Published:Updated:

கலாம்... நம்பிக்கைக் கடல்!

கலாம்... நம்பிக்கைக் கடல்!

கலாம்... நம்பிக்கைக் கடல்!

கலாம்... நம்பிக்கைக் கடல்!

Published:Updated:

றைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், மாணவர்களுடனான உரையாடல் நிறைந்த உலகத்தை அனைவரும் அறிவோம். ஆனால், அவருடைய இன்னொரு உலகம் மிகப்பெரியது. அது, அவர் உறவுகளின் பாசத்தில் நிறைந்தது!

மனைவி என்ற ஓர் உறவைத் தவிர, தன் வாழ்வில் அத்தனை உறவுமுறைகளையும் கண்டவர் கலாம். அண்ணன்களின் பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என அனைவரும் இவருக்கு மிகப் பிரியமானவர்கள். தன் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த குழந்தையின் பெயரையும், பிறந்த நாளையும் நினைவில் வைத்திருப்பவர் கலாம்! கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் மகளான டாக்டர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர், தன் சித்தப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

கலாம்... நம்பிக்கைக் கடல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எங்க குடும்பம் ஆலவிருட்சம் போல பெருசு. சித்தப்பா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள், நாங்க எல்லோரும் ஒரு குட்டி கிராமமா வாழ்ந்து வர்றோம். கலாம் சித்தப்பா ஊருக்கு வரப்போறதா தகவல் வரும். உடனே வெளியூர்களில் இருக்கும் சொந்தங்
கள் உட்பட, ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க எங்க வீட்டுல ஒண்ணு கூடிருவோம். வீட்டுக்கு வரும் சித்தப்பா, எங்க எல்லாரையும் தனித்தனியா பெயர் சொல்லிக் கூப்பிட்டு, நலம் விசாரிப்பார். எங்க குடும்பத்துல யாருக்காவது குழந்தை பிறந்த செய்தி சித்தப்பாவுக்கு தெரிஞ்சவுடனேயே, அவர்கிட்ட இருந்து அந்தக் குழந்தைக்குப் பரிசு வந்துடும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது, அந்தக் குழந்தையை மறக்காம விசாரிச்சு, தூக்கி வரச் சொல்லி கொஞ்சுவார். அதோட பிறந்தநாளை ஞாபகம் வெச்சு வாழ்த்துவார். வீட்டுல எங்க வாண்டுப் பட்டாளங்களுக்கு நடுவுல உக்கார்ந்து, அவங்களோட மழலையை ரசிச்சபடி தானும் ஒரு குழந்தையாவே மாறிப்போவார் கலாம் சித்தப்பா.

நானும் சின்னக் குழந்தையா இருந்தப்போ என்னோட குழந்தையா மாறி விளையாடின சித்தப்பா, நான் பதின் பருவத்துக்கு வந்ததும் எனக்கு நல்ல நண்பரானார். என்னோட இளமைக் காலத்துல இஸ்லாமியப் பெண்கள் வெளியே போறது சுலபமில்ல. அப்படியே போனாலும் குதிரை வண்டியில திரை போட்டுட்டுதான் போகணும். அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த முதல் பட்டதாரி பெண் நான்தான். அதுக்கு சித்தப்பா கொடுத்த ஊக்கம்தான் காரணம். ‘படிக்கப் போகும்போது மாணவியாவும், வீட்டுக்கு வந்தா பெண் பிள்ளையாவும் நடந்துக்கணும்!’னு சொல்வார் சித்தப்பா. எங்கே இருந்தாலும் வருஷத்துல 365 நாளும் தவறாம எங்கிட்ட தொலைபேசியில பேசிடுவார். தினமும், ‘இன்னிக்கு வீட்டுல என்ன விசேஷம்?’னு சமையலில் இருந்து அப்பாவோட உடல் நலம் வரை எல்லாத்தையும் விசாரிச்சுடுவார்!’’ எனும் நசீமா, எம்.ஏ., எம்.ஃபில்., பி.ஹெச்டி பட்டதாரி. ‘திருக்குர்ரானில் அறிவியல் கூறுகள்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை, புத்தகமாக வெளிவந்துள்ளது.

‘‘சித்தப்பா டெல்லியில இருக்கும்போது, நாங்க ராமேஸ்வரத்துல இருந்து அங்கே போவதை ஆவலா எதிர்பார்த்துக் காத்திருப்
பார். எங்களுக்கான தங்கும் வசதி, உணவு, அப்பாவின் உடல்நிலைக்குத் தேவையான வசதிகள்னு எல்லாத்தையும் தானே முன்னின்று தனக்கு திருப்தியாகும் வரை ஏற்பாடு செய்வார். நாட்டோட இந்த கடைக்கோடி கிராமத்துல இருந்து நாங்க எடுத்துட்டுப் போற இனிப்பு வகைகளை பிரியமா சாப்பிட்டு, ‘இதுல வெல்லம் தூக்கலா, பிரமாதமா இருக்கு!’னு ருசிச்சு, ரசிச்சுப் பேசுவார் எங்க சித்தப்பா!’’

- சொல்லும்போதே இமைகள் ஈரமாகின்றன, நசீமாவுக்கு.

கலாம்... நம்பிக்கைக் கடல்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரியின் முதல்வர், டாக்டர் சுமையா தாவூத், ‘ஊர்க்காரர்’ என்கிற வகையில் கலாமுடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘அவர் குடியரசுத்தலைவராக இருந்தபோது பெண்கள் கல்லூரி முதல்வர்களுக்கான பயிற்சி டெல்லியில் நடந்தது. 25 பெண் முதல்வர்கள் கலந்துகொண்டோம். ஊர்க்காரர் என்ற உரிமையில், ‘டெல்லி வந்திருக்கிறோம், உங்களைச் சந்திக்க முடியுமா?’ என்று கலாம் அவர்களிடம் இ-மெயில் மூலம் கேட்டேன். உடனே அவருடைய உதவியாளர் போனில் தொடர்புகொண்டு, ‘நீங்கள் மட்டுமா, குழுவினர் அனைவருமா?’ என்றார். ‘அனைவரும் சந்திக்க முடியுமா?!’ என்றவுடன், அன்று மாலையே இரண்டு மணி நேரம் ஒதுக்கி எங்களைச் சந்தித்தார் கலாம். ஒவ்வொரு முதல்வரிடமும் அவர்களின் குடும்ப நிலை, கல்லூரி, பணிபுரியும் ஊர், அங்குள்ள பொருளாதார நிலை, பிள்ளைகளின் கற்கும் முறை என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் அவர் மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் கொஞ்சம் அதிகமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

பதவிக்காலம் முடிந்த பின் எங்கள் கல்லூரி விழாவுக்கு வந்திருந்தார். எக்காலத்திலும் கல்வியை விட்டு விடக்கூடாதென்று மாணவிகளிடம் பேசினார். கீழக்கரையிலுள்ள பள்ளி மாணவர்கள் இரண்டாயிரம் பேரை வரவைத்து, அவர்களிடமும் உரையாடினார். ‘ஷார்ஜா இந்தியா மெட்ராஸ் அசோஸியேஷன்’ என்ற அமைப்பை கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் துபாயில் நடத்துகிறார்கள். அவர்களுடைய நிகழ்ச்சிக்கு கலாமை அழைத்தபோது, ‘ஷார்ஜா’ என்று பெயர் வைத்திருப்பதால் மறுத்துவிட்டார். ‘சம்பாதிக்கப் போன நாட்டின் பெயரை, நம்மவர்கள் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்?’ என்றார். அப்படி ஒரு முழுமையான, நேர்மையான, அறிவான, அன்பான இந்தியர் அவர். அவர் இழப்பின் வலி எங்கள் மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கசிந்துகொண்டிருக்கிறது!’’
 
- குரல் மெலிந்து முடித்தார் சுமையா.

கடல் கிராமம் தந்த இந்தியாவின் கலங்கரை விளக்கம்!

செ.சல்மான், இரா.மோகன்  படங்கள்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism