Published:Updated:

"தேன்குழலும் சீடையும் தேடித் தந்த வெற்றி!"

செட்டிநாடு ஸ்நாக்ஸ் சிவகாமி ஆச்சி

"தேன்குழலும் சீடையும் தேடித் தந்த வெற்றி!"

செட்டிநாடு ஸ்நாக்ஸ் சிவகாமி ஆச்சி

Published:Updated:

செட்டிநாட்டின் எல்லையில் இருக்கும் தேவகோட்டை... கோட்டை போன்ற பிரமாண்ட வீடுகளைக் கடந்து செல்லும்போது கவர்ந்து இழுக்கின்றன, தேங்காய்ப் பால் வாசமும் எண்ணெய் காயும் மணமும்! ‘அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ்’ என்னும் அந்த யூனிட்டுக்குள் நுழைகிறோம். ஒருபக்கம் சீப்புச்சீடை மாவை அச்சில் வைத்து ஒருவர் பிழிந்துவிட, மற்றொருவர் அந்த நாடாவை வெட்டி வெட்டி, விரலில் மோதிரம் போல சுற்றிப் போடுவது என... பரபரவென பெண்களின் கைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அடுப்பில் தேன்குழல் பிழிந்தபடியே, மற்ற வேலைகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார் அந்த யூனிட்டின் உரிமையாளர் சிவகாமி ஆச்சி!

"தேன்குழலும் சீடையும் தேடித் தந்த வெற்றி!"

60 வயதைக் கடந்த ஆச்சி... மதுரை, காரைக்குடி, தேவகோட்டை என செட்டிநாடு ஸ்நாக்ஸ் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பிறந்தது, கல்யாணம் பண்ணிக் கொடுத்தது எல்லாமே தேவகோட்டைதான். கணவர் ராஜேந்திரன் செட்டியார், மதுரை டி.வி.எஸ்-ல வேலை பார்த்ததால, அங்க போயிட்டோம். எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. பெரியவர் இன்ஜினீயரிங் முடிச்சு, பாம்பேயில் வேலை பார்க்கிறார். பொண்ணுக்கு கல்யாணமாகி, யு.எஸ்-ல இருக்கிறா. சின்னப் பையன் மதுரையில் இருக்கிற எங்க ஸ்நாக்ஸ் யூனிட்டைப் பார்த்துக்கிறார்.

சின்ன வயசுல, எங்க அம்மா கைப்பக்குவத்துல ஊறுகாய் போடக் கத்துக்கிட்டு, ஊறுகாய் போட்டு சின்னச் சின்ன ஹோட்டல்களுக்குக் கொடுத்திட்டிருந்தேன். சின்னவன் திண்ணப்பன், எம்.பி.ஏ. முடிச்சிட்டு வந்தப்போ, ‘இதை ஏம்மா நாம பெரிய அளவில் பிசினஸா செய்யக் கூடாது? ஊறுகாய் மட்டுமில்லாம, நம்ம செட்டிநாடு பலகாரங்களையும் செய்து கொடுக்கலாமே!’ன்னு யோசனை சொன்னான். இப்படித் தொடங்கினதுதான் இந்த பிசினஸ்!

"தேன்குழலும் சீடையும் தேடித் தந்த வெற்றி!"

முதன் முதல்ல நாங்க ஆரம்பிச்சது சீப்புச்சீடையில்தான். முறுக்கு, தேன்குழல், தட்டை, ரிப்பன் பக்கோடானு எல்லா பலகாரங்களுமே மத்தவங்களும் செய்வாங்க. ஆனா, சீப்புச்சீடை செட்டிநாட்டில் மட்டுமே செய்யப்படுற பலகாரம். ரொம்ப ஸ்பெஷல்... ருசியும் சூப்பரா இருக்கும்!

கிடைச்ச வரவேற்பில் உற்சாகமானான் பையன். தினமும் ராத்திரி உட்கார்ந்து எனக்கு உதவி பண்ணுவான். இப்படி எங்க செட்டியார், அம்மா, என் தம்பி மனைவின்னு குடும்பமே இந்தத் தொழிலில் இறங்கிச்சு. கூட்டுக் குடும்பமா இருந்ததால, எல்லோருமே ஆளுக்கொரு வேலையா பார்த்தோம். பிசினஸ் வளர வளர... வீட்டில் இடம் போதலை. தனியா இடம் பார்த்து யூனிட் போட்டதோடு, மத்த செட்டி நாட்டுப் பலகாரங்களும் செய்யத் தொடங்கினோம். எல்லாமே எங்கம்மாவோட கைப்பக்குவப்படி!

தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தலாம்னு யோசிச்சப்போ, பையன்தான் மதுரை, தொழிற் பேட்டையில இடம் பார்த்து, மெஷினரி எல்லாம் இறக்குமதி பண்ணி, லோன் போட்டு முதலீட் டுக்கு ஏற்பாடு செய்து, பெரிய ஃபேக்டரியா விரிவுபடுத்தினான். அங்கே  இப்போ 40 பெண்கள் வேலை செய்றாங்க. மதுரையில் நீல்கிரீஸ் மாதிரி பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள், கோவை பழமுதிர் நிலையம், பெரிய பேக்கரி கள்னு எல்லா இடத்திலும் எங்க செட்டிநாட்டு ஸ்நாக்ஸ் கிடைக்கும்.

"தேன்குழலும் சீடையும் தேடித் தந்த வெற்றி!"

இன்னிக்கு, மதுரை சிட்கோ தொழிற்பேட்டையில் ஃபேக்டரி, தேவகோட்டையிலேயே ஒரு ரீடெயில் கவுன்ட்டர், காரைக்குடி யில் ஒரு கிளைனு வெற்றிகரமாக தொழில் நடந்துக் கிட்டிருக்கிறதுக்குக் காரணம், ஒத்துமையான எங்க குடும்பம்தான்!’’  உணர்வுப் பெருக்கில் நெகிழ்கிறது சிவகாமி ஆச்சியின் குரல். அடுத்தகட்டமாக, விசேஷ வீடுகளுக்கும் விழாக்களுக்கும் கேட்டரிங் ஆர்டர் எடுத்துச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ஆச்சி.

‘‘நம்மால முடியற வரை, சுறுசுறுப்பா இயங்கிக்கிட்டே இருக்கணும். பத்துப் பேருக்கு வேலை கொடுக்கணும். நாலு பேர் வயிறார சாப்பிட்டு, வாழ்த்தும்போது உள்ளம் குளிர்ந்து போகுதில்லையா? அது, பணங்காசை விட உசத்தியாச்சே! எங்களுக்கு அந்த வாடிக்கையாளர்கள்தான் சாமி!’’

- கையெடுத்து வணங்குகிறார் ‘சீப்புச்சீடை’ சிவகாமி ஆச்சி!

பிரேமா நாராயணன்
படம்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism