Published:Updated:

மண்ணில் மறைத்த உதிரம்!

மண்ணில் மறைத்த உதிரம்!

மண்ணில் மறைத்த உதிரம்!

மண்ணில் மறைத்த உதிரம்!

Published:Updated:

பெண் எழுத்து என்பது மரபுகளை உடைப்பது அல்ல. பெண்ணின் வலியை, அவள் உணர்வினைப் பதியனிடுவது. ஃபிரெஞ்சுப் பெண்ணியம், ஆங்கிலப் பெண்ணியத்தில் தொடங்கி, மார்க்ஸியம், தலித்தியம், பெரியாரியம் என நவீன கத்திகொண்டு கூறுபோடுவதில் தீர்ந்துவிடப் போவதில்லை அவளது ஒட்டுமொத்தப் பிரச்னைகள். கிராமத்துச் சேற்றில் வியர்வையோடு அறுந்து விழும் மாத உதிரத்தை மண்ணில் புதைத்தபடி நடவு நடுபவளின் வலியில் இருக்கிறது பெண்ணியம்!

மண்ணில் மறைத்த உதிரம்!

'என் பெண்ணுக்கு பதினெட்டு வயசாயிடுச்சு. இன்னும் வயசுக்கு வரலையே..?’ என்ற பதைபதைப்பும், 'வயசுக்கு வந்ததுல இருந்து ஒரே போக்கா போகுது... வைத்தியம் பார்க்க காசு இல்ல. ஏண்டி என் வயித்துல பொறந்த..?’ என்ற ஆதங்கமுமாய் மகள்களை அடித்து உதைக்கும் ஏழைத் தாய்களின் தவிப்பில் இருக்கிறது பெண் மொழி. ஒவ்வொரு மகப்பேறு மருத்துவரின் பூட்டிய அறைகளுக்குள்ளும் ஊறிப் பெருத்திருக்கிறது இதுபோன்ற மாதவிலக்குப் பிரச்னைகளின் மௌன அரசியல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று நாட்கள் மாதவிலக்கு என்பதுகூடப் பரவாயில்லை, எதிர்பார்ப்போடு சில முன்னேற் பாடுகளால் சமாளிக்கலாம். ஆனால், எந்த மாத்திரை மருந்துகளுக்கும் கட்டுப்படாத உதிரப்போக்கில்தான் பெண் சபிக்கப்பட்டவளாக மூலை யில் முடக்கப்படுகிறாள். இதெற் கெல்லாம் காரணம் நீர்க்கட்டி மற்றும் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வேலைக்குப் போகிற பெண் என்றால் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது? வீட்டு வேலை களை கவனித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இரண்டு துணியும் அதன் மேல் மூன்று நாப்கின்களுமாய் வெளியில் தெரிய உப்பிக்கொண்டு புடவை முந்தானையால் மறைத்து, இழுத்து செருகியபடி பேருந்திலோ டிரெயினிலோ ஏறினால்... ஸீட் இருந்தும் உட்காரமுடியாத நிலை. நாப்கின் மாற்றுவதற்கு பெண்களுக்கென முறையான கழிவறைகளும் கிடையாது. 'என்ன மேடம் எப்போதும் பிளாக் டிரெஸ்தானா?’ என அலுவலகத்தின் வார்த்தை சீண்டல்களுக்கு சிரித்து மழுப்பியபடி கூனிக் குறுகி, ஸீட்டில் பாதி உட்கார்ந்தும் மீதி உட்காராமலும் ஒருவழியாக சமாளித்து வீடு திரும்ப வேண்டும்.

மண்ணில் மறைத்த உதிரம்!

மீண்டும் இரவு உணவு, குழந்தைகள் படிப்பு என அசந்து படுக்கும் வேளையில், மன உளைச்சல் இல்லாமல் இருங்கள் என்றால் எப்படி சாத்தியம்? ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல், 'கர்ப்பப்பையே வேண்டாம் எடுத்துருங்க!’ எனக் கதறுபவர்களுக்கு இந்தச் சமூகம் காட்டும் வழிதான் என்ன?

இதைவிட வேதனையின் உச்சம், நாற்பது வயதிலும் குழந்தை இல்லாமல், கருப்பையை தக்கவைக்கப் போராடும் பெண்களின் நிலை. 'யூட்ரஸ் மட்டும் எடுத்துராம எனக்கு வைத்தியம் பாருங்க டாக்டர். எப்படியும் எனக்கு குழந்தை பிறக்கும்’ எனக் கெஞ்சியபடி, மரணம் வரை நம்பிக்கையுடன் காத்திருக்கும் அவள் துடிப்பை உணர்ந்திருக்கிறோமா?

மன உளைச்சலினால் வந்த வேதனையா அல்லது அதிக உதிரப் போக்கினால் மன உளைச்சலா? எது எப்படி இருந்தாலும் அவளைச் சுற்றி இருக்கும் உறவுகளும் நட்புகளுமே அவள் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் உணர்வுகளுக்கு சக பெண்கள் மரியாதை கொடுக்க வேண்டும். பணியிடங்களில், குடும்பங்களில் பெண்கள் ஒருவருக்கொருவர் அன்பும், ஆறுதலும், பாதுகாப்புமாக இருக்க வேண்டும்.

ஆனால், கருப்பை கரைந்து கரைந்து பலமற்று தட்டுத் தடுமாறி நடப்பவளை உறவுகள் என்ன செய்கின்றன? அன்பாக நடத்துகின்றனவா? கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் மாதவிலக்குத் துணியை தீண்டத்தகாதவள் உடைமை போல் துடைப்பம் கொண்டு தள்ளிவிடும் உறவுகளைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இரக்கமற்ற இச்சமூகப் பின்னணியில் மன உளைச்சல் இல்லாமல் அவளால் எப்படி வாழ முடியும்?

டாக்டர், ‘ஹாட் ஃபிளஷ். கால்களை கொஞ்சம் உயர்த்தி வைத்துப் படுங்க. பெட்லயே த்ரீ டேஸ் ஃபுல் ரெஸ்ட்ல இருக்கணும்!’ எனும்போது தலையாட்டிவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கணவருக்கு பயந்து ஓய்வில்லாமல் அடுக்களையில் அடைந்து கிடக்கும் பெண்களை யார் காப்பாற்றுவது? 45 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்கும் மெனோபாஸ் நேரங்களில் வியர்வையும் பதற்றமுமாக செய்வதறியாமல் தவிப்பவளை, மனநோயாளி என முகமூடியை மாட்டி சித்ரவதை செய்யாதீர்கள். குடும்பத்துக்காக ஓடிக் களைத்தவளுக்கு கணவனின் ஒருதுளி அன்பும், மகனின் கைப்பிடி ஆறுதலும் மட்டுப்படாத அவள் உதிரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

அன்றைய காலத்தில், மாதவிலக்கு நாட்களில் தனி அறை, சரியான நேரத்துக்கு சத்தான உணவு, ஓய்வு என்றிருந்தது. இவை அம்மாக்களின் மூடப்பழக்கம் என்றாலும் அதற்
குள்ளும் விஞ்ஞானம் விழித்திருந்தது. ‘இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மென்சஸ் என்பது நார்மல் பினோமினா. இதுக்கெல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்க முடியுமா?’ என மாடர்ன் பெண்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் ஆரோக்கியம் மீதான அக்கறையில்தான் சமூகச் செழிப்பு இருக்கிறது. ஹார்மோன்களைத் தின்று வளரும் கோழிகளும், மைதாவைப் போர்த்திய `பீட்சா’க்களும், `ஃபிரெஞ்ச் ஃப்ரை’களும் மாத சுழற்சியை சுழற்றி வீசுகிறது என்கிறார்கள். அம்மாக்கள் தங்களின் வளர்பருவ பெண் குழந்தைகளை உற்றுக் கவனியுங்கள். குடும்பத்திலிருந்துதான் சமூகம் பலப்படும். பெண் குழந்தைகளுக்கான உணவில் நம் ஆதி சமூகத்தின் பாரம்பர்யத்தைச் சேருங்கள்.

பெண்ணின் வலியைப் பெண்களுக்கும், அவர்களுக்குத் துணையாக நிற்கும் ஆண்களுக்கும் உணரச்செய்வதுதான் உண்மையான பெண்ணியம். விதி விதி என எத்தனை காலம்தான் கடற்கரை ஓரங்களிலும் கோயில் வாசலிலும் காலணி களின் காப்பாளர்களாக ஏங்கிய கண்களோடு காத்துக்கிடப்பது? போராட்டங்களைக் கடந்து அவளின் மெல்லிய உணர்வினை மதிக்கும் நாள் என்றைக்கு வாய்க்கிறதோ அன்றுதான் பாரதியின் பெண் விடுதலை சாத்தியப்படும்!

டாக்டர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism