Published:Updated:

"உழைப்பை மட்டும் போடுங்க... வெற்றி வந்து சேரும்!"

- பார்வையற்ற முதல் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பெனோ!

"உழைப்பை மட்டும் போடுங்க... வெற்றி வந்து சேரும்!"

- பார்வையற்ற முதல் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பெனோ!

Published:Updated:

‘‘தமிழ்நாடு மட்டுமல்ல, அகில இந்தியா வும் பாராட்டும்படி சாதிச்சிட்டீங்க! இதைவிட மகிழ்ச்சியான தருணம் உங்க வாழ்வில்..!’’ என்றால்,

‘‘என் வாழ்க்கையின் ஒவ்வாரு நொடியையும் வரமாதான் பார்க்கிறேன்!’’ என்று வாழ்க்கையின் மீதான ரசனையை வலுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார், சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக (ஐ.எஃப்.எஸ்.) பொறுப்பேற்றிருக்கும் பெனோ ஜெஃபைன்! இந்தப் பதவிக்கு வரும் முதல் பார்வையற்ற பெண் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார் பெனோ.

"உழைப்பை மட்டும் போடுங்க... வெற்றி வந்து சேரும்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2013-14ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 343-வது தரவரிசை எண் பெற்ற பெனோவுக்கு, இந்த ஜூன் 12-ம் தேதி மத்திய அரசிடமிருந்து ஐ.எஃப்.எஸ். பணியில் சேருவதற்கான ஆணை வர... தேசிய மீடியாவின் வெளிச்சம் பெனோ மீது!

சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வாழ்த்துகளுடன் சென்றபோது, “இந்த வெற்றிக்கு நான் மட்டும் சொந்தம் கிடையாது. கண்ணுக்கு கண்ணா இருந்து என்னை கவனிச்சுக்கிட்ட எங்கப்பா, அம்மாவும்தான்!’’

- அம்மாவின் கைகளைப் பற்றியவாறு பேச ஆரம்பித்தார் பெனோ.

‘‘அப்பா சார்லஸ், ரயில்வேயில் டெக்னீ ஷியன். அம்மா மேரி பத்மஜா, இல்லத்தரசி. ப்ளஸ் டூ வரைக்கும் சிறுமலர் பார்வைக் குறைவுடையோர் மேல்நிலைப் பள்ளியில படிச்சேன். இளங்கலை ஆங்கிலம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், முதுகலை லயோலா கல்லூரியிலும் முடிச்சேன். சின்ன வயசுல இருந்து டாக்டராகணும், வக்கீலாகணும்னு நிறைய ஆசை. அப்படி ப்ளஸ் ஒன் படிக்கும்போது என் மனசுல வந்த ஆசைதான்... `பெனோ ஐ.ஏ.எஸ்’! அந்த மூணு எழுத்து மூலமா நிறைய எழுச்சி பண்ணலாம்னு எனக்குள்ள விழுந்த நம்பிக்கை, அதை அடையவும் வெச்சிருக்கு!’’

- வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் தன்னம்பிக்கையைத் தடவி பேசுபவருக்கு, சிவில் சர்வீஸ் தேர்வு கனிந்தது இரண்டாவது முயற்சியிலேயே!

‘‘எம்.ஏ., முதல் வருடம் படிக்கும்போதுதான் முதல் முறை தேர்வு எழுதினேன். பாலிட்டிக்ஸ் மட்டும்தான் பிரெய்ல் முறையில் படிச்சேன். மற்ற பாடங்களை அம்மா படிச்சுக் காட்டுவாங்க. ஆனா, அப்போ பிரிலிம்ஸ் மட்டும்தான் கிளியர் பண்ண முடிஞ்சது. மெயின் தேர்வில் வெளியேறிட்டேன். முதல் அட்டெம்ப்ட்டுக்கு நான் படிச்ச அனுபவம்தான், அதுக்கடுத்து எழுதின பேங்க் எக்ஸாமில் புரொபேஷனரி ஆபீஸர் வேலையை வாங்கிக் கொடுத்து, சிவில் சர்வீஸ் தேர்வையும் சேர்த்தே முடிக்க வெச்சது. ஒரு விஷயம் முதல் முயற்சியில நடக்கலைன்னா, அது எப்பவுமே நடக்காதுன்னு அர்த்தம் கிடையாது. இதுதான் லட்சியம்னு முடிவு பண்ணி உழைப்பை மட்டும் போடுங்க... வெற்றி கண்டிப்பா ஒரு நாள் வந்து சேரும்!’’

- அன்பாக, அழுத்தமாகப் பேசும் பெனோவுக்கு, மேடைப்பேச்சு இன்னொரு அடையாளம். இவர் தன் பேச்சால் கட்டிப்போட்டது அவரின் பள்ளி, கல்லூரியை மட்டுமல்ல... உலக அரங்கையும்தான்!

ஆம்...  2008-ல் வாஷிங்டனில் நடந்த உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் 100 நாடுகளிலிருந்து வந்திருந்த 405 மாணவர்களில், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகச் சென்றது பெனோ மட்டும்தான். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பார்வைக் குறைபாடுள்ள ஒரே மாணவி இவர் மட்டும்தான். இந்தியப் பெண்களைப் பற்றி உலக அரங்கில் பேசி விட்டு வந்த இவர், அந்த ஆண்டுக்கான ‘நம்பிக்கை நட்சத்திர’ங்களில் ஒருவராக ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘‘நடக்க ஆரம்பிச்ச நாள் தொடங்கி இதுநாள் வரைக்கும், நான் எங்க போகணும்னு சொன்னாலும் அங்க என் விரல் பிடிச்சி கூட்டிட்டுப் போற அப்பா, நேரம்காலம் பார்க்காம படிச்ச அம்மா, நல்ல நட்பு... இப்படி எல்லாமே இருக்கும்போது கண் பார்வை இல்லைங்கற ஒரு குறைபாட்டுக்காக முடங்கிப் போனா, அதுதான் தப்பு. ‘முத்தற்ற சிற்பிகள் என் முகத்தில் உண்டு’னு என் குறையைக்கூட நான் கவிதையாதான் சொல்வேன்!’’

- பாஸிட்டிவ் ஊற்றாகப் பெனோ பேச... ஈன்ற பொழுதினும் பெரிதுவக்குகிறார்கள், பெனோவின் பெற்றோர்!

க.தனலட்சுமி, படங்கள்: தி.கௌதீஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism