Published:Updated:

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

Published:Updated:

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சிகப்பி அருணாச்சலத்துக்கு வயது 43. கேன்சருடனான போராட்டத்தில் ஒருமுறை வென்றுவிட்டாலும், தொடர் சிகிச்சையில் இருப்பவர். ஆனால், பார்ப்பவர்களுக்கு எல்லாம் ‘அய்யோ பாவம்!’ எண்ணம் தராமல், மற்றவர்களுக்குத் தான் ஒரு ‘பூஸ்ட் அப்’ ஆக இருப்பது சிகப்பியின் ஸ்பெஷல்!

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

‘‘பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கலாமா?!’’ -  சிவப்பு சுடிதாரில் வந்தமர்ந்தபடி கேட்டார் சிகப்பி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சின்ன வயசுல பிறந்த வீட்டில் செல்லப் பிள்ளையா இருந்திருப்போம். ஆனா, கல்யாணம் ஆனவொடனே புகுந்த வீட்டில் அத்தனை வேலைகளையும் கத்துக்கிட்டு, இழுத்துப் போட்டு செய்ற பொறுப்பு தானா நமக்கு கைவருவது பெண்மையின் அதிசயம்தான். வேஸ்டாயிருமேனு மீதமாகும் சாப்பாட்டை எல்லாம் சாப்பிடுறது, எப்போயாச்சும் நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் பழம், குழந்தைகளைக் கவனிக்கிறதில் தொலைந்து போன நம்மோட பிரத்யேகப் பொழுதுகள்னு... குடும்பம் குடும்பம்னு ஓடிட்டே இருப்போம். இதில் நம்ம ஆரோக்கியத்தைப் பத்தின அக்கறை நமக்கு வரவே வராது. ஆனா, ஒரு குறிப்பிட்ட வயதும் அதுக்குரிய பிரச்னைகளும் வரும்போது, நம்ம ஆரோக்கியம் பாழாகிக்கிடக்கும்போது, பலரும் நம்மிடமிருந்து விலகிடுவாங்க. அதனால, முதல்ல உங்களை நீங்க கவனிச்சிக்கிறதும், உங்க உடல்நலனுக்கு முக்கியத்துவம் தர்றதும் அவசியம்!’’

- அனுபவ வார்த்தைகளுடன் ஆரம்பித்தார் சிகப்பி.

‘‘பத்தாம் வகுப்போடு எனக்கு படிப்பு முடிஞ்சிருச்சு. பதினேழரை வயதில் திருமணம். பதின் பருவத்தில் இருந்து இல்லத்தரசியாகிற அந்தப் பக்குவத்தை, பல பிரச்னைகளைக் கடந்து அடைந்தேன். சில வருஷங்களில் என் கணவர் என்னை கம்ப்யூட்டர் கிளாஸுக்கும், கைவினைப் பொருட்கள் வகுப்புகளுக்கும் அனுப்பினார். வேலைக்குப் போனேன். வீடு, வேலை, குடும்பம் என ஓய்வில்லாத ஓட்டம் ஆரம்பிச்சது. என் டூ வீலர்தான் எனக்கு ‘ரைட் ஹேண்ட்’ எனும் அளவுக்கு, எல்லா வேலைகளிலும் அதுதான் எனக்குப் பலம்’’ என்பவருக்கு, முதுகுவலி படுத்தியிருக்கிறது. கூடவே, இடது காலும் செயலிழந்துவிட, அதிர்ச்சியுடன் மருத்துவரிடம் சென்றிருக்கிறார்கள்.

‘‘ஆர்த்தோ மற்றும் நியூரோ சர்ஜரி பண்ணா சரியாகிடும்னு சொன்னாங்க டாக்டர்கள். சர்ஜரி முடிந்து இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய என்னை, ஒன்பது நாட்கள் கழித்துதான் டிஸ்சார்ஜ் செய்தாங்க. ஆனா, வலி கொஞ்சம்கூட சரியாகல. தோழி பரிந்துரை செய்த, பிரபல மருத்துவமனைக்கு போனப்போ, ‘உங்களுக்கு முதுகு தண்டுவடத்தோட அடிப்பாகத்துல கேன்சர். புளியங்கொட்டை சைஸில் இருந்த கேன்சர் கட்டி தேங்காய் சைஸுக்கு வளர்ந்துடுச்சு’னு ஆபத்தான நிலையில், நாலு வருஷத்துக்கு முன்னாடி சர்ஜரி செய்து அந்தக் கட்டியை நீக்கி பிளேட் வெச்சு காப்பாத்தினாங்க. அது எனக்கு மறுபிறப்பு. ஆனா, ஏன் பிழைச்சோம்னு என்னை நினைக்க வெச்சது தொடர்ந்த நாட்கள்!’’

- சிறு மௌனத்துக்குப் பின் தொடர்ந்தார்...

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

‘‘என்னை உடல்நலம் விசாரிக்க வந்தவங் களைவிட, தவிர்த்தவங்கதான் அதிகம். உறவினர்கள் பலர் விலகிப் போனாங்க. என்னைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கும் உறவுகளோ, தீராத நோய் பாதிச்ச நோயாளி போல பார்த்தாங்க.

முதுகுத்தண்டின் வால் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகள் எல்லாவற்றையும் ரிமூவ் பண்ணிட்டாங்க. இந்த  நரகவேதனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. ஸ்லிம்மா, அழகா இருந்த நான், மாத்திரை, மருந்து, யூரினரி இன்ஃபெக்‌ஷன்னு அவதிப்பட்டு, எடை கூடினு... மனசளவிலும் உடலளவிலும் சுக்குநூறாயிட்டேன். மத்தவங்களுக்குப் பாரமா இருக்கிற இந்த வாழ்க்கை தேவையானு நினைக்கிற அளவுக்குப் பாதிக்கப்பட்டு, என் பிள்ளைகளின் ஆறுதல் மற்றும் அரவணைப்பு மூலம் மீண்டு வந்தேன்!’’ என்றவர், அதன்பிறகுதான் வாழ்க்கையை, அது தரும் துன்பங்களையும் தாண்டி இன்பமாக வாழும் வழியைக் கண்டடைந்திருக்கிறார்.

‘‘நமக்கு மட்டும் ஏன் இப்படிங்கற எண்ணத்தை தூக்கிப்போட்டுட்டு, என் நோயை, உடல்நிலையை மனதால் ஏற்றுக் கொண்டதுதான் முதல்படி. என்னுடைய இயற்கை உபாதையைக்கூட என் பையனும், பொண்ணும்தான் க்ளீன் பண்ணுவாங்க. அந்தளவுக்கு அவங்களோட உதவியின் மூலம்தான் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டிட்டு இருந்தேன். முதல்ல, அதிலிருந்து மீள என்னால முடிஞ்சளவுக்கு உடல் அசைவுகளைச் செய்ய ஆரம்பிச்சேன். என்னால நீண்ட நேரம் உட்காரவும் முடியாது, நடக்கவும் முடியாது. ஆனாலும் காலையில சீக்கிரம் எழுந்து உட்கார்ந்துக்கிட்டே சமைச்சு, கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாடு கட்டிக் கொடுத்துடு வேன். ஸ்லீப்பிங் டேப்லெட் சாப்பிட்டாதான் தூக்கம் வரும். ஆனா, ஒரு கட்டத்தில் அதுவும் வேலை செய்யாம போக, தூக்கம் குறைஞ்சது. முழிச்சிருக்கும் பொழுதுகள் கூடும்போது, கவலைகளும் கூடும் என்பதால்... அதை உயிரோட்டமாக்குவதற்கான வழிகளை யோசிச்சேன்.

வாசிப்புப் பழக்கம் இருந்ததால, புத்தகங்கள் என் பொழுதுகளை புத்துணர்வாக்கிச்சு. வருஷத்தில் 365 நாட்களும் உடல்வலி இருந்துட்டேதான் இருக்கும். மருத்துவ சிகிச்சைகளோட, மனசிகிச்சையும்தான் அந்த வலியைக் குறைக்க முடியும்னு முடிவெடுத்தேன். அதுக்கு நான் கற்றுக்கொண்ட கலைகளைக் கையில் எடுத்தேன். கண்ணாடி ஷீட்களில் ரங்கோலிகள்,  பல வகையான பெயின்ட்டிங்னு பல டிசைன்கள் வரைந்தேன். கவிழ்ந்து படுத்து வரையுறதால, என் முழங்கைகள் ரெண்டும் புண்ணாகிடும். ஆனா, என் கிராஃப்ட்டை பார்த்து பாராட்டுறவங்களோட வார்த்தைகளில், என்னோட ஜீவனை குணப்படுத்தும் மருந்து இருந்ததை உணர்ந்தேன். அதனால கண்காட்சி வைக்கிற அளவுக்கு தொடர்ந்து வரைந்தேன். தெரிஞ்சவங்களுக்கு விற்பனையும் செய்தேன்’’ - நோயின் வேதனையை சிகப்பி விரட்டிய விதம் கேட்டு் வியந்து போனோம்!

கேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’!

‘‘நான் ட்ரீட்மென்டில் இருந்த சமயம் என் கணவர், பொண்ணு, பையன் மூணு பேரும் என்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டாங்க. உலகமே என்னிடம் இருந்து விலகிப்போனாலும், உலகத்தில் இருந்து விலகி நான் வீட்டுக்குள் அடைஞ்சாலும் இவங்க மூணு பேரும் இருக்கிற வரைக்கும் என் சந்தோஷத்துக்கு என்ன குறை வந்துடப் போகுதுன்னு உணர்ந்தேன். அது என்னை மீட்ட பெரிய மந்திரம். என் உடல்நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டவங்க, நான் மீண்டு வந்ததைப் பார்த்து அதிசயப்பட்டப்போ, அந்தத் தன்னம்பிக்கையில் என் பலம் பெருகிச்சு. ‘நான் நல்லாயிருக்கேன்!’னு என் உதடுகள் சொல்லும்போது, அதை என் மனசு நம்பிச்சு, என் உடலும் வழிமொழிஞ்சது. சில நாட்களுக்கு முன்பு மறுபடியும் கேன்சர் பாதிப்பு வளர்ந்திருக்கானு பரிசோதனை செய்தப்போ... டெஸ்ட் ரிசல்ட் ‘நெகட்டிவ்!’ இதுக்கு முழுக்கக் காரணம், என் பாசிட்டிவ் மனநிலைதான்!’’

- பளிச் என புன்னகைக்கிறார் சிகப்பி.

‘‘பொண்ணு சீதாலட்சுமிக்கு கல்யாணம் முடிச்சாச்சு. சாஃப்ட்வேர் வேலையில் இருக்கும் பையன் நடராஜுக்கும் திருமணம் முடிச்சுட்டா, என் பொறுப்பு முடிஞ்சுடும்னு சொல்ல மாட்டேன். பேரன், பேத்தி எல்லாம் வளர்க்க வேண்டாமா? அவங்களுக்கு என் தன்னம்பிக்கை கதை சொல்லி ‘சூப்பர் ஆச்சி!’னு முத்தம் வாங்க வேண்டாமா?!’’

- வாழ்வின் மீதான பிரியமே அதை வெல்வதற்கான வழி என்பதை சொல்லாமல் சொல்லி முடித்தார் சிகப்பி!

வே.கிருஷ்ணவேணி

படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism