Published:Updated:

பட்சண விற்பனையில் பலே லாபம்!

70 வயதில் சாதிக்கும் சரோஜா

பட்சண விற்பனையில் பலே லாபம்!

70 வயதில் சாதிக்கும் சரோஜா

Published:Updated:

‘‘எனக்கு 70 வயசாகுது. இன்னும் உழைக்கத்தான் பிடிக்குது!’’

-கைமுறுக்கு சுற்றியவாறே சரோஜா வெங்கட்ரமணி சொல்லும்போது, ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ‘சத்யநாராயணா ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்’ உரிமையாளரான சரோஜா, கடந்த 18 வருடங்களாக திருமணங்கள், காதணி விழாக்கள், சீமந்தம், பூணூல் விழா என பலதரப்பட்ட விசேஷங்களுக்கும் சீடை, முறுக்கு, லட்டு என ஆர்டரின் பேரில் பட்சணங்கள் செய்து கொடுக்கும் சீனியர் தொழில்முனைவோர்!

பட்சண விற்பனையில் பலே லாபம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எனக்கு மயிலாடுதுறைதான் சொந்த ஊர். திருமணமாகி குரோம்பேட்டை வந்தப்போ, என்னோட மாமியாருக்கு பலகாரம் எல்லாம் நல்லா செய்ய வரும். நான் வந்ததும் எனக்கும் செய்யணும்போல ஆசையா இருந்தது. அதை அவங்ககிட்ட சொன்னேன். அவங்க அழகா சொல்லிக்கொடுக்க, நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். இதோ இன்னிவரைக்கும் என்னோட கைப்பக்குவத்தை பாராட்டாத ஆளே கிடையாது. எல்லாத்துக்கும் காரணம் என் புகுந்த வீடுதான்’' எனப் பூரிக்கிறார் சரோஜா.

``18 வருஷத்துக்கு முன்ன மாமியார் ஆசீர்வாதத்தோட தெரிஞ்சவங்களுக்கு பட்சணங்களை செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். வரவேற்பு நல்லா இருக்க, ‘சத்யநாராயணா ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்’ கடையை ஆரம்பிச்சு, தட்டை, சீடை, முறுக்கு, லட்டு, அதிரசம்னு விற்க ஆரம்பிச்சேன். கஸ்டமர் ஒருத்தர், ‘எங்க வீட்டு விசேஷத்துக்கு பட்சணம் செய்து கொடுங்க’னு ஆர்டர் சொல்ல, இன்னிவரைக்கும் மாசம் குறைந்தது ஒரு ஆர்டராவது இல்லாம இருந்ததில்ல’’ எனும் சரோஜா, தன் குடும்பத்தையே இத்தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்.

‘`கணவர், மகன், மருமகள், பேரன், பேத்திகள் வரை எல்லோருமே உதவியா இருப்பாங்க. அப்போதான் பெரிய ஆர்டர்களை நேரத்துக்கு முடிக்க முடியும். மாவு வாங்கி வர்றது, அடுப்பில் நிற்பது, பேக்கிங், சீலிங்னு எல்லாருக்கும் வேலை சரியா இருக்கும்.

பட்சண விற்பனையில் பலே லாபம்!

அலங்கார டிஸ்ப்ளே முறுக்குகளையும் செய்துகொடுக்கிறோம். பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்னு தேவைப்படும் நிறங்களை அரிசிமாவில் கலந்து, பூக்கள், உருவங்கள்னு டிசைனா பிழிந்து, எண்ணெயில் போட்டு பாதி வேக்காட்டில் (முழுதாக வெந்தால் நிறம் மாறிவிடும்) எடுத்தா... ரெடி. இந்த முறுக்கை சாப்பிட முடியாது. இந்த அலங்கார சீர்வரிசைத் தட்டை கல்யாணம், காதணி, பூணூல், வளைகாப்புனு எல்லா விசேஷங்களிலும் 50, 100 எண்ணிக்கையில் வைப்பாங்க. டிஸ்பிளே முறுக்குகளை கிலோ 350 ரூபாயிலிருந்து விற்பனை செய்றோம்!’’ - தொழிலின் அப்டேட்களிலும் அசத்துகிறார் சரோஜா!

‘‘பலகாரக்கடைதானேனு பலர் குறைவா பேசுவாங்க. ஆனா, மாத வருமானத்தைச் சொல்லும்போது, நிமிர்ந்து பார்ப்பாங்க. கைப்பக்குவம் உள்ள பெண்கள், தைரியமா களமிறங்கி ஜெயிக்கலாம். இதுக்கு நான்தான் உதாரணம்!’’
 
- பேக்கிங் சீல்களை செக் செய்தவாறே சொல்கிறார் சரோஜா!

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism