Published:Updated:

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

Published:Updated:

‘‘அண்ணா... இதுவரைக்கும் நான் 200 குறள் சொல்லியிருக்கேன்!” என்று ஒன்பதாம் வகுப்பு மாணவி நிகல்யா உற்சாகமாகச் சொல்ல, ‘‘ஏய்... நீ இன்னும் இருநூறைத் தொடல!’’ என்கிறார்கள் சக மாணவர்கள் ரவிக்குமாரும், சாந்தினியும். ‘‘வேணும்னா கோட்டை அழிங்க, முதல்ல இருந்து சொல்றேன்!’’ என்று கலகலப்பாகிறார் நிகல்யா. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கோவிந்தம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி முழுக்க, இப்படி குறள் படிக்கும், ஒப்புவிக்கும் உற்சாகம் நிரம்பியிருக்கிறது! காரணம், அந்தப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள ‘திருக்குறள் சார் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம்!’

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

கோவிந்தம்பாளையம் மக்கள் இணைந்து பள்ளியில் செயல்படுத்திவரும் இந்தத் திட்டத்தின்படி, அஞ்சல் அலுவலகத்தில் முதல் வகுப்பில் இருந்து ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெயரிலும் 133 ரூபாய் செலுத்தி சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டு, ஒரு திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு ரூபாய் வீதம், மாணவர்களின் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இலவசமாகத் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட, கோவிந்தம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் பேசினோம். “இன்னிக்கு மாணவர்கள் நிறைய படிக்கிறாங்க, நிறைய சம்பாதிக்கிறாங்க. ஆனா, ஒழுக்க நெறிகள்னா என்னனு அவங்களுக்குத் தெரியறதில்ல. பள்ளிகளிலும் நேர்மை, உண்மை, பொறுமையின் சிறப்புகளை எல்லாம் சொல்லிக்கொடுத்த மாரல் வகுப்புகள் இப்போ அருகிட்டே வருது. வாழ்வின் எல்லா பாடங்களையும் கத்துக்கொடுக்க, திருக்குறளைவிட சிறந்த ஆசான் வேறில்ல. அரசுப் பள்ளியில் படிச்ச எங்க தலைமுறைக்கு, திருக்குறள்தான் தமிழின் மேல பற்றை ஏற்படுத்துச்சு. அந்த திருக்குறள்தான் எனக்கு வறுமையிலும் நேர்மையைக் கத்துக் கொடுத்துச்சு. நம்மைச் செழுமைப்படுத்திய திருக்குறளை இந்தத் தலைமுறை மாணவர்கள்கிட்டயும் கொண்டு சேர்க்க ஆசைப்பட்டேன்!’’ என்னும் ராஜேந்திரன், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு இணையான மத்திய அரசு பொறுப்பில் ஆந்திர மாநிலத்தில் சுங்கம் மற்றும் கலால் சேவை வரித்துறையின் முதன்மை ஆணையராக பதவிவகித்து வருகிறார்.

‘‘எங்க ஊரில் கட்டின விநாயகர் கோயில்ல திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம்னு சொன்னப்போ, ஊர் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை ஊர் முழுக்க வீடு வீடா வழங்கினோம். அப்புறம் ஊர்ப் பசங்களை எல்லாம் அந்தக் கோயில்ல திரட்டி திருக்குறள் சொல்லிக்கொடுக்கலாம்னு கூப்பிட்டா, ஒரு பயல் வரலை. திருக்குறளை வெளிநாட்டுக்காரங்க எல்லாம் படிக்கிறாங்க, நம்ம புள்ளைங்க படிக்க வர மாட்டேங்கிறாங்களே என்ற ஆதங்கத்திலும், அக்கறையிலும் நானும் என் நண்பர் முருகேசனும் சேர்ந்துதான் இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சோம்!’’ என்று ராஜேந்திரன் சொல்ல, பள்ளியின் தமிழாசிரியை சுகந்தி, திட்டத்தின் அம்சங்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பைச் சொன்னார்.

`குறள்' சொன்னால் பணம்... ஓர் ஆச்சர்ய கிராமம்!

‘‘குறைந்தது 51 குறளில் இருந்து ஒப்பிக்கணும். ஒரு குறளுக்கு ஒரு ரூபாய் வீதம் அந்த மாணவனோட சேமிப்புக் கணக்கில் 51 ரூபாய் சேர்ந்திடும். அவர்களை ஊக்கும்விக்கும் விதமா, ஒரே முயற்சியில் 250 குறள் ஒப்பிக்கிற மாணவர்களுக்கு 250 ரூபாய் போனஸ். ஆக மொத்தம் 500 கிடைக் கும்.  ஒவ்வொரு 250 குறளுக்கும் 250-ன் மடங்கில் போனஸ் அவங்க கணக்கில் சேர்ந்திடும். 1,330 குறள்களையும் சொல்பவர்களுக்கு 10,000 ரூபாய் கிராமத்தின் சார்பில் அளிக்கப்படும். மாணவர்கள் ரொம்ப ஆர்வமா இப்போ திருக்குறள் படிக்கிறாங்க. அந்த முயற்சியை அவங்க சேமிப்புக் காசுக்காக எடுக்கல. எப்பவுமே ஒரு போட்டி, பரிசுனா அங்க உழைப்பும், உற்சாகமும் அதிகமாதானே இருக்கும்? அப்படி ஒவ்வொருத்தரும் தன் சகாக்களோட போட்டி போட்டுட்டு, அதிகாரம் அதிகாரமா சந்தோஷமா மனனம் செய்றாங்க. திருக்குறளுக்கான பொருளை நாங்களும் கற்றுக்கொடுக்கிறோம், விளக்கவுரையிலும் படிச்சிக்கிறாங்க. இவங்களைப் பார்க்க, குறள் ஒலிகளைக் கேட்கவே சந்தோஷமா இருக்கும்!’’ என்று சுகந்தி களிப்புற,

‘‘திட்டம் ஆரம்பிச்சு ஒரு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள நாங்கள்லாம் 300 குறள்கள் தாண்டிட்டோம். வெளியூர்க்காரங்க எல்லாம் இந்தத் திட்டத்தைப் பத்திக் கேள்விப்பட்டவொடன, அவங்க ஊர்ப் பள்ளிக்கூடத்துலயும் இதே மாதிரி செய்யப்போறதாச் சொன்னாங்கனு, எங்க ஸ்கூல் ஆசிரியர்கள் எல்லாம் சொன்னாங்க. நாங்க 1,330 குறளையும் படிச்சுக் கரைச்சுக் குடிச்சிடுவோம் பாருங்க!’’

- மாணவர்களிடம் மிதந்தது உத்வேகம்!

‘‘இது விதைதான். வளர்ந்து ஆலமரமானதும் எங்க ஊருல இருந்து உலகத்துக்கே திருக்குறளை பறைசாற்றுவோம்!’’

- ராஜேந்திரன் சொல்ல, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள் என்று அனைவரும் ஒருமித்து உற்சாகக் குரல் கொடுக்கிறார்கள்!

நல்முயற்சி..!

எம்.புண்ணியமூர்த்தி  படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism