Published:Updated:

"உதவிக்கு வந்தோம்... உறவுகள் ஆனோம்!"

எஜமானி - பணியாளர்கள் 30 ஆண்டுபந்தம்

"உதவிக்கு வந்தோம்... உறவுகள் ஆனோம்!"

எஜமானி - பணியாளர்கள் 30 ஆண்டுபந்தம்

Published:Updated:

ன்று வீட்டு வேலை பார்க்க வருகிற பெண்களுக்கும், வீட்டுப் பெண்மணிகளுக்கும் இடையேயான உறவில் நெருக்கம் தளர்ந்துகொண்டே வருகிறது. ஆனால், வேலை பார்க்க வந்த வீட்டில், அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் போல அன்பும் வாஞ்சையும் காட்டி, சுமார் 30 ஆண்டுகளாக இன்றும் பணிபுரியும் மல்லிகா, முனியம்மாதான் நம் கதாநாயகிகள்!

"உதவிக்கு வந்தோம்... உறவுகள் ஆனோம்!"

சென்னை, புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் இருக்கிறது, ஓய்வுபெற்ற பேராசிரியர் திருவள்ளுவனின் இல்லம். அவருடைய மனைவி மணிமேகலை, யூகோ பேங்க்கில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களின் ஒரு மகள், இரண்டு மகன்களும் திருமணமாகி செட்டிலாகிவிட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எங்க பொண்ணு எல்.கே.ஜி. போக ஆரம்பிச்சப்போ, அவளை ஸ்கூல்ல விட, ஸ்கூல்ல இருந்து கூட்டிவர வேலைக்கு வந்தா மல்லிகா. இப்போ என் பொண்ணுக்கு 33 வயசாயிடுச்சு. இன்னும் மல்லிகா வந்துட்டிருக்கா. நான் வேலைக்குப் போய்க்கிட்டிருக்கப்போ தினமும் சாயங்காலம் வந்து பாத்திரம் தேய்ச்சு, வீடு பெருக்கி கொடுக்க வந்தவங்கதான் முனியம்மா. இப்போ அவங்களுக்கு 80 வயசாயிடுச்சு. இப்பவும் தினமும் சாயங்காலம் வந்து ரெண்டு வெங்காயமாவது எனக்கு உரிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க!’’ என்று சொல்லியபடியே அவர்களை அறிமுகப்படுத்துகிறார் மணிமேகலை.

முனியம்மாவுக்கு வயோதிகத்தால் உடல் தளர்ந்து, முதுகு லேசாகக் கூன் போட்டுவிட்டாலும், சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ‘‘நான் இந்த வூட்டுல வேலைக்குச் சேர்ந்தப்போ, அம்மாவுக்கு செந்தில் (மணிமேகலையின் மகன்) வயித்துல எட்டு மாசம். 30 ரூபாய் சம்பளத்துக்கு வந்தேன். வீடு பெருக்கி, பாத்திரம் தேய்ப்பேன். சாயந்திரம் நாலு மணிக்கு வந்தா, பொழுது சாயற வரை இருந்துட்டு, அம்மா வந்ததும் அவங்க கையால காபி குடிச்சிட்டுக் கிளம்புவேன். காலை வேலைக்கு மல்லிகா வருவா. இந்த வூட்டுப் புள்ளைங்க எல்லாம் நாங்க வளர்த்த பசங்க. இன்னிக்கு எல்லாம் கல்யாணமாகி அதது வெளியூர் போயிடுச்சு. அம்மாவும் அய்யாவும் வேலைக்காரங்கனு குறைவா நடத்த மாட்டாங்க. எங்க குடும்பத்துல ஒண்ணுன்னா முன்ன வந்து நிப்பாங்க. அம்மா வெளியூர் கோயிலுக்குப் போனாலும், எங்களையும் அழைச்சிக்கிட்டுத்தான் போவாங்க. மதுரை, ராமேஸ்வரம், கும்ப கோணம் கோயில் எல்லாம் அம்மாவாலதான் பார்த்தேன்...! என் பேரப் புள்ளைங்க படிக்கிறதுக்கு, வைத்தியத்துக்குன்னு நிறைய உதவி செஞ்சிருக் காங்க!’’

- குரல் நெகிழ்கிறது அவருக்கு.

‘‘இப்பகூட உடம்பு சரியில்லன்னா இங்கதான் வருவேன். அம்மா மாத்திரை வாங்கித்தருவாங்க!’’ எனும் முனியம்மாவை இடைமறித்த மணிமேகலை,

‘‘ஆரம்பகாலத்தில் நாங்க கஷ்டப்பட்டபோது, எனக்குத் தேவைன்னா இவங்க கைமாத்துக் கொடுப்பாங்கன்னா பார்த்துக்குங்க!’’ என்று சிரித்தபடியே, அடுத்து மல்லிகாவை பேச்சுக்குள் அழைத்தார்.

"உதவிக்கு வந்தோம்... உறவுகள் ஆனோம்!"

‘‘மூணு குழந்தைகளையும் ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போய் வர்றதுக்கு 30 ரூபாய் சம்பளம். மல்லிகாவுக்குக் குழந்தைங்க இல்லை. என் குழந்தைங்க மேல என்னைவிட பிரியத்தைக் கொட்டி வளர்த்தது அவதான். இப்பவும் வெளிநாட்டிலருந்து பசங்க வர்றப்ப எல்லாம் மல்லிகா வீட்ல, அவ கையால ஒரு வேளை சாப்பிடாம போகமாட்டாங்க!’’ என்று மணிமேகலை சொல்லும்போதே, காபியை ஆற்றியபடி வந்த மல்லிகா...

‘‘அதெல்லாம் இவங்க என்கிட்ட காட்ற பாசத்துக்கு முன்னால எம்மாத்திரம்? என் கண் ஆபரேஷனுக்கு, அமெரிக்காவில இருந்து வந்திருந்த பெரிய பையன் பாலா தம்பி பணம் கொடுத்துருச்சு. பாலா கல்யாணத்துக்கு நாங்கள்லாம் ஹைதராபாத் போனப்போ, அங்கே முத்து ரொம்ப நல்லாருக்கும்னு சொல்லி, புள்ளைங்க மூணு பேரும் அம்மாவுக்கு வாங்கின மாதிரியே எங்களுக்கும் முத்து வாங்கிக் கொடுத்தாங்க. மூணு புள்ளைங்க கல்யாணம், அவங்க தாத்தா, பாட்டி சதாபிஷேகம்னு குடும்பத்துல என்ன விசேஷம்னாலும் எங்களுக்கும் பட்டுப்புடவை எடுத்துக்கொடுப்பாங்க. இதோ இதுகூட அவங்க எடுத்துக்கொடுத்ததுதான்!’’

- புகைப்படத்துக்காக அவர் மாற்றிக்கொண்டு வந்த புடவையைக் காட்டுகிறார் மல்லிகா. மூவரின் முகத்திலும் அன்பில் விளைந்த சிரிப்பு!

இப்போதும்கூட தான் சம்பாதிக்கும் பணத்தை, நோட்டுகளாகவும் சில்லறைகளா கவும் பிளாஸ்டிக் பையில் போட்டுச் சுருட்டி, மணிமேகலை வீட்டின் ஒரு அலமாரியில் லாக்கர் போல வைத்துவிட்டுப் போகும் 80 வயது முனியம்மாவின் நம்பிக்கை... மணிமேகலையின் கூடவே இருக்கும் மல்லிகாவின் அக்கறை... குடும்ப உறுப்பினர்களாகவே நினைத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்யும் மணிமேகலையின் கரிசனம்... அன்பும் மனிதநேயமும் அருகி வரும் இந்த நூற்றாண்டில் காணக் கிடைக்காத ஓர் அழகிய நட்பு... பிணைப்பு!

பிரேமா நாராயணன்  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism