Published:Updated:

``வாழநினைத்தால் வாழலாம்!’’

வழிகாட்டிமரமாய் நிற்கும் எழுத்தாளர் மனைவி

``வாழநினைத்தால் வாழலாம்!’’

வழிகாட்டிமரமாய் நிற்கும் எழுத்தாளர் மனைவி

Published:Updated:

வாழ்க்கையில் திடீரென நிர்பந்தங்களையும் இக்கட்டுகளையும் சந்திக்கும் பெண்களுக்கு, கம்பீரமான ‘அந்தக்கால’ ரோல்மாடல்... சீதாலெட்சுமி. தனது 30-களில் கணவரை இழந்து நான்கு குழந்தைகளுடன் நிர்க்கதியாக வாழ்க்கை அவரை நிற்கவைத்தபோதும், மனம் தளாமல் வைராக்கியத்துடன் போராடி வாழ்க்கையில் ஜெயித்தவர். தற்போது 84 வயதாகும் சீதாலெட்சுமி, பிரபல எழுத்தாளர் காலஞ்சென்ற கு.அழகிரிசாமியின் மனைவி!

``வாழநினைத்தால் வாழலாம்!’’

கணவரின் மறைவுக்குப் பின், தன் பள்ளிப் படிப்பைத் தொடர்வது, வேலைக்குப் போவது, குழந்தைகளைக் காப்பாற்றுவது என்று 40, 50 ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் போர்க்குணத்துடன் சீதாலெட்சுமி தன் வாழ்க்கையை மீட்ட கதை, அசாதாரண விதை! அந்தச் சாதனையைச் செய்து தன் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினீயர், வங்கி அதிகாரி, ஒளிப்பதிவாளர் என்ற நிலைக்கு ஆளாக்கிய அந்த அன்னையைச் சமீபத்தில் அவருடைய மகள் வீட்டில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நான் பிறந்த வீடு சங்கீதக் குடும்பம். மலேசியாவில் சங்கீதம், நடனம் கத்துக் கொடுக்கிறதுக்கு எங்க அம்மாவுக்கு வாய்ப்பு கிடைச்சுப் போனதால, எங்க குடும்பம் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்துச்சு. அங்கே செட்டில் ஆனதுக்கப்புறம் நான், அக்கா, தங்கை எல்லாம் மேடைக் கச்சேரிகள் பண்ணினோம். அப்போதான் அவர் அறிமுகம் கிடைச்சது!

அவருக்கு கோவில்பட்டி பக்கத்தில் இடைச்செவல் கிராமம். கி.ராஜநாராயணன் வீட்டுக்குப் பக்கத்து வீடு. ரெண்டு பேரும் பால்யத்திலிருந்து ஆப்த நண்பர்கள். 1952-ல், மலேசியாவில் ‘தமிழ்நேசன்’ பத்திரிகைக்கு ஆசிரியராக வந்தார். அவருக்கு சங்கீதத்தில் ஆர்வம்; எனக்கு கதைகள் வாசிக்கிறதுல அதீதப் பிரியம். இசையும் இலக்கியமும்தான் எங்களைக் கணவன் மனைவியாக இணைச்சது!

``வாழநினைத்தால் வாழலாம்!’’

55-ல் கல்யாணம். எழுத்தில் பிரமாதமான வருமானம் இல்லை. ரெண்டு பையன், ரெண்டு பொண்ணுனு குழந்தைகள் பிறந்ததும், ரொம்ப சிரம வாழ்க்கை. அவருக்கு மலேசிய வேலை பிடிக்காம, ‘சென்னைக்கே போயிடலாம்’னு முடிவெடுத்தார். இங்கே வந்தும் சிரமதிசைதான். ஒண்ணாம் தேதியானா சம்பளம்னு எதுவும் வராது. எழுதுறதுக்கு சன்மானம் வரும். அதை வெச்சுத்தான் வண்டி ஓடுச்சு!’’ -இடையிடையே நிறுத்தி, மெதுவாகப் பேசுகிறார் சீதாலெட்சுமி.

‘‘அவருக்கு டி.பி. வந்து, 47 வயசில் இறந்துட்டார். உலகளவு காதலும் பிரியமும் வெச்சிருந்த என்னை, 37 வயசில் நாலு பிள்ளைங்களோடு தவிக்கவிட்டுட்டுப் போயிட்டார்! பெரியவளுக்கு அப்போ 14 வயசு. என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தப்போதான், எங்க குடும்ப நண்பர் வி.எஸ்.சுப்பையா ஐ.ஏ.எஸ்., எட்டாவது வரை படிச்சிருந்த என்னை, எஸ்.எஸ்.எல்.சி. படிக்கச் சொன்னார். ‘பாஸ் பண்ணிட்டா கவர்ன்மென்ட் வேலை வாங்கித் தரேன்’னும் உறுதி கொடுத்தார்.

என் கணவர் இறந்த ஒரு வருஷத்துக் குள்ளாகவே படிக்க ஆரம்பிச்சேன். டச் விட்டுப் போனதால, பாடங்கள் மண்டையில் ஏறல. என் பெரிய பொண் ணுதான் எனக்கு டியூஷன் டீச்சர். பாத்ரூம் போனாக்கூட புத்தகம் கையில் இருக்கும். அப்படி வெறியா படிச்சேன். பெரியவளும் நானும் ஒண்ணா எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுதினோம். அவ பாஸ் ஆகிட்டா; நான் ஃபெயில்! ஆனாலும், நான் சோரல. மீண்டும் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி, வீட்டு வசதி வாரியத்தில் கிளார்க் வேலைக்குச் சேர்ந்தேன். அதுக்கப்புறம்தான் குடும்பம் தலை நிமிர்ந்தது’’ என்றவர், தன் பிள்ளைகளை கரையேற்றியிருக்கிறார் கௌரமான அடையாளங்களுடன்!

‘‘மாங்கு மாங்குன்னு 23 வருஷம் உழைச்சேன். எல்லாரையும் நல்லாப் படிக்கவெச்சேன். பெரியவ ராதா அமெரிக்காவில் எலெக்ட்ரானிக் இன்ஜினீயர். அடுத்தது ராமச்சந்திரன், பேங்க்ல அதிகாரி. பாரதி, மனநல மருத்துவர். சாரங்கராஜன், மீடியாவில் ஒளிப்பதிவாளர்’’ என்ற சீதாலட்சுமி, தொடர்ந்தார்...

``வாழநினைத்தால் வாழலாம்!’’

``அவருக்கு 1970-ல சாகித்ய அகாடமி விருது கொடுத்தாங்க. அதில் வந்த பரிசுப்பணம் 10,000 ரூபாயில் இடம் வாங்கிப் போட்டு, லோன் போட்டு, அதில் ஒரு வீட்டைக் கட்டினேன். இப்போ என் பிள்ளைங்க எல்லாம் நல்லா செட்டில் ஆயிட்டாங்க. என்னை ராணி மாதிரிப் பார்த்துக்கிறாங்க. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவர்தான் இல்லை! அவரில்லாம நான் எப்படி இருந்தேன்னு தெரியல, எந்த வைராக்கியம் என்னை வாழவெச்சதுன்னும் புரியல. இப்ப நினைச்சா பிரமிப்பா இருக்கு!’’

- குரல் நடுங்க, கலங்கும் கண்களைத் துடைத்தபடி சொல்கிறார் - மாபெரும் சிறுகதை சாம்ராஜ்ய சக்ரவர்த்தியான கு. அழகிரிசாமியின் பட்டத்து ராணி!

கு.அழகிரிசாமி...

``வாழநினைத்தால் வாழலாம்!’’

புதுமைப்பித்தன், ரகுநாதன், வல்லிக்கண்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் கு.அழகிரிசாமி. தமிழ் சிறுகதைகளுக்கான முதல் சாகித்ய அகாடமி விருது 1970-ல் அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ சிறுகதை தொகுதிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

 சீதாலெட்சுமியைக் காதலித்த காலத்தில் தினமும் அவர் எழுதிய டைரிக் குறிப்புகளைக் காதல் காவியம் என்றே சொல்லலாம். 1951 முதல் 70 வரை அவர் எழுதிய பிற டைரிக் குறிப்புகளும் அப்படியே! இவற்றை புத்தகமாகப் பிரசுரிக்கவும், கு.அழகிரிசாமி பற்றிய ஆவணப்படத்தை தயாரிக்கவும்  முனைந்திருக்கிறார் மகன் சாரங்கராஜன். இவற்றை செப்டம்பரில் தந்தையின் 92-வது பிறந்தநாளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

பிரேமா நாராயணன்  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism