Published:Updated:

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Published:Updated:

காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களையும், 'ஸ்மார்ட் முதலீட்டாளர்’ ஆக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விரிவாகச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஶ்ரீதரன்.

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஆயுள் காப்பீட்டை முதலீடாகக் கொள்வது தவறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

'இன்று பல குடும்பங்களும் ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிடும்போது, அந்தக் குடும்பத்தை அவர் எடுத்த ஆயுள் காப்பீட்டுத் தொகை தூணாகத் தாங்கிய பல உதாரணங்களைப் பார்க்கிறோம். ஆனால், ஆயுள் காப்பீட்டை பலரும் முதலீடாகக் கொள்கிறார்கள்... அது தவறு. எனவே, அதில் முதலீடு நோக்கில் இருக்கும் பாலிசிகள் தவிர்த்து, ஏதாவது அசம்பாவிதம் என்றால் மட்டுமே பயன்படுகிற, பிரீமியம் குறைவான மற்றும் கவரேஜ் தொகை அதிகம் கிடைக்கக் கூடிய டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதே புத்திசாலித்தனம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கீழ்வரும் விஷயங்களைக் கவனிக்கவும்:

• பாலிசி எடுக்கும் நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் நிர்வாகத்திறன்

• இதுவரை அவர்களிடம் பலனடைந்த பாலிசிதாரர்கள் விவரங்கள்

• க்ளெய்ம் செட்டில் செய்த விகிதம்

• கஸ்டமர் சப்போர்ட்

• பிரீமியத் தொகை

இந்த ஐந்து அம்சங்களின் அடிப்படையில் நான்கைந்து ஆயுள் காப்பீடு நிறுவனங்களை ஒப்பிட்டு, இறுதி முடிவெடுக்கவும். நினைவில் கொள்க... காப்பீடு என்பது தற்காப்புக்குத்தான், முதலீட்டுக்கு அல்ல!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி... அலசி ஆராயுங்கள்!

நோய்களும், விபத்துகளும் கட்டுப்பாடின்றி பெருகிவரும் இந்தச் சூழலில், அதனால் ஏற்படும் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க, ஒவ்வொரு குடும்பமும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் (மெடிக்கல் இன்ஷூரன்ஸ்) எடுத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில், பல வருடங்களாகச் சேர்த்து வந்த சேமிப்பை, 10 நாட்கள் ஹாஸ்பிடல் செலவுக்குக் கொடுத்துவிட்டு வர வேண்டியிருக்கும். ஒருவேளை சேமிப்பு இல்லை என்றால், அவர்களை இதே சூழல் கடனாளியாக்கவும் செய்யும். இதையெல்லாம் தவிர்க்கக் கை கொடுக்கும் காப்பீடுதான், ஹெல்த் இன்ஷூரன்ஸ். இதை எடுக்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல. இந்தந்த நோய்க்கு இவ்வளவு க்ளெய்ம், இந்த நோய்களுக்கு எல்லாம் விலக்கு என்று, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தினர் குறிப்பிட்டிருக்கும் 'டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்’களை தெளிவாகப் படித்த பின்னே, அதைத் தேர்ந்தெடுக்கவும். பெண்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு பிரத்யேக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. மொத்தக் குடும்பத்துக்கும் ஒரே இன்ஷூரன்ஸாக எடுப்பதைவிட, இப்படிப் பிரித்து எடுத்துக்கொண்டால் சிறந்தது.

அதேபோல் ஏதேனும் நோய் இருந்தால் அதை மறைத்து இன்ஷூரன்ஸ் எடுப்பதைவிட, வெளிப்படையாகச் சொல்லி எடுப்பதே சிறந்தது. அதற்கான பிரீமியத் தொகை சற்று கூடினாலும் அதை கட்டிக்கொள்ளலாம். அதனால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும் போது நேர்மையாக இருப்பது, நமக்கு நல்லது என்ற புரிதல் வேண்டும்.

மேலும், பணத்தை க்ளெய்ம் செய்வதில்  இரண்டு ரகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முக்கிய மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருப்பார்கள். அப்படி அவர்கள் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவமனைகளைத் தேர்வு செய்வதே சிறந்தது. இதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே நேரடியாக பணத்தை மருத்துவமனையில் செலுத்திவிடும்.

இன்னொரு ரகம்... இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ரசீதுகளைச் சமர்ப்பித்து நாம் பணத்தை க்ளெய்ம் செய்வது. இப்படி செய்யும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நமக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் முதல் ரகத்தை தேர்வு செய்வதே சிறந்தது'' என்ற ஶ்ரீதரன், 'ஸ்மார்ட் முதலீடு’ என்பதைப் பற்றித் தொடர்ந்து பேசினார்.

''இன்றைய இளம் தலைமுறையினர் பெரிய தொகையைச் சம்பளமாகப் பெருகிறார்கள். கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால், ஒரு தொகை செலவுக்குப் போக, மற்றொரு தொகை உபரியாக உள்ளது. அதை சேமிப்பாகவோ, முதலீடாகவோ மாற்றும் எண்ணம் இல்லாத, எண்ணம் இருந்தாலும் அதற்கான வழி தெரியாத அவர்கள் அதையும் அநாவசியச் செலவுகளில் கரைக்கிறார்கள். அவர்களிடம், 10 வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தையின் கல்விச் செலவு பற்றியோ, அவர்களின் ஓய்வு காலத்துக்கான திட்டமிடல் குறித்தோ கேள்வி எழுப்பினால், பதிலற்றவர்களாக நிற்பார்கள். இன்னொரு புறம், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் தங்கள் குடும்பங்களில் நிதி நிர்வாகத்தை சீராகச் செயல்படுத்துகிறார்கள். நீங்களும் 'ஸ்மார்ட் முதலீட்டாளர்’ ஆக... கீழ்வரும் ஆலோசனைகளை கைகொள்ளுங்கள்!

இன்ஷூரன்ஸ்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வரி திட்டமிடல்

உங்களது வருமானம், வருமான வரி விலக்கு உச்சவரம்புக்கு மேல் இருக்கும் பட்சத்தில், ஒரு வருமான வரி ஆலோசகரையோ, நிதி திட்டமிடுபவரையோ ஆலோசித்து, வருமான வரியைக் குறைக்க வழி தேடுங்கள்.

குழந்தைகளின் எதிர்காலத் தேவை மற்றும் ஓய்வுகாலத் தேவை!

பணவீக்கத்தை கருத்தில்கொண்டு, குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு களை மேற்கொள்ளுங்கள். உதாரணமாக, இன்றைய மதிப்பீட்டில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கான செலவு 8 லட்சம் என்றால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 20 லட்சம் செலவாகும் என்பதை உத்தேசித்து சேமியுங்கள்.

அதேபோல, பணி ஓய்வு திட்டமிடலும் அவசியம். பணியில் இருக்கும்போது தேவையான மற்றும் தேவையற்ற செலவினங்களைச் செய்யும் பலரும், எதிர்காலத்தில் வரவிருக்கும் பணி ஓய்வு பற்றி சிந்திப்பதே இல்லை. அதற்கான முறையான திட்டமிடல் அவசியம். பணியில் இருந்து ஓய்வுபெறும் சமயத்தில் இதுபற்றிச் சிந்திப்பதும் செயல்படுத்துவதும் கடினம். பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு சுமார் 20 ஆண்டுகளாவது ஓய்வுகால வாழ்க்கையை வாழ நேரிடும். அப்போது இருக்கக் கூடிய விலைவாசி, பணவீக்கம் முதலிவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும்.

காப்பீடுகள்

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு, எதிர்பாராத இழப்பு ஏற்படும்போது கைகொடுக்கும் என்பதுடன், அது தரும் பாதுகாப்பு உணர்வு, வாழ்வின் நிச்சயமின்மை குறித்த உங்களின் நிகழ்காலப் பதற்றத்தையும் குறைக்கும். குறைந்த கட்டணத்தில் வாழ்வின் பெரிய நிம்மதி தரும் காப்பீடுகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று முடித்தார், நிதி ஆலோசகர் ஶ்ரீதர்!

கே.அபிநயா
படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism