Published:Updated:

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

Published:Updated:

டாக்டர் சுனித்தி சாலமன்... இந்தியாவில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பை முதலில் கண்டறிந்த சென்னைப் பெண். அந்த நாளில் இருந்து, 29 வருடங்களாக, தன் 75 வயது வரை ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகவும், நலனுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். ஜூலை 28-ல் மண்ணுலகை விட்டு சுனித்தி பிரிய, ஈடுகட்ட முடியாததாகிவிட்டது அவரின் இழப்பு!

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

1986-ம் ஆண்டு. அப்போது சுனித்தி சென்னை அரசு பொது மருத்துவமனையில் மைக்ரோபயாலஜிஸ்ட் ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆறு பெண் பாலியல் தொழிலாளிகளின் ரத்த மாதிரிகளைச் சோதித்த அவர், அவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். அது இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தது. காரணம், உலக நாடுகளில் எய்ட்ஸ் பற்றிய பேச்சு பரவிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை முதன் முதலாகத் தமிழ்நாட்டில் கண்டறிந்த சுனித்தி சொன்னபோது, அதிர்ந்தது தேசம். அப்போதும்கூட நம்பாமல், அந்த ரத்த மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டே, உறுதிசெய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ச்சியாக, எச்.ஐ.வி. நோயாளிகள் கண்டறியப்பட்டபோது, அவர்களைக் கேவலமாக எதிர்நோக்கியது தேசம். அவர்களுடன் பேசுவது, அவர்களைத் தொடுவது, அவர்களுக்கு உதவுவதை அருவருப்பாக நினைத்து, அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள். ஆனால் சுனித்தி, தன் வாழ்நாளை அவர்களின் நலனுக்கானதாக அமைத்துக்கொள்ள ஆரம்பித்தார். 1993-ல் முதன் முதலாக, ஹெச்.ஐ.வி. பரிசோதனைக்கான தனியார் மையம் மற்றும் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கான ஆலோசனை மையமான ஒய்.ஆர்.ஜி கேர் (YRG CARE) சென்டரை சென்னையில் நிறுவினார்.

இப்போதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சமூகப் புறக்கணிப்பு தொடர்கதைதான். எனில், 20 வருடங்களுக்கு முன் சொல்லத் தேவையில்லை. ஆனால், அப்போதே அவர்களை அக்கறையுடன் அணுகி, சாமானியர்களால் பெற முடியாத விலை உயர்ந்த சிகிச்சையை யும், மருந்துகளையும் கிடைக்கச் செய்து, அவர்களின் மனதுக்கும் மருந்தாக இருந்தவர் சுனித்தி. இன்னொரு பக்கம், சமுதாயத்திடமும் எய்ட்ஸ் பற்றிய விழிப்பு உணர்வுக்காக தொடர்ந்து போராடினார்.

பெரிய குடும்பத்துப் பெண். அமெரிக்கா விலும், இங்கிலாந்திலும் படித்தவர். அவர் நினைத்திருந்தால், லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் சர்வதேச நிறுவனத்தின் பணி நாற்காலியில் தன்னை அமர்த்திக்கொண் டிருக்க முடியும். ஆனால், தங்கள் சாவு உறுதிசெய்யப்பட்டுவிட்டதை அறிந்தவர் களின் மருத்துவப் போராட்டத்தில் அவர் களுடன் நிற்க முடிவெடுத்தார். வாழும் காலத்தை உயிர்ப்புள்ளதாக்கும் நம்பிக்கையை அவர்களுக்குத் தந்தார். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களை ரட்சிப்பதற்காகவே இந்தப் பிறவி தனக்குக் கொடுக்கப்பட்டதாக நம்பினார்; அந்த நம்பிக்கையிலே தன் இறுதி மூச்சு வரை நின்று செயலாற்றினார்.

‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்!

ஒய்.ஆர்.ஜி அமைப்பைச் சேர்ந்தவர்கள், சென்னை, தரமணி சாலையில் உள்ள ஒய்.ஹெச்.எஸ் ஆடிட்டோரியத்தில் சுனித்திக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது பலரும் சுனித்தியுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட சேகர், ‘‘எனக்கு ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்னு தெரிஞ்சப்போ, சுக்குநூறாகிப்போய்தான் சுனித்தி அம்மாகிட்ட வந்து சேர்ந்தேன். எங்கிட்ட இருந்து எல்லோரும் விலகித் தெறிச்சப்போ, சுனித்தி அம்மா என்னைத் தொட்டுப் பேசினாங்க. ‘நான் ஒரு வருஷத்துல செத்துப்போயிடுவேன்னு சொல்லிட்டாங்கம்மா’னு சொல்லி நான் கதற, ‘நீ ரொம்ப நாளைக்கு வாழ்வே பாருடா!’னு ஆறுதல் சொல்லி சிகிச்சை அளிச்சாங்க. 2001-ல, எய்ட்ஸ் நோய்க்கான ஒரு மருந்து பாட்டிலோட விலை 35 ஆயிரம் ரூபாய். அம்மாவாலதான் அந்த மருந்துகள் எல்லாம் எங்களுக்குக் கிடைச்சது. பல வருடங்களாக சாவுகிட்ட இருந்து என்னைக் காத்து வந்த தெய்வம் அவங்க. இன்னிக்கு என்னைப்போல பல எய்ட்ஸ் நோயாளிகள் உயிரோட இருக்க, சுனித்தி அம்மாதான் காரணம்!’’ என்றார் கண்ணீர் மல்க.

மகப்பேறு மருத்துவர் அமுதா ஹரி, ‘‘அவங்ககிட்ட நான் கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண்களை, ஹெச்.ஐ.வி. நெகட்டிவ் குழந்தைகளை அதிக அளவில் பிரசவிக்க வைத்ததைப் பாராட்டி, 2006-ல் எனக்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது கிடைத்தது. அதுக்குக் காரணமா இருந்தவங்க, சுனித்தி மேடம்தான்!’’ என்றார் நன்றியுடன்.

சுனித்தியின் மகன் சுனில் சுஹாஸ் சாலமன், ‘‘2001-ம் ஆண்டு அம்மாவுக்கு ரெண்டு சர்ஜரி நடந்த பின்னும், தன்னோட சேவையில் நேரம் உட்பட அவங்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக்கல. பேன்கிரியாடிக் கேன்சரால் பாதிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அதிக வலியுடன் போராடினாங்க. விருதுகள் பல வாங்கியிருந்தாலும், விளம்பரத்தில் இருந்து விலகி நின்னு, சேவையை தன் கடமையா நினைச்சு செய்தவங்க அம்மா. அந்தக் கடமையை, அதே அக்கறையுடனும் நேர்மையுடனும் இந்த அமைப்பு தொடரும்!’’ என்றார், உறுதியான குரலில்.

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism