Published:Updated:

‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்!’’

- அன்பு அப்பா பிரித்விராஜ்

‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்!’’

- அன்பு அப்பா பிரித்விராஜ்

Published:Updated:

மீபத்தில் நடிகர் `பப்லு' பிரித்விராஜுக்கும் அவர் மகனுக்கும் ‘சோல்மேட்’ விருது வழங்கியிருக்கிறது, ‘வி மேகசின்’. சென்ற வருடம் ‘வாவ் மேகசின்’ அவருக்கு ‘பெஸ்ட் ஃபாதர்’ அவார்டு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.இதற் கெல்லாம் காரணம்... ஆட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு, அற்புத அப்பாவாக பிரித்விராஜ் அன்பு செய்து வருவதுதான்!

‘  ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்!’’

‘‘மீடியாவில் காலூன்றி, என் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பயணம் நல்லபடியா போயிட்டிருந்தப்போ, எனக்குத் திருமணமும் முடிந்து, அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. எனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்க வந்த அந்தக் குழந்தைக்கு, ‘அஹத் மோகன் ஜபார்’னு பேர் வெச்சோம். ‘அஹத்’னா `அரபிக்' மொழியில் ‘ஒருவன்’னு அர்த்தம். ‘மற்ற குழந்தைகளைப் போல சேட்டை இல்ல, அஹத் ரொம்ப அமைதி!’னு நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கும்போது, ‘இல்ல, அவன் அப்நார்மலா இருக்கான். டாக்டர்கிட்ட காட்டணும்’னு சொன்னார் என் மாமனார். அவர் எப்படி என் பையனை அப்படிச் சொல்லலாம்னு, கோபப்பட்டேன். கோபம் அடங்கி, நிதானமா யோசிச்சப்போ, டாக்டர்கிட்ட போகலாம்னு எனக்கும் தோணுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர், ‘உங்க பையனுக்கு ஆட்டிஸம்!’னு சொன்னார். அந்த வார்த்தையைக் கேட்ட நொடியில், வானமே இடிஞ்சு என் தலையில விழுந்ததுபோல இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் மனஉளைச்சலுக்கு ஆளானாலும், ‘இது கடவுளால் நமக்குப் பரிசளிக்கப்பட்ட தூய்மையான குழந்தை, இதை நல்லபடியா காப்பாத்தணும்!’னு நானும் மனைவியும் ஆத்மார்த்தமா முடிவெடுத்தோம். பலரும், இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொன்னாங்க. ஆனா, அந்தக் குழந்தையும் இதேபோல பிறக்க வாய்ப்பிருக்கு; ஒருவேளை அது நல்லபடியா பிறந்தாலும், அஹத் எங்களுக்கு ரெண்டாம்பட்சம் ஆகிடுவான்னு, அதைத் தவிர்த்துட்டோம்.

பொதுவா, ஆட்டிஸம் குழந்தைகளுக்கு ஏதாவது தனித்திறன்கள் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, அப்படி நாங்க எதையும் அஹத்கிட்ட தேடலை. மாறா... அவனோட உலகத்தில் நாங்களும் அவனோட சேர்ந்துகொண்டோம். அவனோட சந்தோஷத்தை, அவனோட கஷ்டத்தை, அவனால செய்ய முடியுறதை, முடியாததை நாங்க புரிஞ்சுக்கிட்டோம். நீலாங்கரையில் ‘வி கேன்’ என்ற ஆட்டிஸ குழந்தைகளுக்கான பள்ளியை இவனுக்காகவே ஆரம்பிச்சோம். அஹத் 12 வயசு வரைக்கும் அங்கதான் படிச்சான். அதுக்கு மேல அவனால படிக்க முடியலை. அவனை சிரமப்படுத்தாம, நிறுத்திட்டோம். இப்போ அவனுக்கு 19 வயசாகுது. அவன் வேலைகளை அவனே செய்துக்கிற அளவுக்கு அவனைப் பழக்கியிருக்கோம். அஹத்துக்கு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு புரியும். போட்டோ எடுக்கும்போது `ஒன், டூ, த்ரீ' சொன்னா சிரிப்பான்.

‘  ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்!’’

நான் நிறைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஹத்தையும் கூட்டிட்டுப் போவேன். 2006-ம் வருஷம் ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூருல இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தப்போ, ஏர்போர்ட்ல செக்கிங் ஆபீஸர் என் பையனைச் செக் பண்ணும்போது இவன் சரியா ஒத்துழைக்கலை. உடனே என்னைப் பார்த்து, ‘உங்க பையன் லூஸா?’னு கேட்டார். அந்த வார்த்தை ஒரு அப்பாவா என் மனசை ரணமாக்கிருச்சு. ‘நீங்க ஒரு ஆபீஸர். அப்படி பேசக்கூடாது’னு சொன்னேன். ‘நான் அப்படித்தான் கேட்பேன்’னு அவர் சொல்ல, தகராறா ஆயிருச்சு. பிரச்னை செய்தவரை கேமராவில் ஷூட் செய்து, சி.என்.என் செய்தி சேனலில்  கொடுத்தேன். அது பரபர மீடியா செய்தியாகி, மாற்றுத்திறனாளிகள் குறித்து பெரியளவில் விழிப்பு உணர்வு ஏற்பட்டது. அந்தப் பிரச்னையால ஒரு நல்மாற்றம் வந்தது.

அதுக்கப்புறம், விமானம் மற்றும் ரயில் பயணங்களில் அவங்களுக்கான உரிமைகள், சலுகைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வழி ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், எங்கிட்ட மன்னிப்புக் கேட்டாங்க.

எங்க பையன்தான் எங்களுக்கு உலகம். அவன்தான் எங்களோட சந்தோஷம். அவனைப் பத்தின எந்த வருத்தமும் எங்களுக்கு இல்லை. ஒரு நார்மல் குழந்தை ஒரு விஷயத்தை ஒரு நாளில் கத்துக்கிட்டா, இவனுக்கு ஒரு மாசம் ஆகும். அவ்வளவுதான். பொதுவா, மூணு வயசு வரைக்கும் குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தை யும் புதுசா செய்யும்போது, பெத்த வங்களுக்கு ‘நடந்துட்டான்’, ‘அப்பா'னு சொல்லிட்டான்’, ‘அ’எழுதிட்டான்’னு சந்தோஷமா இருக்கும். அதுக்கு அப்புறம் அவங்க செய்ற விஷயங்கள் அவங்களுக்கு வாடிக்கை ஆயிடும். ஆனா, இன்னிக்கு வரைக்கும் எங்க பையன் புதுசா செய்ற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்குப் பரவசம்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவனா பர்ஃப்யூம் போட்டுக்கிட்டான். எங்களுக்கு அன்னிக்கு இன்னொரு திருவிழா! இப்படி அவனோட ஒவ்வொரு புது நடவடிக்கையும்தான் எங்களுக்கு தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், நியூ இயர் எல்லாம்.

எங்களோட 19 வயசுப் பையன் அஹத், இப்பவும், எப்பவும் தப்பு, தவறுகளே அறியாத குழந்தை. பொய், துரோகம், சூது எதுவும் அவனை எப்பவும் அண்டாது. பிள்ளைங்க மேல அன்பைக் கொட்டி வளர்த்தாலும், சில பிள்ளைகள் கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை விட்டுப் போயிடலாம்; இல்லைன்னா சொத்துக்காக வந்து நிக்கலாம். ஆனா, என் பையன், கடைசி வரை எங்ககூட, எங்களுக்காகவே இருப்பான்; நாங்க அவனுக்காகவே வாழ்வோம்!’’

- பிரித்விராஜ் மகனை இறுக அணைத்துக்கொள்ள, வாய்விட்டுச் சிரிக்கிறான் அஹத்!

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism