நள்ளிரவு வானவில்!
ரிதன்யா ஒட்டுமொத்த உடம்பும் உறைந்து போனவளாய் நின்றிருக்க, திவாகர் அவளுடைய முகமாற்றத்தைப் படித்துவிட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். உடனே முகம் மாறி வியர்த்தான்.
'எ...எ.... என்ன உன் புருஷன் வர்றான்..?'
'அதான் எனக்குப் புரியலை. நேத்து ராத்திரி என்கிட்ட போன்ல பேசும்போது ஃப்ளைட் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகலைன்னு சொன்னார். இப்படி திடீர்னு புறப்பட்டு வருவார்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.'
'இப்ப நீ என்ன பண்ணப்போறே..? நாங்க ரெண்டு பேரும் யார்னு கேட்டா நீ உன் புருஷன்கிட்டே என்ன சொல்லப்போறே?'
'என்ன சொல்லணும்?'
'பூங்கொடி உன் ஃப்ரெண்ட்னு சொல்லு. நான் அவளோட ஹஸ்பண்ட். ஊரிலிருந்து இன்னிக்குக் காலையில்தான் வந்தோம். ரெண்டு நாள் தங்கியிருந்து ஊரைச் சுற்றிப் பார்க்கப் போறோம். இதுதான் உன்னோட பதிலா இருக்கணும். எல்லாத்துக்கும் மேலா உன்னோட நடவடிக்கைகள் இயல்பா இருக்க வேண்டியது அதிமுக்கியம்.'


அவருக்கு உங்க மேல எந்த ஒரு சந்தேகமும் வராதபடி நடந்துக்கிறேன்... போதுமா?' சொன்ன ரிதன்யா, வேகவேகமாக வீட்டு வாசலை நோக்கிப் போனாள். டாக்ஸியின் டிக்கியிலிருந்து ஒரு ரோலர் சூட்கேஸை இறக்கிக்கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன் அவளைப் பார்த்து மெலிதாய் புன்முறுவலித்துக்கொண்டே


குட் மார்னிங் மேடம்' என்றான். இதயத் துடிப்பு உச்சபட்சத்தில் இருந்தாலும் பதிலுக்குப் புன்னகை செய்த ரிதன்யா கேட்டாள்.

'என்ன, திடீர்னு வந்து நிக்கறீங்க... ஃப்ளைட் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகலைன்னு சொன்னீங்களே?'
'உனக்கு இப்படியொரு ப்ளஸன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் நேத்திக்கு ராத்திரி பேசும்போது நான் சொல்லலை. ஃப்ளைட் ஒரு மணி நேரம் லேட்... இல்லேன்னா, இன்னும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருப்பேன்' சொன்ன ஹரிகிருஷ்ணன், டிக்கியிலிருந்து கீழே இறக்கிய ரோலர் சூட்கேஸை ரிதன்யாவுக்குப் பக்கத்தில் வைத்தான். வேறு ஒரு ஏர்பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டே சொன்னான்...
'ரிது..! இந்த சூட்கேஸைக் கொண்டுபோய் உள்ளே வை. நான் உடனடியா இப்போ பென்னர்கட்டா போகணும். வீட்டுக்குள்ளே வந்து ஒரு டம்ளர் காபி சாப்பிடக்கூட நேரமில்லை. இதே டாக்ஸியில் நான் கிளம்பறேன்...'
ரிதன்யாவை வியப்பு வாரிச் சுருட்டியது.
'என்னங்க இது... பெங்களூரு மண்ணை மிதிச்சும் மிதிக்காததுமா அப்படியென்ன அவசர வேலை...? ஏதோ கூரியர் ஆள் வந்து ஒரு பார்சல் குடுத்துட்டுக் கிளம்பற மாதிரி கிளம்பறீங்க... மொதல்ல உள்ளே வாங்க. ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டுக் கிளம்பலாம்.'
'ரிது... நான் ஒரு நிமிஷத்தைக்கூட இங்கே வேஸ்ட் பண்ணிட்டிருக்க முடியாது. காரணம், என் கம்பெனியோட இம்மீடியட் பாஸ் ஒரு வெளிநாட்டு புராஜெக்ட் விஷயமா பென்னர்கட்டா வந்து அங்கேயிருக்கிற 'பி கம்ஃபர்ட்’ ஹோட்டலில் ஸ்டே பண்ணியிருக்கார். எனக்கும் அதே ஹோட்டலில் ரூம் போட்டிருக்காங்க. இன்னிக்குச் சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும் எனக்கு அங்கே வேலை இருக்கு. அதுக்கப்புறம் நாலஞ்சு நாளைக்கு நான் ஃப்ரீ. இப்ப நின்னு பேசிட்டிருக்க நேரமில்லை. எல்லாத்தையும் சாயந்தரமா வந்து விவரமா சொல்றேன்...!'
ஹரிகிருஷ்ணன் படபடவென்று பேசிக்கொண்டே ஏர்பேக்கோடு டாக்ஸியின் பின்ஸீட்டில் ஏறி உட்கார்ந்தான்.
'என்னங்க... ஒரு டம்ளர் தண்ணியாவது...'
ஹரிகிருஷ்ணன் சிரித்தான்.
'ஒண்ணும் வேண்டாம். என் னோட ஒருநாள் தேவைக்கான எல்லா விஷயங்களும் இந்த ஏர்பேக்ல இருக்கு. நீ மனசைப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன். ராத்திரி உனக்குப் பிடிச்ச 'வார்ம் கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டுக்குப் போய் டின்னர் சாப்பிடுவோம்.'
ரிதன்யா எந்திரத்தனமாய் தலையாட்டிக் கொண்டு இருக்கும்போதே டாக்ஸி புறப்பட்டுவிட்டது. அவளுடைய முதுக்குக்குப் பின்னால் திவாகரின் சிரிப்பு கலந்த பேச்சுக்குரல் கேட்டது.
'கடவுள் நம்ம பக்கம் இருக்கார் ரிதன்யா. உன்னோட புருஷனுக்கு ஏதோ தலை போகிற முக்கியமான வேலை இருக்கப் போய் கிளம்பிட்டான். வீணா ஒரு பொய்யைச் சொல்லி எங்க ரெண்டு பேரையும் கணவன் மனைவியா அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லாம போயிடுச்சு. இனி உன் புருஷன் சாயந்தரம் அஞ்சு மணிக்குத்தான் திரும்பி வருவான். அதுக்குள்ள 'நள்ளிரவு வானவில்’ எங்க கைக்கு வந்துட்டா, உனக்கு எங்ககிட்டயிருந்து, பரிபூர்ண விடுதலை. இன்னிக்கு ராத்திரி புருஷன் கூட போய் ஹோட்டல்ல 'நைட் டின்னர்’ சாப்பிடலாம். நாளைக்குக் காலையில் ஊட்டிக்கு கிளம்பிப் போய் உடம்பு சரியில்லாத குழந்தையைப் பார்க்கலாம்.'
திவாகர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய செல்போன் வெளிச்சமாய் வைப்ரேஷனில் ஒளிர்ந்தது. அழைப்பது யார் என்று பார்த்தான். துபாயிலிருந்து உமர். சற்றே பதற்றத்தோடு பேசினான்.
'என்ன திவாகர்..! போன் பண்ணியிருந்தியா? நான் அப்போ பாத்ரூம்ல இருந்தேன். என்ன விஷயம்?'
'துபாய்ல நான் உனக்கு கொடுத்த வேலையை நீ சரியா பண்ணலை போலிருக்கே..?'
'என்ன சொல்றே?'

'ரிதன்யாவோட புருஷன் ஹரிகிருஷ்ணன் இப்போ எங்கே இருக்கான்?'
'துபாய்ல அவனோட அப்பார்ட்மென்ட்ல.'
'அப்படீன்னு நீ நினைச்சிட்டிருக்கே!'
'ஏன்... அதுல உனக்கென்ன சந்தேகம்?'
'அந்த ஹரிகிருஷ்ணன் இப்போ பெங்களூர்ல இருக்கான்.'
'நீ என்ன சொல்றே?'
'உண்மையைச் சொல்லிட்டிருக்கேன். நீ எப்படியோ அவனை கோட்டை விட்டுட்டே! அவன் ஃப்ளைட் ஏறி வந்துட்டான்.'
'ஹரிகிருஷ்ணனைக் கண்காணிக்க ஷிஃப்ட் முறையில் ரெண்டு பேரைப் போட்டிருந்தேன். அவங்க எப்படியோ ஏமாந்துட்டாங்க போலிருக்கு. ஸாரி திவாகர்!'
'இனிமே ஸாரி சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. நீ உடனே புறப்பட்டு பெங்களூரு வந்துரு. நமக்கு இனிமே இங்கேதான் வேலை.'
'பதினோரு மணிக்கு ஃப்ளைட் இருக்கு. ஆனா, அதுல டிக்கெட் கிடைக்குமானு தெரியலை.'
'ட்ரை பண்ணு...' திவாகர் செல்போனை அணைத்துவிட்டு ரிதன்யாவிடம் திரும்பினான்.
'இதோ பார் ரிதன்யா..! உன்னோட புருஷன் துபாயிலிருந்து வந்துட்டதாலே இனிமே காரியங்கள் எனக்கு வேகமா நடந்தாகணும், நாம மூணு பேருமே சீக்கிரம் சாப்பிட்டு ரெடியாகணும். பத்து மணிக்கெல்லாம் ஒயிட்ஃபீல்டில் இருக்கணும். அங்கே 'ப்ளசன்ட் ஓஷன்’ ஹோட்டலில் தங்கியிருக்கற யோகானந்த், ரூபேஷை பத்தரை மணிக்குள்ள மீட் பண்ணணும். 'இனி பொறுப்பதில்லை’ பென்ட்ரைவைக் காட்டி அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே 'நள்ளிரவு வானவில்’ சம்பந்தப்பட்ட உண்மைகளை வாங்கணும்.'
ரிதன்யா சில விநாடிகள் மௌனமாய் இருந்துவிட்டுக் கேட்டாள்...


இந்த 'இனி பொறுப்பதில்லை’ பென்ட்ரைவுக்குள்ளே எது மாதிரியான விஷயம் இருக்குன்னு நீ இன்னமும் சொல்லவேயில்லை...'
'அது உனக்கு தேவையில்லாத விஷயம்னு நானும் சொல்லிட்டேன். மீறி நீ பிடிவாதம் பிடிச்சா, நான் அதுக்கப்புறம் வேற மாதிரி ரியாக்ட் பண்ண வேண்டியிருக்கும்' திவாகர் பேச்சை நிறுத்த, பூங்கொடி தொடர்ந்தாள்...
'என்ன அப்படி பார்க்கிறே..? சாயந்தரம் அஞ்சு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டுப் போன உன்னோட புருஷனை என்னிக்குமே வராதபடி செய்ய எங்களால முடியும். இப்ப சொல்லு... உனக்கு இந்த பென்ட்ரைவ் மேட்டர் முக்கியமா... இல்லை... உன் புருஷன் இந்த வீட்டுக்கு வர்றது முக்கியமா..?'
ரிதன்யா பயமாக அவர்களைப் பார்த்தாள்.
'இவர்கள் சாதாரண நபர்கள் கிடையாது. எல்லாவற்றையுமே துல்லியமாக தீர்மானம் செய்து கொண்டு களம் இறங்கியிருக்கிறார்கள். நான் பிடிவாதம் பிடித்தால் இழப்பு எனக்குதான். இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்துவிட்டுப் போவது உத்தமம்!'
'என்ன மனசுக்குள்ளே பட்டிமன்றம் நடத்தறியா?'
'எனக்கு என்னோட குடும்பம் முக்கியம்.'
'அப்படீன்னா... சீக்கிரமா போய் ரெடி பண்ணு, இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே இங்கிருந்து கிளம்பி, பத்து மணிக்குள்ளே ஒயிட்ஃபீல்ட் போய்ச் சேரணும்.'
ரிதன்யா உள்ளே போக, டீபாயின் மேல் சைலன்ட் மோடில் இருந்த அவளுடைய செல்போன் பச்சை நிறமாக ஒளிர்ந்து, ஒரு 'இன்கம்மிங் கால்’ வருவதைக் காட்டியது. திவாகர், பூங்கொடியிடம் குரலைத் தாழ்த்தினான்.
'போன்ல யார்னு பாரு?'
பூங்கொடி செல்போனை எடுத்து டிஸ்ப்ளேயைப் பார்த்துவிட்டு கலவரமாக திவாகரை ஏறிட்டாள்.
'ஊட்டி கான்வென்ட் பிரின்ஸிபால் கூப்பிடறாங்க!'
'விஷயம் என்னன்னு கேளு!'
பூங்கொடி செல்போனை தன் இடதுகாதுக்கு ஒற்றி மெள்ள குரல் கொடுத்தாள்.
'யெஸ்...'
'நான் 'லிட்டில் ரோஸஸ்’ கான்வென்ட் பிரின்ஸிபால் மரிய புஷ்பம். ஊட்டியிலிருந்து பேசறேன். நீங்க மதர் ஆஃப் அபிநய்தானே?'
'ஆமா!'
'உங்க சன் அபிநய்க்கு ஃபீவர் குறையவேயில்லை. கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன். மே பி ஸ்வைன் ஃப்ளூ. கோயம்புத்தூருக்குக் கொண்டுபோய் ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் தர்றது பெட்டர்னு இங்கேயிருக்கிற டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ்ல புறப்பட்டுப் போறோம். நீங்களும் கோயம்புத்தூர் வந்துட்டா பரவாயில்லை. வந்துடறீங்களா..?'
'வ... வ... வந்துடறேன்!'
'ப்ளைட்ல வந்துடறது பெட்டர்' மறுமுனையில் பிரின்ஸிபால் செல்போனை அணைத்துவிட, பூங்கொடி இறுகிப் போன முகத்தோடு திவாகரை ஏறிட்டாள். அவன் கேட்டான்...
'என்ன?'
பூங்கொடி விஷயத்தைச் சொல்ல, திவாகர் தன் நெற்றியை இடதுகை விரல்களால் பத்து விநாடிகள் வரை தேய்த்துக் கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்தான்.
'பூங்கொடி!'
'ம்...'
'ரிதன்யாவின் செல்போனிலிருந்து அவளுடைய சிம்கார்டை எடுத்துட்டு நம்மகிட்ட இருக்கிற ஒரு டம்மி சிம்கார்டைப் போட்டுரு!'
சென்னை.
அடையார், இந்திரா நகரின் மரங்கள் அடர்ந்த அந்த கார்ப்பரேஷன் பார்க் நல்ல முறையில் பரா மரிக்கப்படாததன் காரண மாக சற்றே சிதிலமடைந்து காணப்பட்டது. தரை யில் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்கள் உடைந்து போயிருக்க... கமிஷனர் ராஜ கணேஷும் செந்தில் குமாரும் கவனமாக நடை போட்டார்கள்.
பூங்காவில் ஆட்கள் அதிகமில்லை. பார்வைக்குக் கிடைத்த இரண்டொருவரும் பெயின்ட் உதிர்ந்துபோன ஸ்டீல் பெஞ்ச்களில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். ராஜகணேஷ் நடை போட்டுக்கொண்டே கேட்டார்.
'மீராவும் அந்த இளைஞனும் உங்களைப் பார்த்துடலையே?'
'இல்ல ஸார். நான் ரொம்பவும் ஜாக்கிரதையாத்தான் ரெண்டு பேரையும் ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். அதோ... அந்த மரத்துக்குப் பின்னாடிதான் அவங்க உட்கார்ந்துட்டிருக்காங்க ஸார்...'
சற்று தூரத்தில் ஒரு பெரிய புங்கைமரம் பூத்துக் குலுங்க, இருவரும் அதை நோக்கி நடந்தார்கள்.
'பையன் எப்படியிருக்கான்?'
'இப்போ சினிமாவில் நடிக்க வர்ற பசங்க மாதிரி அழகா இருக்கான் ஸார்.'
'மீரா மேல நான் சந்தேகப்புள்ளி வெச்சது சரியாப் போச்சு... ஞானேஷோட மரணத்துக்கும் மீராவோட காதலன் பிரணவுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு. அவனைக் கொண்டுபோய் லாக்கப்புக்குள்ளே வெச்சு அடிவயித்துல ரெண்டு மிதி மிதிச்சா போதும்... சகலவிதமான உண்மைகளும் வெளியே வந்துடும்.'
மரத்தைச் சமீபித்தார்கள்.
மீராவின் ஆரஞ்சு நிற துப்பட்டா ஒரு பத்து சதவிதம் காற்றில் பறப்பது தெரிந்தது.
ராஜகணேஷ் மரத் துக்குப் பின்பாக போய் நின்றுகொண்டு மெள்ள எட்டிப் பார்த்தார்.
மீரா கறுப்பு நிற சல்வார் கம்மீஸில் தலை குனிந்தபடி உட்கார்ந்திருக்க, அந்த இளைஞன் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டிலும் மஞ்சள் நிற டிஷர்ட்டிலும் ஒரு

ஹேண்ட்ஸம் கய்’ மாதிரி அவளுக்கு எதிரே சம்மணம் போட்டு உட் கார்ந்து, புற்களின் தலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்தான்.
அவர்களிடையே எந்தப் பேச்சும் இல்லை. இருவரும் மௌனம் காத்தார்கள். ராஜகணேஷும், செந்தில்குமாரும் மூச்சை அடக்கிக்கொண்டு மரத்தோடு உடம்புகளை ஒட்ட வைத்துக்கொண்டு அப்படியே நின் றார்கள்.
சரியாக ஒரு நிமிஷத்துக்குப் பிறகு அவர்களுடைய மௌனம் கலைந்தது. பேச்சு பிறந்தது.
'அப்புறம்..?' என்றாள் மீரா.
'நீதான் சொல்லணும்' என்றான் அவன்.
'ஏன்... நீ சொன்னா என்னவாம்?'
'இதோ பார் மீரா..! நீதான் போன் பண்ணி என்னைக் கூப்பிட்டே... நான் வந்தேன்.'
'உன்னைப் பார்க்கணும் போலிருந்தது. அதான் போன் பண்ணினேன்.'
'சரி, பார்த்தாச்சில்ல... கிளம்புவோம். இனிமே இது மாதிரி மீட்டிங்கெல்லாம் வேண்டாம். ஞானேஷோட கேஸ் ஒரு முடிவுக்கு வர்ற வரைக்கும் நீயும் நானும் அஞ்ஞாத வாசம் இருக்கணும்; மனசை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே வெச்சுக்கணும். போலீஸ் கண்ணுல நாம பட்டுட்டா அதுக்கப்புறம் நாம சில விபரீத விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்!'
'போலீஸ் பார்வையில் பட்டுட்டீங்களே..!'
சொல்லிக்கொண்டே மரத்தின் மறைவிலிருந்து வெளிப்பட்டார் ராஜகணேஷ்.
தொடரும்...
ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ்