Published:Updated:

இறகோடு விளையாடி..!

இறகோடு விளையாடி..!

இறகோடு விளையாடி..!

இறகோடு விளையாடி..!

Published:Updated:

ர்வதேச அளவில் பாட்மின்டனில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்தியப் பெண்கள். சாய்னா நேவால், பி.வி.சிந்து, பி.சி.துளசி, சிக்கி ரெட்டி என உலக ரேங்க்கில் நம் பெண்கள் ஏராளம். சமீபத்தில் சென்னையில் நடந்த ‘பாட்மின்டன் பிரீமியர் லீக்’ போட்டியில், உலக பாட்மின்டன் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும், சிக்கி ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், காயங்கள் பல கடந்தும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பல குவித்து வரும் 22 வயது இளம் எனர்ஜி!

இறகோடு விளையாடி..!

‘‘பள்ளி வயதில் ஒரு கோடைகால பயிற்சி முகாமில், பாட்மின்டன் மட்டை என் கைக்குக் கிடைத்தது. வாலிபால், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் என்று பல வகுப்புகளில் பயிற்சி பெற்றாலும், பாட்மின்டனில் இயல்பாகவே நான் வெளிப்படுத்தும் திறமையை பயிற்சியாளர்கள் கண்டறிந்து சொல்லி, அதில் என்னைத் தொடர்ந்து சின்சியராகப் பயிற்சி செய்யும்படிக் கூறினார்கள். என் பயிற்சியாளர் கோபிசந்த், என்னை கோப்பைகளை கைகொள்ள வைத்தார்!’’ எனும் சிக்கி, ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடிக்கொண்டிருந்தவர். இப்போது இரட்டையர் ஆட்டங்களில் அதிகம் விளையாடுகிறார். காரணம்... ஒரு காயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘2010-ம் ஆண்டு முழங்காலில் ஏற்பட்ட காயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அறுவைசிகிச்சைக்கு அச்சப்பட்ட என்னை, பயிற்சியாளர் கோபிசந்த் சமாதானம் செய்து அறுவை சிகிச்சை செய்துகொள்ளவைத்தார். 13 மாதங்கள் விளையாடாமல், ஏன் உடலை அதிகம் அசைக்கக்கூட முடியாமல் இருக்க வேண்டிய நிலை. வலியில் பல சமயங்களில் அழுதிருந்தாலும், என் கனவை விட்டுவிடவில்லை. அதுதான் இந்த விளையாட்டின் மீது நான் வைத்திருக்கும் காதல். 2012-ம் ஆண்டு மீண்டு வந்தேன். அதன் பின் இப்போது இரட்டையர் ஆட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்றவருக்கு, அதில் ஒரு வருத்தமும் இருக்கிறது.

‘‘பொதுவாக, ஒற்றையர் ஆட்டத்துக்கு இருக்கும் மதிப்பு இரட்டையர் ஆட்டத்துக்கு இங்கு இருப்பதில்லை. இரட்டையர் ஆட்டத்தில் நீங்கள் உங்களுடன் விளையாடும் மற்றொரு வீரரையும் நம்பி விளையாடக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது உடல்நிலை, மனநிலை அனைத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். இரண்டு பேர் சேர்ந்துதானே விளையாடுகிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். எதிரணியிலும் இருவர் இருப்பார்கள் அல்லவா... அவர்களைச் சமாளிக்க வேண்டுமில்லையா? சொல்லப்போனால், இரட்டையர் ஆட்டம் என்பது ஒற்றையர் ஆட்டத்தைவிடக் கடினமானது. இரட்டையர் ஆட்டங்களுக்காக சிறப்பு பயிற்சியாளர்கள் இந்தோனேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் திட்டம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எங்கள் உடல்நிலை, ஊட்டச்சத்து முதல் உடற்பயிற்சி வரை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். போட்டி ரிசல்ட்களும் நன்றாக உள்ளன’’ என்று சொல்லும் சிக்கி, தன் வெற்றிகளில் கொண்டாடுவது, 2014 ஆசியன் கேம்ஸில், இந்தியாவுக்காக விளையாடி வென்ற வெண்கலப் பதக்கத்தை. இது, இந்தியா 28 வருடங்களுக்குப் பின் பெற்ற பதக்கம்!

இறகோடு விளையாடி..!

‘‘2016 ஒலிம்பிக்ஸில் விளையாட வேண்டும் என்பது என் கனவு. ஆனால், ஒரு நாட்டிலிருந்து இருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாங்கள் ஜுவாலாவையும் அஸ்வினியையும் இரண்டு முறை தோற்கடித்திருக்கிறோம். ஆனாலும் ரேங்கிங்கில் அவர்கள் முன் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் அனுபவம். பல நாடுகளுக்குச் சென்று அவர்கள் பதக்கம் குவித்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தை அதிகம் பெறுவதுதான் சவாலாக இருக்கிறது’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு,

‘‘நேஷனல் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பி.வி.சிந்துவை தோற்கடித்திருந்தேன். சாய்னாவுடன் கடுமையான போட்டிகளில் விளையாடினேன். அப்போதுதான் ஏற்பட்டது காயம். என் வலியையும், அழுகையையும் தாங்க முடியாமல் என் பெற்றோரும் கலங்கியபோது, கோபி சார், ‘எது நடந்தாலும் அது நன்மைக்கே. யாருக்குத் தெரியும்... இன்னும் பெரிய ஒன்று உனக்காக எழுதப்பட்டிருக்கலாம்!’ என்றார். அந்த வார்த்தைகள்தான் என்னைச் செலுத்திக்கொண்டிருக்கிறது!’’ என்றவர், நம்பிக்கை ஒளிர்ந்த தன் கண்களால் நம் கண்களை ஊடுருவியபடி சொன்னார்...

‘‘உங்களுக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கிறதா, அதற்கான திறமை இருக்கிறதா... மனதுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள், முன்னேறுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் தயங்க வேண்டாம். ஒருநாள் அவர்களும் உங்களுக்குப் பூங்கொத்து நீட்டுவார்கள்!’’

அ.ஸௌம்யா   படங்கள்: அ.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism