன்ஸ்’ஸின் மிக உயரிய விருதான ‘தங்கப்பனை’ விருதை ஃபிரெஞ்சு இயக்குநர் ஜாக்யூஸ் அடியார்ட் இயக்கிய ‘தீபன்’ படம் தட்டிச் சென்றது. ஃபிரான்ஸில் தஞ்சம் புகுந்த இலங்கை ஏதிலியர்களின் (அகதிகள்) பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த எழுத்தாளர் ஷோபா சக்தியும், சென்னையைச் சேர்ந்த நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் சிவப்புக் கம்பள வரவேற்போடு பாராட்டப்பட்டு, கௌரவிக்கப்பட்டுள்ளனர். லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ திரைப்படத்தில் நடித்தவர், ஷோபாசக்தி. நாடகக் கலைஞரான காளீஸ்வரிக்கு இதுதான் முதல் படம்.

'கேன்ஸ்' காளீஸ்வரி!

இலங்கையின் உள்நாட்டுப் போர் உச்சம் அடைந்த காலகட்டத்தில் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் பல நாடுகளுக்கு, ஏதிலியர்களாக அடைக்கலம் தேடிப் போகின்றனர். விடுதலைப் புலியான அந்தோணிதாசன் (ஷோபா சக்தி), யாழினி (காளீஸ்வரி) மற்றும் ஒரு குழந்தை (கிளாடின் வினிசிதம்பி) என மூன்று பேர் வெவ்வேறு சூழ்நிலைகளில், இலங்கையின் வெவ்வேறு இடங்களிலிருந்து ஃபிரான்ஸுக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். தொலைந்த ஒரு குடும்பத்தின் பாஸ்போர்ட், இந்த மூவரையும் ஒன்றாக இணைக்கிறது. ஃபிரான்ஸ் நாட்டின் சட்ட திட்டங்களின்படி கணவன், மனைவி, குழந்தை என்று பொய் சொல்லி வாழத் தொடங்குகின்றனர். மொழி தெரியாத நாட்டில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு கிடக்கும் அந்த மூவர், தஞ்சம் அடைந்த இடத்திலும் வதைக்கப்படுவது, அவர்களுக்கு இடையே நிலவும் உறவு, உணர்வுச் சிக்கல்கள், காலப்போக்கில் முளைவிடும் உறவுகள் என... ‘தீபன்’ படத்தின் கதை, உண்மைக்கு நெருக்கமாக நெய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக அரங்கில் பாராட்டப்பெற்ற நம்மூர்ப் பெண் காளீஸ்வரியைச் சந்தித்தோம். சென்னை, ரெட்டேரியைச் சேர்ந்த காளீஸ்வரி, மாநிலக்கல்லூரியில் சைக்காலஜி முடித்து, மனோதத்துவ மருத்துவராக ஆசைப்பட்டவர். காலப்போக்கில் கால் சென்டர், பண்பலைத் தொகுப்பாளினி என்று பயணித்தவருக்கு, நண்பர்கள் மூலமாக நாடகங்கள் மீது ஈர்ப்பு வந்தது. இப்போது ‘தியேட்டர் ஒய்’, ‘இந்தியநாஷ்ட்ரம்’, ‘மணல் மகுடி’ போன்ற நாடகக்குழுக்களில் நாடகக் கலைஞராக இருக்கும் காளீஸ்வரி, பல பள்ளிகள், கிராமங்களுக்குச் சென்று குழந்தை களுக்கு கதைசொல்லியாகவும் இருந்து வருகிறார்.

'கேன்ஸ்' காளீஸ்வரி!

“இலங்கைப் போரின் சம்பவங்களை ஊடகங்கள் மூலம் அதிகமாக பார்த்தும், கேட்டும் வளர்ந்திருக்கிறேன். ‘தீபன்’ கதை, இலங்கைத் தமிழர்களின் துயரங்களை மிகநுட்பமாக சொல்லக் கூடியது. எனவே, என் கதாபாத்திரத்தின் மீது அதிக உயிரோட்டமும், பொறுப்பும், உழைப்பும் இருக்க வேண்டும் என ஓய்வின்றி உழைக்கத் தொடங்கினேன்.

என்னதான் இலங்கைத் தமிழர்களின் வலிகள், காயங்கள், துயரங்கள், பட்டினி களைப் பற்றி பேசினாலும், அவற்றை நாம் உணர முடியாது. ஏனென்றால், நாம் யாருக்கும் பயந்து வாழவில்லை; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடவில்லை; யாரும் நம்மைக் கைது செய்யவில்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து முடியும் காலம் வரை அந்த வலிகளை என்னால் உணர முடிந்தது. இன்னும் அந்த கதையையும், ‘யாழினி’யையும் விட்டு வெளியேற முடியவில்லை. இந்த விருது தரும் அங்கீகார மகிழ்ச்சியைத் தாண்டி, படம் பார்த்த மக்களின் உணர்வு வெளிப்பாடே மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது!

'கேன்ஸ்' காளீஸ்வரி!

முழுக்க முழுக்க ஃபிரெஞ்சு படக்குழுவி னரால் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் 85 சதவிகிதத்துக்கும் மேல் இலங்கைத் தமிழில்தான் உரையாடல்கள் இருந்தன. தமிழகத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. மற்ற நாட்களில் ஃபிரான்ஸில்தான் படப்பிடிப்பு. ஆங்கிலம், ஃபிரெஞ்சு சப்டைட்டில்களில்தான் அந்நாட்டு மக்கள் அனைவரும் படத்தைப் பார்த்தனர். அதற்கே படம் முடிந்தவுடன், எழுந்து நின்று நெகிழ்ச்சியில் கைதட்டினர். இந்தப் படம், ஈழ மக்களின் துயரங்களை ஃபிரான்ஸ் நாட்டு மக்களிடமும், அரசிடமும் மிக நெகிழ்வாக எடுத்துச் சென்றுள்ளது. தமிழக மக்களின் மீதிருந்த பார்வையை மாற்றியுள்ளது!’’ - தெளிவான பேச்சு நடை காளீஸ்வரிக்கு.

ஆகஸ்ட் மாதம் ‘தீபன்’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காளீஸ்வரிக்கு சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருக்கிறது. ‘‘என் கணவர் வினோத்தும் நாடகக் கலைஞர். ‘மெட்ராஸ்’ படத்தில் ‘மாரி’ கதாபாத்திரத்தில் நடித்தவர்!’’ - மெல்லிய வெட்கம் பூசி அறிமுகம் செய்து வைக்கிறார், சர்வதேச விருது பெற்ற படத்தின் நடிகை!

கு.முத்துராஜா   படங்கள்: ச.சந்திரமௌலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism