Published:Updated:

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு... விளம்பரங்களும், நிதர்சனமும்!

`படிக்கும்போதே பல ஆயிரம் சம்பளம்...'

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு... விளம்பரங்களும், நிதர்சனமும்!

`படிக்கும்போதே பல ஆயிரம் சம்பளம்...'

Published:Updated:
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு... விளம்பரங்களும், நிதர்சனமும்!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில், படிக்கும்போதே பல ஆயிரம் ரூபாய் சம்பளம், படிப்பை முடித்த உடன் வெளிநாட்டில் வேலை என வசீகரமான விளம்பரங்கள் மாணவர்களை ஈர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்தப் படிப்பின் உண்மை இயல்புகளை, வேலைவாய்ப்பு நிதர்சனங்களைப் பற்றிச் சொன்னார், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்.

“கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்பது ஒரு புரொஃபஷனல் கோர்ஸ். 12-ம் வகுப்பில் தேர்வானவர்கள், இதில் சேர முடியும். பி.எஸ்ஸி., கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் எனும் பெயரிலான இந்தப் படிப்பு, மூன்று ஆண்டு காலப் படிப்பு. இதில் 6 மாதம் நட்சத்திர ஹோட்டல்களிலும் பயிற்சி அளிக்கப்படும். இந்திய அளவில் கேட்டரிங் துறைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடு, உள்நாட்டில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்த வண் ணம் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு... விளம்பரங்களும், நிதர்சனமும்!

படிப்பின் பிரிவுகள்!

ஒரு ஹோட்டல் மேனேஜரின் மேற்பார்வை யின் கீழ் வரும் கிச்சன், ஃப்ரன்ட் ஆபீஸ், ஹவுஸ் கீப்பிங், சர்வீஸ் எனும் நான்கு துறைகளைப் பற்றித்தான் இந்த மூன்று வருடப் படிப்பில் கற்றுத் தரப்படும். பொதுவாக 12-ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தவர்கள், கேட்டரிங் கோர்ஸில் சேர்ந்தால் சுலபமாகத் தேறிவிடலாம் என்ற எண்ணம் இங்கு இருக்கிறது. கோர்ஸில் தேர்வாகிவிடலாம்... எதிர்காலம்?

இந்தத் துறையில் நல்ல நிலைக்கு வர, ‘கம்யூனிகேஷன் ஸ்கில்’ மிக முக்கியம். மூன்று ஆண்டு காலப் படிப்பில், 80% - 90% மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், கம்யூனிகேஷன் திறன் இல்லாதவர்கள் இந்தத் துறையில் நிலைத்திருக்க முடியாது.

படித்துக்கொண்டிருக்கும்போதே பல ஆயிரம் சம்பளமா?!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்த உடனேயே மேனேஜர் ஆகிவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. பணிக்காலத்தின் முதல் ஓரிரு வருடங்கள் கடுமையாகத்தான் இருக்கும். கிச்சன் பிரிவில் வேலைக்குச் சென்றால், முதலில் வெங்காயம்தான் வெட்டச் சொல்வார்கள்; கிச்சனை சுத்தம் செய்யச் சொல்வார்கள். சர்வீஸ் பிரிவில் வேலைக்குச் சென்றால், பிளேட் துடைக்கத்தான் வேண்டும். ஹவுஸ் கீப்பிங் பிரிவில் வேலைக்குச் சென்றால், பெட்ஷீட் மடிக்கத்தான் வேண்டும். பயிற்சிக் காலத்தில், 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். படிக்கும்போதே பல ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. படிப்பை முடித்த பிறகுகூட 10 ஆயிரம் ரூபாய்க்குள்தான் சம்பளம் பரவலாக நிர்ணயிக்கப்படுகிறது. பணிக்குச் சேரும் முதல் இரண்டு வருடங்களுக்கு இதுதான் யதார்த்தம்.

விளம்பரங்களில் சொல்வதுபோல, இதில் உடனடியாக வளர்ச்சியைப் பார்க்க முடியாது. முதல் இரண்டு வருடங்களில் குறைவான சம்பளத்தில்தான் வேலை பார்க்க நேரிடும். கம்யூனிகேஷன் திறனைப் பொறுத்து இரண்டு வருடங்கள் ஆகும்... அடுத்தகட்ட நிலைக்கு உயர! தொடர்ந்து, சாமர்த்தியம் இருந்தால் இந்தத் துறையில் சிறப்பான நிலைக்கு உயரலாம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்து விட்டு, ஐந்து வருடங்களாக ஐந்தாயிரம் சம்பளத்தில் வேலையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டு வருடங்களில் நல்ல நிலையை அடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

வேறு என்ன வாய்ப்புகள்?!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் முடித்த சிலர், கொஞ்ச காலம் அனுபவத்துக் காக வேலைக்குச் சென்றுவிட்டு, பின் இண்டஸ்ட்ரியல் கிச்சன் வைக்கிறார்கள்.
ஆர்டர் எடுத்து கேட்டரிங் பிசினஸ் செய் கிறார்கள். ஹோம் பேக்கிங் செய்கிறவர்களும் உண்டு.

கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்... தரம் எப்படி அறிவது?!

பொதுவாக, ஸ்டார் ஹோட்டல் நிறுவனத் தினரே ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ் டிட்யூட் வைத்திருப்பவர்களாக இருப்பதால், தங்கள் இன்ஸ்டிட்யூட் மாணவர்களைத் தாங்களே பயிற்சி கொடுத்து வேலைக்கு எடுத்துக்கொள்வார்கள். இப்போது தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகள் பெருக ஆரம்பித்துவிட்டதால், விளம் பரங்களைப் பார்த்து மாணவர்கள் அதைப் பற்றிய எந்த விழிப்பு உணர்வும் இல்லாமல் அங்கெல்லாம் அட்மிஷன் ஃபார்ம் வாங்குகிறார்கள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியைப் பொறுத்தவரை, உள்கட்டமைப்பு வசதி, உள்ளே இண்டஸ்ட்ரியல் கிச்சன், ரெஸ்டாரன்ட், அதற்கான எக்யூப் மென்ட்ஸ், ஹவுஸ் கீப்பிங்குக்கான இடம் இவையெல்லாம் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். அரசு அனுமதி பெற்ற நிறுவனமா என்பதையும், சர்டிஃபிகேட் வேல்யூ பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் புரொஃபைலையும் சரிபார்க்க வேண்டும். வெறும் விளம்பரத்தை நம்பாமல், அங்கு ஏற்கெனவே கற்றவர்களின் நேரடி அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்து இறுதி முடிவெடுக்க வேண்டும்'' என்ற சதீஷ்,

``இந்தத் துறையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சினிமா மாதிரி ஒரே பாடலில் உடனடியாக எதுவும் நடக்காது. இரண்டு வருட உழைப்புக்குப் பிறகு, திறமையைப் பொறுத்து மெள்ள ஏணியில் ஏறலாம்!’’

- வெளிப்படையாகப் பேசி முடித்தார் சதீஷ்!

ச.ஜெ.ரவி,  படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism