Published:Updated:

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

விஜய் சேதுபதியின் கிச்சன் கலகல

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

விஜய் சேதுபதியின் கிச்சன் கலகல

Published:Updated:
"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

மையல் செய்வது, சமையலைப் பற்றிப் பேசுவது, சமையலைப் பற்றிப் படிப்பது... இந்த சந்தோஷங்களுக்கு இணையில்லை! அந்த மகிழ்ச்சியை வாசகர்களுக்குப் பரிசளிக்க ஆரம்பிக்கப்பட்டது, ‘அவள் விகடன் மையல்’ சமையல் இதழ்!

முற்றிலும் சமையலுக் கான தமிழின் முதல் இதழ் என்ற பெருமையுடன் களமிறங்கியபோது, ‘புத்தகம் முழுக்கவே சமையலுக்கா!’ என்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து, வாசகிகள் தந்த பேராதரவுடன், ஜூலை 5-ம் தேதியன்று ஆண்டு விழாக் கொண்டாட்டமும் கண்டிருக்கிறது அவள் விகடன் கிச்சன் இதழ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரவுன் பிளாசா சென்னை, அடையார் பார்க் ஹோட்டலில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கிய ஹட்சன் பனீர் மற்றும் சக்தி மசாலா நிறுவனங்களுடன் தானும் கைகோத்து நின்றது என்.எ.சி சில்வர்மைன் ஜுவல்லரி!

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ரெசிப்பியான முந்நீர் (இளநீர், நுங்குநீர் மற்றும் கரும்புச்சாறு கலந்த கலவை), வெல்கம் டிரிங்ஸாக வழங்கப் பட, எடுத்ததுமே அசந்து போனார்கள் விருந்தினர்கள்.

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

எழுத்தாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதி பர்கள், சினிமா, டி.வி, எஃப்.எம் பிரபலங்கள், ஆன்மிக பிரமுகர்கள் இவர்களுடன் அவள் விகடன் கிச்சன் இதழில் தங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவரும் இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திர சமையல்கலை வல்லுநர்களும் பங்கேற்க... விழாவெங்கும் நட்சத்திரப் பிரகாசம்!

ஆண்டு விழா சிறப்பிதழாக, அவள் விகடன் கிச்சன் இதழ் ‘பார்ட்டி ஸ்பெஷல்’ என்கிற வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த இதழை விகடன் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வெளியிட, திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி முதலாவதாக பெற்றுக்கொண்டார். அடுத்ததாக கிரவுன் பிளாசா ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

பா.சீனிவாசன் தன்னுடைய பேச்சில், ``கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு முன்ன நான் பாத்திருக்கேன்... என் பாட்டி ஒரெயொரு கேள்விதான் கேப்பா; 30 வருஷமா பாத்திருக்கேன் எங்கம்மா ஒரே கேள்விதான் கேப்பா; 20 வருஷமா பாத்திட்டிருக்கேன் என்னுடைய மனைவியும் ஒரே கேள்வியத்தான் கேட்கிறா; என் பொண்ணு, பல ஆயிரம் மைல் தாண்டி படிச்சுட்டிருக்கா. சனிக்கிழமைதோறும் அங்க நடக்கும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் ஃபிரெஷ்ஷாக காய்கறிகளைக் வாங்கிக் கொண்டு, அம்மாவிடம் அவ கேட்டுட்டிருப்பா... அந்த மில்லியன் டாலர் கேள்வியை! யாராவது சொல்லுங்களேன் அது என்ன கேள்வினு?’’ என்று அவர் நிறுத்த...

``இன்னிக்கு என்ன சமையல்?’’ என்று கூட்டத்திலிருந்து குரல்கள்.

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

``அவ்ளோதான். இதுதான் அவள் கிச்சனுடைய பாட்டம் லைன். இதுலதான் நாங்க ஆரம்பிச்சோம்’’ என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.

‘‘மொதல்ல நல்லா பசிக்குது’’ என்றபடியே மைக் பிடித்த விஜய்சேதுபதி,

``சார் அந்த மில்லியன் டாலர் கேள்வி என்னனு கேட்டப்ப, நிறைய பெண்கள் எல்லாம் சொன்னாங்க... `இன்னிக்கு என்ன சமையல்?’னு! நான் என் மனசுக்குள்ள சொல்லிட்டிருந்தது `சாப்பாடு ரெடியா?’ங்கிற கேள்வியைத்தான். அதனாலதான் இது `அவன் கிச்சனா’ இல்லாம, `அவள் கிச்சனா’ இருக்குனு நெனைக்கிறேன்.

சார் சொல்லிட்டு இருந்தாரு இவ்ளோ வெப்சைட்ஸ் இருக்குனு. அவர் சொல்லும் போது எனக்கும் அந்தக் கேள்வி இருந்தது. இவ்ளோ வெப்சைட் இருக்கு யூடியூப்ல... இதையெல்லாம் மீறி புத்தகம் வாங்கிப் படிக்கிற அளவுக்கு பொறுமை இருக்கா? ஏன்னா. `வாட்ஸ்அப்’ல, இல்ல போன்ல ரெண்டு நிமிஷ வீடியோ பாக்கக்கூட பொறுமையிருக்காது. ஃபாஸ்ட்டா போய் முடிவுல என்னயிருக்குனு முதல்ல பாத்துருவோம். அவ்ளோ பொறுமை இல்லாத இடத்துல வந்து, எல்லாரும் புக் வாங்கி படிக்கமுடியுமானு கேக்கும்போது, அதையும் யோசிச்சு, அதுக்கு ஒரு வழி வெச்சு சூப்பரா பண்ணியிருக்கீங்க... வாழ்த்துக்கள் சார்’’ என்று பேசி அசத்தினார்.

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

விழாவின் ஒரு பகுதியாக மேஜிக் கலை நிபுணர் வசந்த்தின் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது. ``இதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்க...’’ என்று இயக்குநர் கம் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் விடாமல் கேட்க, ``என் வேலைக்கு வேட்டு வெச்சிடாதீங்க மேடம்!’ என்றபடியே நழுவினார் வசந்த்.

நிகழ்ச்சியின் மெகா அசத்தல்... மதிய விருந்து. ‘நேற்று... இன்று... நாளை’ என்கிற தீமில் இந்த விருந்தை உருவாக்கியிருந்தார்... கிரவுன் பிளாசா ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த். அவரிடம் பேசியபோது, ``அவள் விகடன் கிச்சன் ஆண்டு விழாவுக்கு புதுமையாக என்ன விருந்து செய்யலாம் என்று யோசித்தபோது, `அவள் விகடன் கிச்சன்’ இதழ்களையே புரட்டிப் பார்த்தோம். அப்போதுதான் பழமையும், புதுமையும் கலந்த அந்தப் புத்தகத்தின் வெற்றி சீக்ரெட் புரிந்தது. அதையே தீம் ஆக்கி, ‘நேற்று இன்று நாளை’ என்று விருந்து தயாரிக்க முடிவெடுத்தோம். ஒவ்வொரு பிரிவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்தோம்.

‘நேற்று’ உணவுகளை கீற்றுக்கூரை போட்ட கொட்டகையில், மண்பாண்ட பாத்திரங்களில் பரிமாறி னோம். ‘இன்று’ பிரிவில் இடம்பெற்ற வழக்கமான உணவுகளையும் வித்தியாசமாகத் தயாரித்திருந்தோம். ‘நாளை’ பிரிவில் என்ன சமைப்பது என்பதுதான் சவாலாக இருந்தது. எதிர்காலத்தில் சமையலில் என்னவெல் லாம் புதுமைகள் வரலாம் என்று கற்பனை செய்து ரெசிப்பிகளை உருவாக்கினோம். எங்களின் இந்த முயற்சிக்கு பலத்த வரவேற்பு கிடைத்து விட்டது’’ என்றார், டைனிங் ஹாலில் ருசித்திருந்த கூட்டத்தை ரசித்தபடி!

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

‘`எல்லா டிஷ்ஷும் பிரமாதம். ஆனா, நான் சிக்கன், மட்டன் சாப்பிடமாட்டேன். மீன் மட்டும்தான் சாப்பிடுவேன். எல்லாமே ரொம்ப நல்லாயிருந்தது'' என்று சாப்பிட்டுக்கொண்டே சகாக்களிடம் சான்றிதழ் வழங்கிக்கொண்டிருந்தார் சமையல்கலை வல்லுநர் ரேவதி சண்முகம்.

உணவு முடித்து வந்தவர்களில் பலருக்கும் அவர்களின் எதிர்காலம் பற்றி எடுத்துச் சொல்லி அசத்தினர் நியூமராலஜி நிபுணர் சந்திரசேகர பாரதி, கைரேகை நிபுணர் சண்முகம் இருவரும்!

விருந்தினர்களை, உணவுப் பண்டங்கள் நிறைந்த பைகளுடன் வழியனுப்பி வைத்து,  அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது ‘அவள் விகடன் கிச்சன்’ என்றென்றும் பெருகும் உங்கள் ஆதரவோடு!

"மில்லியன் டாலர் கேள்வி சாப்பாடு ரெடியா?"

வெற்றித் தம்பதியர்!

விழாவைச் சிறப்பிக்கும் விதமாக `குக் வித் மை பார்ட்னர்' என்ற வகையில் தம்பதிகளாக சமைக்கும் போட்டி பற்றிய அறிவிப்பு, அவள் விகடன் இதழில் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இதில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த வர்களில் இருந்து சுபத்ரா- பாஸ்கர், பானு - ரவிக்குமார், ஆதிரை - வேணுகோபால், கவிதா - அரவிந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

‘‘சேலத்தில் இருந்து வந்திருக்கோம். போட்டிக்கு நாங்க அனுப்பின ரெசிப்பி, என் கணவரே எங்க குழந்தைகளுக்காக யோசிச்சு தயாரிச்சது. இத்தனை பிரபலங்களையும் ஒரே இடத்தில், நேரில் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கல. ரொம்பப் பெருமையா இருக்கு!’’ என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர் பானு  - ரவிக்குமார் தம்பதி!

ந.ஆஷிகா 

படங்கள்: சு.குமரேசன், எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism