Published:Updated:

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

அதிரவைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

அதிரவைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு

Published:Updated:

`பாலியல் வன்கொடுமை செய்தவனுடன், தன் வாழ்க்கை மற்றும் பிறந்திருக்கும் குழந்தையின் எதிர்காலத்தைக் கருதி சம்பந்தபட்ட பெண் சமரசப் பேச்சு நடத்த வேண்டும்’ என்று சமீபத்தில் (ஜூன் 23, 2015) வெளியாகியிருக்கும் சென்னை, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக விகடன் இணையதளத்தில் நாம் வெளியிட்ட கட்டுரை (http://bit.ly/1Ie2Mcb) பலரையும் பொங்கி எழ வைத்திருக்கிறது.

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், கடந்த 2009-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த குற்றத்துக்காக கடலூர் மகளிர் நீதிமன்றம் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மோகன். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து டி.என்.ஏ பரிசோதனையில் மோகன்தான் தந்தை என்று நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில், ‘அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவுகொண்டேன்’ எனவும் மோகன் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவருடைய மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், ‘பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மோகன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’ என்று சமரச மையத்துக்கு பரிந்துரைத்திருப்பதோடு, அவருக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

சர்ச்சையை உருவாக்கியிருக்கும் இத்தீர்ப்பு பற்றி சிலர் இங்கே தங்களின் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

த.அழகப்பன், முன்னாள் அமர்வு உறுப்பினர், இளைஞர் நீதிகுழுமம், சென்னை

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

‘‘அநாதரவான சூழலில் நிற்கும் இந்தப் பெண்ணுக்கு சமரசத் தீர்வு மையத்தின் மூலம் சுதந்திரத்துக்கு இணக்கம் அளித்து, அமைதியான வழியில் சுமூகமான தீர்வு அமைய இது வழிவகுக்கிறது. பாதிப்புக்குள்ளான இந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் எதிர்கால மறுவாழ்வுக்கு, சமூக மைய நீரோட்டத்தில் கலந்துகொள்ளும் வழிமுறைகளின் மூலம் புதுவாழ்வு கிடைக்கும் வகையில் இந்த உத்தரவானது அமைந்துள்ளது. இது தீர்ப்பல்ல... உத்தரவு மட்டுமே.’’

சுதா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்.

‘‘உயர் நீதிமன்ற மகளிர் கோர்ட்டில் இதுபோன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன. இதில் 60% பேர் இப்படித்தான் கைக்குழந்தையோடு வந்து நிற்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்த ஆண்கள், பாதிக்கப்பட்ட பெண் மூலமாகவே சமரச மனுவைத் தாக்கல் செய்ய வைத்து, வழக்கை திரும்பப் பெறச் செய்கிறார்கள். இதெல்லாம் ஒரு நாடகம் போல அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

அதாவது, தன்னுடைய குழந்தையின் எதிர்காலம், குடும்ப வறுமை, குடும்பத்தாரின் ஆதரவின்மை, படிப்பறிவின்மை, சமூகத்தின் ஏச்சுப்பேச்சுகள் என பலதரப்பட்ட காரணத்தால், ஆண் பேசும் சமரசத்தில் விழுந்து, நீதியரசர் முன்னால், `நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகிட்டோம். என்னை நல்லா வெச்சு காப்பாத்துறார். எங்க குழந்தைக்காகவாவது அவரை மன்னிச்சுடுங்க’ என்று பாதிக்கப்பட்ட பெண் கேட்கும்போது, நீதிக்கும் அப்பாற்பட்டு, பெண்களின் நலனுக்காக இதுபோன்ற தீர்ப்புகளை அளிக்கவேண்டிய சூழ்நிலையில் தீர்ப்பளிக்கிறார்கள் நீதியரசர்கள்.

நீதிமன்றம் மன்னித்து தீர்ப்பளித்த பிறகு, பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளி இரண்டொரு மாதங்கள் அந்தப் பெண்ணுடன் இருந்துவிட்டு, அவளை நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றுவிடுவதுதான் நடக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதேபோன்றதொரு வழக்கில், `உன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டு, குழந்தையையும் நீ நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதில் சந்தோஷமே. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் இல்லாமல் போய்விடாது. எனவே, அதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.’’

மதிமாறன், எழுத்தாளர், பேச்சாளர்

‘பாலியல் வன்கொடுமை செய்தவனுடன் சமரசம்..!’

‘‘கட்டப்பஞ்சாயத்துகளை கிராமங்களில்கூட இப்போது ஏற்றுக்கொள்வதில்லை. குற்றவாளியின் பக்கமே சட்டம் இருக்கிறது என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு காட்டுகிறது.’’

``சமரசத்துக்கு சம்மதிக்காட்டி, உன்னைக் கொன்னுடுவேன்!’’

மோகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணிடம் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது), உயர் நீதிமன்றத்தின் இந்த `சமரசம்’ குறித்துக் கேட்டபோது, ``இந்தத் தீர்ப்புல எனக்குச் சுத்தமா உடன்பாடு இல்ல. என் விருப்பத்தோடதான் என்னோட இருந்ததா நீதிமன்றத்துல அவங்க சொல்லியிருக்கிறது சுத்தப் பொய். இப்ப, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி வெளியில வந்திருக்காங்க. ஆனா, ஜெயில்ல இருந்து வந்ததுக்குள்ளேயே, `ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வந்துடு. நான் வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடறேன். நீ வேற வழிய பாத்துக்கோ. இல்லைன்னா உன்னையும் உன் கொழந்தையையும் கொன்னுடுவேன்’னு மிரட்டறாங்க.

நீதிமன்றம் சொல்ற மாதிரி இவங்கள வெளியில கொண்டு வந்து விட்டுட்டு நானும் என் குழந்தையும் சாகறதா? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்னை வெச்சி ஒழுங்கா வாழ்வாங்களானு யாராவது வந்து பாக்கத்தான் போறாங்களா? தற்கொலைப் பண்ணிக்கிற அளவுக்கு நெருக்கடி கொடுப்பாங்க. என் கொழந்தைக்காகவாவது நான் உயிரோட இருக்கணும்!’’ என்று கண் கலங்கினார்.

`சமரசம் செய்துகொள்ளுங்கள்’ என்று உத்தரவிடு வதற்கு முன்பாக, ஒரு வார்த்தை இந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கலாமே அந்த நீதிபதி!

 - ஜெ.முருகன்

வே.கிருஷ்ணவேணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism