Published:Updated:

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

Published:Updated:

சென்னை, முகலிவாக்கம் ஆசிரமம் அவென்யூவில் தன் தெருவிலுள்ள கிட்டத்தட்ட 10 வீடுகளை மாடித் தோட்டமாக மாற்ற உத்வேகம் கொடுத்து, வீட்டுக்கொரு மரக்கன்றையும் நட்டு பாதுகாத்து வருகிறார், பசுமை நண்பன் மோகன்தாஸ்! ஏரியாவை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, இவரது வீட்டைத் துல்லியமாக அடையாளம் காட்டுகின்றன அடர்ந்த மரங்களும், வீட்டை அழகாக்கி வைத்திருக்கும் செடி, கொடிகளும்! பசுமை மணம் பரப்பும் அவரது மாடித் தோட்டத்தில் நம்முடன் கைகுலுக்கினார்!

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா, காய்கறி வாங்க நாங்க கடைக்குப் போறதே கிடையாது. தக்காளி, அவரைக்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், கத்திரிக்காய்னு எங்க மாடியிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுறோம் ஆர்கானிக் காய்கறிகளை!’’ என்றவரின் மாடித் தோட்டத்தின் சிறப்பம்சம், அடுக்குத் தோட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பொதுவாக மண் தொட்டியில் செடிகளை வைக்கும்போது, சீக்கிரம் உடைஞ்சிடுறதோட, நீரால் எடை கூடிடும். அதற்கு மாற்றா வந்த பிளாஸ்டிக் தொட்டிகளின் எடை குறைந்தாலும், மண் தொட்டிக்கு ஈடா ஈரத்தை தக்க வைக்கும் தன்மை கிடையாது. இந்த சிக்கல்களுக்கு நண்பர்கள், இணையம்னு தீர்வு தேடினப்போதான், அற்புதமான அடுக்குத் தோட்டம் (tower garden) பற்றித் தெரிய வந்தது. உடனே அதை எங்க மொட்டை மாடியில் செயல்படுத்திட்டேன்!’’ என்ற மோகன்தாஸ், அதைப் பற்றி விளக்கினார்.

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

‘‘ஒரு குடும்பத்துக்கு 4 அல்லது 6 அடுக்கு களைக் கொண்ட ஒரு அடுக்குத் தோட்டமே போதுமானது. ஒரு அடுக்குத் தோட்டத்தில் கிட்டத்தட்ட நமக்குத் தேவையான 20 காய்கறிகள், கீரை வகைகள், செடிகள்னு வளர்க்கலாம். 2X2 அளவு கொண்ட ஒரு அடுக்குத்தோட்டம் பரந்து விரிந்து வளர 5X5 அளவு இடவசதி வேணும்.

மேல் அடுக்கில் கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளையும், அதற்கடுத்த அடுக்குகளில் கீரை வகைகள், செடிகள், மூலிகைகள்னு நாம விரும்பும் எதையும் வளர்த்துக்கலாம்.

பல அடுக்குகளைக் கொண்ட இந்த டவர் கார்டனின் அடியில் பல துளைகள் இடப்பட்ட ஒரு பேஸின் இருக்கும். மற்ற முறைகளைப் போல, அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை ஊற்றும் தண்ணீர் சொட்டு சொட்டாக பேஸினில் உள்ள துளைகள் வழியா வடிந்து, கீழே வெச்சிருக்கிற பாத்திரத்தில் சேகரமாகும். பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட சத்து நிறைந்த அந்த தண்ணீரையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துறதால, தண்ணீரின் பயன்பாடு குறையுறதோட, எள்ளளவு சத்துகூட குறையாத காய்கறிகள் கிடைக்கும்’’ என்றார் மோகன்தாஸ்.

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

 இவரைப் பின்பற்றி தன் மாடியை தோட்ட மாக்கியிருக்கும்  சித்த மருத்துவர் ராதிகா, ``பூச்செடிகள், காய்கறிகள், கீரை வகைகளுக்கு இணையா இன்சுலின் செடி, வெட்டிவேர், கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ, சர்பகந்தா, ரணகள்ளி, ஆடாதொடா மூலிகைச் செடிகள் போன்றவற்றை நாங்க சதுர அடி தோட்டம்  (square feet garden) மூலமா வளர்க்கிறோம். ஒரு செடிக்கு ஒரு சதுர அடி என்ற அளவில் பிரித்து ஃபைபரால் (fiber) செய்யப்பட்ட சதுர அடி தோட்டத்தில், எப்பவும் பசுமை விளைச்சல்தான்’’ என்கிறார்.

ஆஹா...அடுக்குத் தோட்டம்!

‘மரம் வளர்ப்போம் சங்கம்’ என்ற சங்கத் தின் மூலம் இந்த பசுமை அன்பர்கள், மரம் வைக்க விருப்பமுள்ளோரை ஊக்குவித்து வருகிறார் கள். தங்கள் ஏரியாவில் குறைந்தது 10,000 மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற திட்டம் வைத்திருக்கும் இவர்கள், அதன் தொடக்கமாக வேம்பு, அசோக மரம், புன்னை என இதுவரை 58 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்கள். அதோடு, மாடித்தோட்டம் போட விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார்கள்.

‘‘ரசாயனமில்லா காய்கறிகள், பசுமை விழிப்பு உணர்வு இதெல்லாம்கூட இரண்டாவதுதான். முதல்ல, வீட்டிலோ, வெளியிலோ ஏதாவது பிரச்னைனா, மாடித் தோட்டத்துக்கு வந்து ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்து பாருங்க... அது மனதைப் புத்துணர்வாக்கும் ஒரு தியானக் கூடம்கிறதை உணர்வீங்க!’’

- பசுமையும் பிரியமுமாகச் சொல்கிறார்கள் ‘மரம் வளர்ப்போம்’ சங்கத்தினர்!

க.தனலட்சுமி   படங்கள்: பா.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism