Published:Updated:

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

Published:Updated:

‘தங்கம் விலைச் சரிவு’ என்ற செய்தியைப் பார்த்து, சந்தோஷத்தில் இருக்கிறார்கள் பெண்கள். ‘இது தங்கத்தில் முதலீடு செய்ய ஏற்ற நேரமா? இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டி... அட, கடன்பட்டாவது தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாமா?’ என்கிற கேள்விகள்தான் இன்று பலருக்கும். இதற்கெல்லாம் விடையளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதாபட்...

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

‘‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணி, அவங்ககிட்ட இருக்கும் நகையை அடமானம் வெச்சு, அதுல வந்த காசுல புதுசா நகை வாங்குவாங்க. `இது என்ன புது கான்செப்ட்டா இருக்கு?'னு கேட்டா, ‘பொண்ணு கல்யாணத்துக்கு நகை சேர்க்க வேணாமா? நமக்கு ஒரே சமயத்துல மொத்தமா காசு புரட்டி நகை வாங்குற அளவுக்கு வசதி இல்லை. அதனாலதான் இப்படி ஒரு வழி. பிறகு, கொஞ்சம் கொஞ்சமா அசலையும் வட்டியையும் கட்டி நகையை மீட்டுட வேண்டியதுதான். இது கிட்டத்தட்ட இ.எம்.ஐ ஸ்கீம்ல தங்கம் வாங்குறமாதிரி’னு ரொம்ப பெருமையா விளக்கம் வேற சொன்னாங்க. பெண்களுக்குத் தங்க நகை மேல எந்தளவுக்கு ஆர்வம்கிறதுக்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இது'' என்று சொல்லிச் சிரித்த அனிதாபட்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேப்பர் கோல்டு... பெஸ்ட் சாய்ஸ்!

``தங்கத்துல இன்வெஸ்ட்மென்ட் பண்ணணும்னு நினைக்கறவங்க... ஆபரணத் தங்கம், தங்கக்காசு, தங்க பிஸ்கட் இதுல எல்லாம் முதலீடு பண்றதைவிட, பேப்பர் கோல்டு திட்டத்துல இன்வெஸ்ட்மென்ட் பண்றதுதான் லாபம் தரக்கூடியது. பாதுகாப்பானதும்கூட'' என்று அழுத்தம் கொடுத்தவர், பேப்பர் கோல்டு திட்டம் பற்றி விவரித்தார்...

•  தங்கம் தகடு வடிவில் மெல்லிய பேப்பர் போல இருப்பதுதான் பேப்பர் கோல்டு என நினைத்தால் அது தவறு. ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் பேப்பர் கோல்டுக்கு சமம். உங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய, அதாவது பேப்பர் கோல்டில் முதலீடு செய்ய விரும்பினால், வங்கிகளில் எப்படி பணம் சேமிக்க கணக்கு துவங்க வேண்டுமோ, அதுபோல பேப்பர் கோல்டு வாங்கிச் சேமிக்கவும் கணக்கு துவங்க வேண்டும். டிரேடிங் அக்கவுன்ட் மற்றும் டிமேட் அக்கவுன்ட் இரண்டும் இருந்தால்தான் பேப்பர் கோல்டில் முதலீடு செய்ய முடியும்.

•  இந்தக் கணக்கை துவங்க நீங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நல்ல நம்பிக்கையான ஷேர் புரோக்கர்களை நாடுங்கள். கணக்கு துவங்க ஐ.டி, அட்ரஸ் புரூஃப், பேன் கார்டு, காசோலை (உங்கள் பெயரில் உள்ள காசோலை) போன்றவை தேவை. மற்றபடி கணக்கு துவங்க ஷேர் புரோக்கர்களிடம் காசாக கொடுக்க வேண்டாம். `காசு கொடுத்தால்தான் கணக்கு துவங்க முடியும்' என சொல்லும் புரோக்கர்கள் நிச்சயமாக நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை. அவர்கள் மூலம் கணக்கு துவங்குவதை தவிருங்கள்.

•  எப்படி, எங்கே, யாரிடம் கணக்கு துவங்க வேண்டும் எனத் தெரியாமல், ஏற்கெனவே பேப்பர் கோல்டு சேமிக்கும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணக்கின் மூலம் பேப்பர் கோல்டு சேமிக்கும் எண்ணத்தில் இருந்தால், உடனடியாக அந்த யோசனையையும் கைவிடுங்கள். உங்களுடைய சேமிப்புதான் அது என்பதற்கு சட்டப்படி எந்த உத்தரவாதமும் இருக்காது.

•  சில ஷேர் புரோக்கர்கள் வருடம்தோறும் குறைந்தபட்ச தொகையை, சர்வீஸ் சார்ஜ் எனும் பெயரில் வசூலிப்பார்கள். சிலர் கணக்கு துவங்க ஆரம்பிக்கும் சமயத்தில் ஒரு முறை மட்டும் வசூலிப்பார்கள். அதுவும் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரைதான் இருக்கும். ஆனால், இவர்களிடம் கணக்கு துவங்கும்பட்சத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டிரான்சாக்‌ஷன் காட்டுவது அவசியம். அதாவது, வாங்கவோ, விற்கவோ செய்ய வேண்டும். தவறினால் குறைந்தபட்ச அபராதத் தொகை வசூலிப்பார்கள்.

•  பேப்பர் கோல்டை வழக்கமான ஷேர் மார்க்கெட் நேரமான காலை 9.15 முதல் மாலை 3.30 வரை குறைந்தபட்சமாக அரை கிராமிலிருந்து வாங்கலாம்.

•  பொதுவாக சந்தையில் ஒரு கிராம் எவ்வளவு விலையோ அதே விலைதான் இங்கேயும். ஆனால், நீங்கள் ஆபரணமாக வாங்கும் தங்கம் 22 கேரட். பேப்பர் கோல்டு 24 கேரட் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

•  சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். அப்போதுதான், தங்கத்தின் விலை குறையும்போது வாங்கியும் தங்கத்தின் விலை ஏறும்போது விற்றும் லாபமடைய முடியும்.

•  விலை சரிந்துவிட்டதே என கடனை வாங்கி முதலீடு செய்வதை தவிருங்கள். கையில் உள்ள பணத்தில் அதுவும் சிறுகச் சிறுக முதலீடு செய்வது முக்கியம். ஏனெனில், தற்போது இருக்கும் மார்க்கெட் நிலவரப்படி, இன்னும் சில வருடங்களுக்கு தங்கத்தின் விலை சரிவை நோக்கித்தான் செல்லும். அதனால் நாளுக்கு நாள் விலை குறையும் வாய்ப்புதான் அதிகம். சிறுசிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக விலை ஏற்றத்தில் பெரிய மாற்றம் இருக்காது.

•  அதிக காலத்துக்கு சேமிக்கும் எண்ணம் இருப்பவர்கள், அதாவது மகளின் திருமணத்துக்கு நகை சேர்க்க விரும்புகிறவர்கள், ஆபரணமாக சேமிப்பதைவிட, பேப்பர் கோல்டாக சேமிப்பதுதான் சிறந்தது. விலை சரிவடையும்போது, சிறுகச் சிறுக பேப்பர் கோல்டாக சேமித்து வந்தால், பிற்காலத் தேவையின்போது, அன்றைய சந்தை விலைக்கு பேப்பர் கோல்டை விற்று புத்தம்புதிய டிசைனில் நகையாக வாங்கிக் கொள்ளலாம்.

•  ஆபரணமாக வாங்கினால் ஒவ்வொரு முறையும் செய்கூலி, சேதாரம் என நம் பணம் வீணாகும். ஆனால், பேப்பர் கோல்டில் அந்த கவலை இல்லை.

•  சந்தை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே வாங்கவோ விற்கவோ முடியும்.

அப்ப பேப்பர் கோல்டுதான் பெஸ்ட் கோல்ட்னு முடிவு பண்ணிட் டீங்களா?

ஆபரணத் தங்கம், தங்கக்காசு... இவற்றில்  முதலீடு செய்வதில் உள்ள நன்மை - தீமைகளைப் பற்றி அனிதாபட் கூறும் தகவல்கள்...

ஆபரணத் தங்கம்

நன்மை: ஒருவருக்கு நகை மீது தீராத காதல் இருந்தாலோ அல்லது அந்தஸ்து மற்றும் கௌரவத்துக்காக நண்பர்கள், உறவினர்கள் முன்பு நகை அணிவதற்காகவோ ஆபரணத் தங்கம் வாங்கலாம். அவசரத்துக்கு அடமானம் வைக்க உதவும். இது தவிர இதில் வேறு எந்த நன்மையும் இல்லை.

தீமை: இதன் மிகமுக்கிய தீமை என்று பார்த்தால், பாதுகாப்பின்மை. நகை அணிந்து வெளியே சென்றால் திரும்ப வீடு சேரும்வரை அதற்கான உத்தரவாதம் கிடையாது. அதேசமயம் வீட்டில் வைத்து பூட்டினாலும் பாதுகாப்பு கிடையாது.

அடுத்தது ஆபரணத் தங்கம் வாங்கும்போதே செய்கூலி, சேதாரம் என நாம் வாங்கும் தங்கத்துக்கான விலையைவிட கூடுதல் பணம் இழக்க வேண்டிவரும். அதேபோல் நகையை விற்கும்போதும் சேதாரம் அல்லது தேய்மானம் எனும் பெயரில் நம் பணம் பறிபோவது நிச்சயம்.

தங்கக்காசு

நன்மை: காசாக வாங்கும் தங்கத்தை விற்கும்போதும் அன்றைய தின சந்தையின் விலைக்கு விற்க முடியும்.

பத்து வருடத்துக்குப் பிறகு நடக்கவிருக்கும் மகளின் திருமணத்துக்கு, நகையாக வாங்கி சேர்த்தால், அவளின் திருமணத்தின்போது அந்த நகை பழைய மாடல் டிசைனாக மாறிவிடும். அதுவே தங்கக்காசாக சேர்த்தால் திருமணத்தின்போது காசை விற்று கிடைக்கும் பணத்தில் புத்தம்புது டிசைனில் உள்ள நகையாக வாங்கிக்கொள்ளலாம்.

தீமை: வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் தங்கக்காசு வாங்கலாம். ஆனால், அங்கேயே திரும்ப விற்க முடியாது.

நகைக்கடைகளில் வாங்கும் தங்கக்காசை அதே நகைக்கடையில்தான் விற்க முடியும். ஆனால், பணமாகத் திரும்பப் பெற முடியாது. நகையாகதான் வாங்க முடியும். இதற்கு செய்கூலி, சேதாரம் உண்டு. ஒரு கடையில் வாங்கிய தங்கக்காசை அடுத்த கடையில் விற்கும்போது சேதாரம் அதிகமாக எடுப்பார்கள்.

இந்துலேகா.சி  படம்: அசோக் அர்ஸ்   மாடல்: பவித்ரா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism