‘கர்ப்பிணியா இருக்கிற பெண்களுக்கு பரத நாட்டிய வகுப்புகள் எடுக்கிறேன். கர்ப்பிணிகள் பரதம் ஆடுறதால, அவங்க உடல் நலம் மேம்படுறதோட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பும் அதிகரிக்குது!’’


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- ‘அட!’ சொல்ல வைக்கும் தகவல் தருகிறார், ஈரோடு, `நடராஜா நாட்டியாலயா’ நடனப் பள்ளியின் நிறுவனர் பிரியா!‘‘கர்ப்பிணிகள், தங்களோட நாலாவது மாசத்திலிருந்து ஏழாம் மாசம் வரைக்கும் பரதம் ஆடலாம். எந்தச் சிக்கலும் இல்லாம சுகப்பிரசவம் ஆக வேண்டி பல கர்ப்பிணிகள் இதைக் கத்துக்க முன்வர்றாங்க. கைகளை விரித்து, எளிமையா செய்யக்கூடிய அடிப்படை நடன அசைவுகளை மட்டும்தான் சொல்லிக் கொடுப்பேன். நாட்டியப் பாடல்களையும், தாள ஒலிகளையும் கேட்பது, கருவிலஇருக்கிற குழந்தைக்கும் நல்லது. ஆரோக்கியத்தோடும், அறிவாளியாவும் வளரும்.

இதுவரை எங்கிட்ட பரதம் கத்துக்கிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகியிருக்குங்கிறது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!’’ என்று கண்களில் உணர்ச்சி காட்டும் பிரியா, அதிக உடல்பருமன் கொண்ட பெண்களுக்கும் பிரத்யேக நடன அசைவுகள் கற்றுத் தருகிறார். இதன் மூலமாக உடல்பருமனைக் குறைக்க முடிகிறதாம்!‘கர்ப்பிணிகள் பரதம் ஆடலாமா?!’ என்று ஈரோட்டைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் நீலா பிரபுவிடம் கேட்டபோது, ‘‘கர்ப்பிணிகள் பரதம் ஆடும்போது, ஒரே இடத்தில் இருக்கும் உடற்சோம்பல் தவிர்க்கப்பட்டு, உடலின் தசைகள் அனைத்தும் இயங்கும். இதனால் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், மெல்லிய இசை, இதிகாச கதைகளைக் கேட்பது, கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிறந்தது. ஆனாலும், உடல்நிலை, கருவளர்ச்சி பற்றி அறிந்த அவர்களின் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையோடுதான் நடனம் ஆடவேண்டும். முதல் குழந்தை குறைப்பிரசவம், உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் உள்ள கர்ப்பிணிகள் பரதம் ஆடக்கூடாது.நடன ஆசிரியர் மேற்பார்வையில்லாமல் ஆடுவது, வீடியோ பார்த்து வீட்டில் இருந்தபடியே ஆடுவதெல்லாம் கூடாது. எளிமையான நடன அசைவுகளை மட்டும்தான் ஆடவேண்டும். இதையும் ஐந்தாவது மாதத்திலிருந்து ஏழாவது மாதம் வரை தினமும் 30 நிமிடம் வரை ஆடலாம்!’’ என்று சொன்னார்.
ஆனந்தராஜ் படங்கள்: அ.நவின்ராஜ்