Published:Updated:

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

Published:Updated:

மீபத்தில் வெளியாகியிருக்கும், தேசிய விருது முதல் சர்வதேச அங்கீகாரம் வரை பெற்ற ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில், சேரிச் சகோதரர்களாக, ‘சின்ன காக்கா முட்டை’, ‘பெரிய காக்கா முட்டை’யாக நடித்து, பலரின் மனங்களில் பதிந்த சிறுவர்கள் ரமேஷ் மற்றும் விக்னேஷ். படத்தின் வெற்றி, மீடியாவை சிறுவர்களுக்குப் பழக்க, அவர்களின் அம்மாக்களைத் தேடிப் போனோம்!

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

சென்னை, காசிமேடு. மேற் கூரைக்குப் பதிலாக, எப்போது விழும் என்று சொல்ல முடியாத கத்தையான பிளாஸ்டிக் ஷீட், ஆங்காங்கே பெயர்ந்த சுவர்கள், நான்கு பேர் அமர்ந்தால் நிரம்பிவிடும் அறையில், சமை யல் செய்வதற்காகத் தடுத்த சிறிது இடம் போக மீதமுள்ள சொச்ச சதுரடிகள்தான் ‘பெரிய காக்கா முட்டை’ விக்னேஷின் வீடு. விக்னேஷ் தற்போது 10-ம் வகுப்பு படிக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘35 வருஷமா இதே ஏரியாவுலதான் இருக்கேன். என் வீட்டுக்காரர், அஞ்சு வருஷத்துக்கு முன்ன கடல்ல தவறி விழுந்து இறந்துட்டாரு. நான் தெனமும் விடியக்காலை அஞ்சு மணிக்கே காசிமேட்டுல மீன் வாங்கிட்டு வந்து மார்க்கெட்ல விப்பேன். நூறு, இருநூறு கெடைக்கும். என் மூணு புள்ளைங்கள்ல, விக்னேஷ் கடைக்குட்டி. சாவுல தப்பிச்சவன்!’’ என்று கட்டிக்கொள்ளும் விக்னேஷின் அம்மா கலைச் செல்வி, தொடர்ந்தார்.

‘‘சுனாமி வந்தப்போ, கடல் திடீர்னு புகை மாதிரி பெருசா எழும்ப, அலை வந்து எங்க வீட்டுல அடிச்சிருச்சு. ‘ரோட்டுக்கு ஓடுங்கடா’னு கத்திக்கிட்டே பசங்கள கையில இழுத்துக்கிட்டு ஓடிப் போய் பாத்தா, ரெண்டு பசங்க மட்டும் இருக்குதுங்க, விக்னேஷ காணல. அவன், ‘அம்மா எதுக்கோ நம்மள தொரத்துது’னு கடலை நோக்கி ஓடுறான். நான் ஓடிப் போய் அவனைப் புடிக்க, எங்க ரெண்டு பேரையும் கொஞ்ச தூரம் அலை இழுத்துட்டுப் போனாலும், நல்ல வேளையா ரோட்டுக்கு இழுத்துட்டு வந்துட்டேன். சொத்தே என் புள்ளைங்கதான்னு நெனச்சு வாழும்போது, அதுகளுக்கு ஒண்ணுனா நான் என்ன பண்ணுவேன்?!’’

- கண்களில் கலக்கம் தேங்க, ‘‘காக்கா முட்டை ஹீரோ பத்தி சொல்லுங்க!’’ என்றதும் கலகலப்பாகிறார்.

‘‘ஷூட்டிங்கு நடக்கும்போது தெனமும் கதை கதையா சொல்லுவான். படத்தை முதல் நாளே தியேட்டர்ல பாத்தேன். தொடைக்கத் தொடைக்க கண்ணுல தண்ணியா ஊத்துது! பெரிய மனுசங்க எல்லாம் பாராட்டுனாங்க. இந்த ஏரியா பக்கம் வர்றவங்க எல்லாம், ‘இதான் காக்கா முட்டை வீடா?’னு இவன்கூட போட்டோ புடிச்சிட்டுப் போறாங்க. இந்த ஏழை வாழ்க்கையில எங்களுக்கு இவ்வளவு பெரிய சந்தோஷம் கிடைக்கணும்னு இருந்துருக்கு!’’

- மீண்டும் தேங்குகிறது விழிநீர்.

"பசங்க கரி எடுத்த காசுல சாப்பிட்டுருக்கோம்!"

‘சின்னக் காக்கா முட்டை’ ரமேஷின் வீடு, காசிமேட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எண்ணூர் அரசு குடியிருப்பில், நான்காவது மாடியில் இருக்கிறது. ‘‘விக்னேஷ் வீட்டுக்குப் பக்கத்துலதான் இருந்தோம். வீடு ரொம்ப டேமேஜ் ஆயிருச்சுக்கா. அப்புறம் இங்க வந்துட்டோம்!’’ என்று ரமேஷ் வரவேற்க...

‘‘என் வீட்டுக்காரரு கடலுக்குப் போவாரு. நான் ஞாயித்துக் கெழமையும், புதன் கெழமையும் தெருத்தெருவா மீன் விக்கப் போவேன். ஒரு வருசமா வீட்டுக்காரருக்கு உடம்புக்கு முடியல; வேலைக்கும் போக முடியல. நான்தான் சமாளிக்குறேன்!’’ - மீன் சட்டியை கழுவிவைத்துவிட்டு வந்தார் ரமேஷின் அம்மா மீனா.

‘‘எனக்கு மூணும் ஆம்பள பசங்க. ரமேஷ்தான் கடைக்குட்டி. இப்ப ஏழாவது படிக்கிறான். ஒண்ணரை மாசம் இஸ்கூலு லீவு விட்டப்போதான் ஷுட்டிங் நடத்து
னாங்க. இஸ்கூலு தொறந்ததுக்கு அப்புறம், வெள்ளி, சனி, ஞாயிறுல மட்டும் ஷூட்டிங் நடக்கும். ‘இன்னக்கி ஷூட்டிங்குல என்னடா நடந்துச்சு?’னு கேட்டா, ‘தியேட்டர்ல வந்து படத்துல பாத்துக்கோம்மா!’னு கெத்து காட்டுவான். கொஞ்ச நாளைக்கு முன்னதான், ரமேஷ் தேசிய விருது வாங்குன சி.டி-யை கொடுத்தாங்க. நைட்டு 11.30-க்கு டி.வி-யில போட்டுப் பாக்க, என்னையும் அறியாம சந்தோஷத்துல சத்தமா அழுதுட்டேன். குவாட்டர்ஸுல இருக்குறவங்க எல்லாம் என்னமோ ஏதோனு ஓடிவர, ‘அக்கா... என் புள்ள அவார்டு வாங்குறான் பாருக்கா!’னு அழுதுட்டேன்.

படத்துல ஐஸ்வர்யா மேடத்தை பாத்தப்போ, அப்புடியே எங்களைப் பாத்த மாதிரி இருந்துச்சு. ரமேஷ் நிஜத்துலயும் கரி பொறுக்கிக் கொடுத்து, அதை வித்து நாங்க சாப்பிட்டுருக்கோம். ‘அம்மா, தோனி சாரை பாக்கப் போனப்போ, இங்கிலீஸ்லயே பேசுனாரும்மா. அதனால நான் இங்கிலீஸ் படிக்கணும். நல்லா படிச்சிட்டு, 24 வயசுக்கு அப்புறம் நான் சினிமா ஹீரோவாகப் போறேம்மா!’னு சொல்றான். எங்க கஷ்டம் எங்க புள்ளைங்களுக்கு இல்லாம வெலகணும்!’’

- கைகூப்பிக்கொள்கிறார், ஹீரோவின் அம்மா!

ந.ஆஷிகா
படங்கள்: ர.சதானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism