Published:Updated:

பரதமும் யோகமும் சங்கமம்!

பரதமும் யோகமும் சங்கமம்!

பார்க்க ப்ளஸ் டூ படிக்கும் பெண் போல தோன்றுகிறார் அன்னபூரணி. பரதத்தையும் யோகத்தையும் இணைத்து ‘பரதயோகா’ என்று நூதன பயிற்சியை அறிமுகப்படுத்தி, சென்னையில் வகுப்புகள் எடுத்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு வார இறுதிகளில் அன்னபூரணி வழங்கும் ‘ரெட்ரீட்’ என்னும் புத்துணர்வுப் பயிற்சிக்கும் நல்ல வரவேற்பு.

பரதமும் யோகமும் சங்கமம்!

சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் தன் நடனப்பள்ளியில், அயல்நாட்டுப் பெண் ஒருவருக்கு ‘பரதயோகா’ பயிற்சி அளித்துவிட்டு வந்த அன்னபூரணி, வெண்ணிற குர்தி, பைஜாமாவில் மிக எளிமையான தோற்றத்தில் வரவேற்றார்.

‘‘எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். பால்யத்திலேயே அப்பா தவறிட்டாங்க. நான் ஒரே பொண்ணு. எங்க சமூகத்தில் பெண்பிள்ளைகளை ஓரளவு படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்திருவாங்க. எனக்கோ ஃபைன் ஆர்ட்ஸில் ஆர்வம். அப்போதான் கலாக்ஷேத்ரா ருக்மணிதேவி அம்மாவைப் பற்றிய டாக்குமென்டரி பார்த்தேன். அதன் தாக்கத்தால்தான், உறவினர் உதவியுடன் சென்னை வந்து கலாக்ஷேத்ராவில் சேர்ந்து பரதம், வேதம், யோகம், இசைன்னு நாலு வருஷம் படிச்சு டிப்ளோமா வாங்கினேன். அதுக்கப்புறம் பி.எஸ்ஸி., உளவியல், எம்.எஸ்ஸி., யோகா எல்லாம் படிச்சேன்!’’ என்றவர், தன் இத்தாலிய மாணவிக்கு பிராணாயாமப் பயிற்சியில் திருத்தங்கள் சொல்லிவிட்டு வந்தார்.

‘‘கலாக்ஷேத்ராவில் எனக்கு ஆசிரியரா இருந்த, 20 வருஷ அனுபவசாலியான ஜோஸ்னா நாராயணன், என் கண்ணோட்டத்தையே மாத்தினாங்க. டிப்ளோமா கடைசி வருஷ ப்ராஜெக்ட்டுக்கு அவங்க ஆலோசனைப்படி, பரதம், யோகம், உளவியல் மூணையும் இணைச்சு ‘டான்ஸ் தெரபி’யை ப்ராஜெக்ட்டா பண்ணினேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் என் யோகா புரொபசர் டாக்டர் விஸ்வநாதன் எனக்கு நிறைய ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். இதை அடிப்படையா வெச்சுத்தான் இந்த ‘பரதயோகா’ கான்செப்டை உருவாக்கினேன்.

பரதமும் யோகமும் சங்கமம்!

பரதம் தனி, யோகம் தனி இல்ல. ரெண்டுமே உடலுக்கான சக்தியையும் புத்துணர்ச்சியையும் தர்ற விஷயங்கள்தான். பாவம், தாளம், ராகம்... இது மூணையும் நம்ம உடலுக்காகவும் மனசுக்காகவும் பண்றது பரதயோகா. இதைப் பயிற்சி செய்யும்போது உடலுக்கும் மனசுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.

பரதத்தை உலகுக்குத் தந்த பரதமுனியே, சிவபெருமானின் நாட்டியத்தைப் பார்த்து, அதில் லயிச்சுத்தான் பதஞ்சலி முனிவர் மூலமா யோகசூத்திரத்தைக் கொடுத்ததா சொல்வாங்க’’ என்ற அன்னபூரணி தன்னுடைய வகுப்புகளுக்கு ‘லைஃப் சூத்ரா’ என்று பெயரிட்டுள்ளார்.

‘‘இந்தப் பயிற்சியின் முழு நன்மைகளும் கிடைக்கணும்னா, இதை தொடர்ந்து செய்யணும். முதல் நாள் செய்ததுமே முடிவை எதிர்பார்க்கற விஷயம் இல்லை இது. முக்கியமா சிகரெட், மது போன்ற பழக்கங்களை விட நினைக்கிறவங்களுக்கு இது நல்ல பலன் தரும். அந்த வகையில் எங்கிட்ட பயிற்சி எடுத்துக்கிறவங்களும் இருக்காங்க. ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கிறதுக்காகத்தான் சிகரெட், லிக்கர் எல்லாம் எடுக்கிறாங்க... அதுக்கு ஆல்டர்நேட்டிவ் கொடுக்கும்போது தன்னால சிகரெட், மதுவை மறந்துடுவாங்க’’ எனும் அன்னபூரணிக்கு இன்னும் பல கனவுகள் இருக்கின்றன, பிரமாண்டமாக.

பரதமும் யோகமும் சங்கமம்!

‘‘லைஃப்சூத்ரானு ஒரு சுயசார்பு கிராமத்தை உருவாக்கணும். நமக்கான உணவு, நமக்கான மருத்துவம்... இப்படி இயற்கையோட இசைந்த ஒரு சமூகத்தை அந்தக் கிராமத்தில் உண்டாக்கணும். அதுக்கு நான் இன்னும் பல ஆயிரம் மைல்கள் போகணும்!’’

- ‘பளீர்’ எனப் புன்னகைக்கும் அன்ன பூரணியின் கண்களில் ஆரோக்கியமும் தான் சார்ந்த சமுதாயத்துக்கான அக்கறையும் மின்னுகின்றன!

ஒரு வகுப்பில் ஒரு மாணவர்!

அன்னபூரணியின் ‘லைஃப்சூத்ரா’ வகுப்புகளில் குழுவாக வகுப்புகள் இல்லை. ஒரு நேரத்தில் ஒரு மாணவர்தான். 45 நிமிட வகுப்பு. அன்னபூரணியின் அம்மா நேச்சுரோபதி மருத்துவர். எனவே, இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண் உணவுகள் போன்றவை பற்றிய விழிப்பு உணர்வையும் தன் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். ‘பான்யன்’ போன்ற தொண்டு நிறுவனங்களில் வாலன்டியர் ‘பரதயோகா’ பயிற்சியாளராகப் பணியாற்றிய இவர், மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு இது நல்ல மருந்து என்கிறார்

பிரேமா நாராயணன்  படங்கள்: தி.குமரகுருபரன்

அடுத்த கட்டுரைக்கு