Published:Updated:

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

Published:Updated:

திருச்சி, சிங்காரத்தோப்பு அருகே உள்ள ‘ஆதிகுடி காபி கிளப்’ சுற்றுவட்டாரத்தில் மிகப் பிரபலம். அவசரப் பயணத்தில் பரபரப்பான மெயின் காட் கேட் வழியாக வாகனத்தில் பறந்தாலும், இப்ராஹிம் பூங்கா எதிரில் உள்ள ‘ஆதிகுடி’யைக் கடந்து போகவிடாமல் சுண்டி இழுக்கும்... இங்கு சுடச்சுட கிடைக்கும் வெண்ணெய் அடை - அவியல் மணம்! அது மட்டுமா... பட்டணம் பக்கோடாவும், ரவா பொங்கலும் ருசியோ ருசி!

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

லால்குடியை அடுத்துள்ள ஆதிகுடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம ஐயரால் 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கடையை, தொடர்ந்து நான்காவது தலைமுறையாக வழக்கறிஞர் கண்ணன் என்கிற கிருஷ்ணன், அவருடைய தம்பிகளான லெக்ஷ்மிநரசிம்மன், கணேசன், சத்யநாராயணன், சத்தியவாகீஸ்வரன் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சிவாஜி, எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், ஜெமினி கணேசன்னு நடிகர்கள் பலரும் வாடிக்கையாளர்களா அடிக்கடி வந்துபோன இடம், இந்த ‘ஆதிகுடி காபி கிளப்’. நூறாண்டுகள் கடந்தும் பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்த கடையில, இப்போ கொஞ்சம் டைல்ஸ் மட்டும் போட்டு ஆல்ட்ரேஷன் செஞ்சிருக்கோம். ஆனா, அப்போ கொடுத்த அதே ருசியும், கைப்பக்குவமும் தொடர்றதுதான் கடையின் பலம்!’’ என்கிறார் கண்ணன்.

`‘மதியம்தான் அடை, காலையில பக்கோடாவும் பொங்கலும்தான்!’’ என்றார்கள். `‘சரி கொடுங்க...’’ என்று பக்கோடாவை வாங்கினால், வெளியே மொறுமொறுவென்றும் உள்ளே அப்படியே மெதுமெதுவென்றும் நாக்கை அடிமையாக்கும் அந்த பக்கோடாவை சாப்பிடவே ‘ஆதிகுடி’க்கு விசிட் அடிக்கும் கூட்டத்தின் காரணம் புரிந்தது. தினமும் காலை 9 மணி, மதியம் 12.30 மணி, மாலை 3 மற்றும் 5 மணிக்குக் கிடைக்கும் காபிக்கும் கூட்டம் களைகட்டுகிறது. பொங்கல், அதைவிட சூப்பர்! பொங்கலை அரிசியில் செய்யாமல், ரவையை நன்கு குழையும்படி வேகவைத்து, பெரிய மிளகை தூக்கலாகத் தூவி, தேவையான அளவு இஞ்சி, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து பதமாகக் கொடுக்கப்படும் ரவா பொங்கல் நடுவே வடையை வைத்து, கொஞ்சம் சாம்பார் சேர்த்துச் சாப்பிட்டால்... நாக்கில் கரைந்து தொண்டையில் இறங்குகிறது இதமாக! இது இப்படி என்றால், மதியம் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை எப்போதும் சூடாகக் கிடைக்கும் வெண்ணெய் அடைக்கு காய்கறி அவியலை சேர்த்துச் சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்!

‘‘இந்த அடையும், பக்கோடாவும் செய்ய கொஞ்சம் எங்க வாசகிகளுக்கும் சொல்லித் தாங்களேன்..!’’ என்றோம் கல்லாவில் இருக்கும் லெக்ஷ்மிநரசிம்மனிடம். சிரித்துக்கொண்டே நம்மிடம் செய்முறையை சொன்னார், வழக்கறிஞர் கண்ணன்!

ஆஹா அடை!

‘‘துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சரிபங்கு எடுத்துக்கோங்க. பச்சரிசி கால்பங்கு வீதம் எடுத்து சரியா ஒண்ணரை மணி நேரம் ஊறவையுங்க. அதோட வரமிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து அரைச்சு, அந்த மாவில் சின்னச் சின்னதா நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயம், தேவைப்பட்டால் முருங்கைக் கீரை சேர்த்துக்கோங்க. தோசைச்கல்லில் தோசை சுட்டு எடுப்பதுபோல, வெண்ணெய் விட்டு எடுங்க. இதோட சுடச்சுட அவியல் தொட்டுச் சாப்பிட்டா... உடம்புக்கு அவ்வளவு நல்லது!

'ஆதிகுடி' அடை - அவியல்... அத்தனை ருசி!

அசத்தல் அவியல்!

பூசணிக்காய் - அரை கிலோ, சேனைக்கிழங்கு - கால் கிலோ, புடலங்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு கால் கிலோ, சௌசௌ - கால் கிலோ, வாழைக்காய் - 2, கொத்தவரங்காய் - 100 கிராம், கேரட் - கால் கிலோ எடுத்துக்கோங்க. சீரகம் - 10 கிராம், தேங்காய்த் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் 100 கிராம், கறிவேப்பிலை - தேவையான அளவு, புளிப்பில்லாத தயிர் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 100 மில்லி எடுத்துக்கோங்க (இது, குறைந்தபட்சம் 10 அல்லது 12 பேருக்கு அவியல் செய்றதுக் கான அளவு).

காய்கறிகளைத் தண்ணீரில் நல்லா கழுவி, நீளவாக்கில் நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து,  தண்ணீரை வடிச்சுக்கோங்க. வேகவைத்த காய்கறிகளை மீண்டும் அடுப்பில் வைத்து... சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் அரைத்த கலவையை விட்டு, நல்லா கொதி வந்த பிறகு இறக்குங்க. பிறகு கறிவேப்பிலை, தயிர், உப்பு சேர்த்துக் கலக்குங்க. கடைசியா தேங்காய் எண்ணெயை விட்டுக் கலக்கினா... அவியல் ரெடி!

- புன்னகையுடன் நிறைவு செய்தார் கண்ணன்.

‘ஆதிகுடி’... இப்போது உங்கள் அடுப்படியிலும்!

பேஷ் பேஷ் பக்கோடா!

``பட்டணம் பக்கோடா செய்யலாமா..?

கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 200 கிராம், வெண்ணெய், நெய், வனஸ்பதி (ஏதேனும் ஒன்று) - 50 மில்லி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால் கிலோ, முந்திரி - 50 கிராம், இஞ்சி - பெரிய துண்டு 1, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள், சமையல் சோடா - தேவையான அளவு, எண்ணெய் - கால் லிட்டர்... இதெல்லாத்தையும் எடுத்துக்கோங்க (இது குறைந்தபட்சம் 10 பேர் சாப்பிடுவதற்கான அளவு)

கடலை மாவு அரிசி மாவை ஒரு பேஸினில் எடுத்து, வெண்ணெய், நெய் அல்லது வனஸ்பதி சேர்த்து, உப்பு, சமையல் சோடா போட்டு நல்லா கலந்துக்கோங்க. பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நல்லா பிசையுங்க. இப்போ அந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா பிடிங்க. அகலமான வாணலில் எண்ணெய் ஊற்றி, பிடித்து வெச்சிருக்குற உருண்டைகளை பொன்னிறமாகும்வரை பொரித்து எடுங்க. சுடச் சுட பட்டணம் பக்கோடாவை சாப்பிட்டுப் பாருங்க!’’

சி.ஆனந்தகுமார்  படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism