Published:Updated:

ரங்கநாயகி... ரியல் நாயகி!

ரங்கநாயகி... ரியல் நாயகி!

ரங்கநாயகி... ரியல் நாயகி!

ரங்கநாயகி... ரியல் நாயகி!

Published:Updated:

ருக்கலைப்பு, சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் என பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்க, தன் பெண்கள் குழுவோடு 27 ஆண்டுகளாகப் போராடிவருகிறார், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ரங்கநாயகி. இதில் கணிசமான வெற்றியையும் கண்டுவருகிறார் இந்த நிஜ நாயகி!

ரங்கநாயகி... ரியல் நாயகி!

‘‘இந்த மாவட்டத்துல படிப்பறிவு இல்லாத கிராமங்கள்தான் ஜாஸ்தி. அதனால, பொம்பளப் புள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கற செலவுக்குப் பயந்து, பெண் குழந்தைகள கருவுலயே கலைச்சுடுவாங்க; பொறந்தவுடனேயே கொன்னுடுவாங்க; குப்பைத்தொட்டியில வீசிடுவாங்க. என்னோட பிக்கனஹள்ளி கிராமமும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. இதையெல்லாம் தட்டிக் கேட்க, ‘நல்லா படிச்சு அரசு அதிகாரியாகணும்’னு நினைச்ச என்னை, ‘பள்ளிக்கூடத்துக்கு போகக் கூடாது’னு சொல்லிட்டாங்க. என் ஆசை, பத்தாவதோட அணைஞ்சு போச்சுனு நினைச்சப்போவே, அடுத்த இடி. 17 வயசுல திருமணம் செஞ்சு வெச்சுட்டாங்க’’ என்ற ரங்கநாயகிக்கு, அவர் ஆசைப்பட்ட சமூகப் பயணத்துக்கு கைகொடுப்பவ ராக கணவர் அமைந்தது ஆச்சர்யமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கணவர் முருகேசன் எம்.ஏ முடிச்சிட்டு, என்னைப் போலவே சமூக சேவையில் ஆர்வமா இருந்ததால, அரசு வேலை கிடைத்தும் போகல. கணவரோட கிராமமான பொம்மனூர்ல இயற்கை விவசாயம் செய்துட்டே, அவரும் நானும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியா, ‘பெண் குழந்தை பாதுகாப்பு இயக்கம்’, ‘பொம்மனூர் சொசைட்டி ஃபார் வில்லேஜ்’ இயக்கம்னு ஆரம்பிச்சு, கிராமங்கள்ல விழிப்பு உணர்வு பிரசாரம் பண்ண ஆரம்பிச்சோம்.

ரங்கநாயகி... ரியல் நாயகி!

மாவட்டத்துல இருக்குற எல்லா கிராமப் பகுதிகளுக்கும் வாரத்துக்கு 2 - 3 முறை போவோம். ஒரு பெண்ணா பிறந்து, இந்த நாட்டையும், மாநிலங்களையும் ஆட்சி செய்றவங்களில் இருந்து, பெண் சாதனையாளர்கள் பலரைப் பத்தியும் அவங்களுக்கு எடுத்துச்சொல்லி, ‘உங்க குழந்தையும் நாளைக்கு இப்படி ஆகலாம்!’னு நம்பிக்கை கொடுத்து, பெண் குழந்தைகளோட படிப்புக்குத் தேவையான உதவிகளையும் செய்வோம்.

சேமிப்பு பழக்கம் இல்லாததாலதான், பெண் பிள்ளைகளோட திருமணங்களில் பலரும் திணறிப் போயிடுறாங்க. அதை மாத்த, ஒவ்வொரு கிராமத்துலயும், ஒவ்வொரு வீடாக சென்று, அவங்களால முடிந்த தொகையை வசூலித்து, ‘பல்லவன் கிராம வங்கி’யில தனிக் கணக்கு தொடங்கி கொடுத்தோம். பெண்கள் கையிலும் வருமானம் வர, இலவசத் தையல் பயிற்சி போன்றவற்றை வழங்கினோம்.

மாவட்டத்தின் 40 கிராமங்கள்ல, எங்க குழு உறுப்பினர்கள் 250 பேர் இருக்காங்க. அதனால ஒவ்வொரு கிராமத்துலயும் இருக்கற கர்ப்பிணிகளை, கருக்கலைப்போ, சிசுக்கொலையோ செய்துவிடாதபடி கவனிச்சிட்டே இருப்போம். அவங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், ஆரோக்கியமான உணவுகள், ரத்த சோகை வராமல் தடுக்க வழிமுறைகள் போன்றவற்றையும் வழங்குவோம். இந்தத் தொடர் கண்காணிப்பால கருக்கொலை, சிசுக்கொலை பெருமளவு குறைந்தது. குப்பைத் தொட்டியில் கிடக்கும் குழந்தைகளோட பெற்றோரைக் கண்டுபிடிச்சு ஒப்படைப்போம், அல்லது ‘தொட்டில் குழந்தை திட்ட’த்துல ஒப்படைப்போம். குழந்தைத் திருமணம் நடக்க இருக்கிறதா தகவல் கிடைச்சா, உடனடியா தடுத்து நிறுத்துவோம்!’’ என்று மக்கள் பணியில் இந்தத் தம்பதி ஓடிக்கொண்டே இருக்க, மூன்று வருடங்களுக்கு முன் ரங்கநாயகியின் கணவர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார். அவரின் வேலைகளையும் இப்போது தான் ஏற்று செய்து வரும் ரங்கநாயகிக்கு, ஒரு பையன், இரண்டு பெண்கள் என்று மூன்று பிள்ளைகள்.

ரங்கநாயகி... ரியல் நாயகி!

‘‘கிட்டத்தட்ட 27 வருஷமா களத்தில் இருக்கேன். நாங்க விழிப்பு உணர்வு செய்யும் முன்பா எங்க மாவட்டத்துல ஆண் பெண் விகிதாசாரம் 1000:690. இப்போ 1000:785!’’

- அக்கறையும், சந்தோஷமுமாகச் சொல்கிறார் ரங்கநாயகி.

‘‘ரங்கநாயகி அக்கா மட்டும் இல்லைன்னா, என்னோட   ரெண்டு   பொம்பள பிள்ளைகளை யும்  கருவிலேயே கொன்னுருப்பேன். இப்போ அவங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடம் போறதை கண்ணு நெறயப் பார்க்குறேன்!’’ என்று சாக்கி உணர்ச்சிவசப்பட,

‘‘எனக்கு 15 வயசுல கல்யாணம் பண்ணிவெக்க பாத்தாங்க. சரியான நேரத்துல அக்கா வந்து, தடுத்துட்டாங்க. தையல் வேலை கத்துக்கிட்டு, இப்போ சுயமா நாலு காசு சம்பாதிக்கறேன். இன்னும் ரெண்டு மாசத்துல எனக்குக் கல்யாணம்!’’ என சந்தோஷப்படுகிறார், 22 வயதான பொன்னம்மா!

இப்படி மாவட்டம் முழுக்க ரங்கநாயகியால் உயிர் பிழைத்த, குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட, வாழ்வாதாரத்துக்கு வழி கிடைக்கப்பெற்ற, பள்ளி, கல்லூரி செல்லக்கூடிய பெண்களின் நன்றி ஒலிகள் காற்றில் நிரம்பக் கலந்திருக்கின்றன!

ரியல் நாயகி, இந்த ரங்கநாயகி!

கு.ஆனந்தராஜ்   படங்கள்: வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism