Published:Updated:

இன்னொரு பால் நிகராகுமோ..?

இன்னொரு பால் நிகராகுமோ..?

இன்னொரு பால் நிகராகுமோ..?

இன்னொரு பால் நிகராகுமோ..?

Published:Updated:

தாய்ப்பாலூட்டும் பெண்களின் சதவிகிதம் உலகளவில் குறைந்துகொண்டே வருவது வேதனையான விஷயம். வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டால், அழகு போய்விடும் என்ற பெண்களின் மூடநம்பிக்கையும், குழந்தையின் உயிர்க்கவசமான தாய்ப்பாலின் அவசியம், மகத்துவம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும் பிற காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையை மாற்றவே, ஒவ்வொரு ஆண்டும் ‘உலக தாய்ப்பால் வாரம்’ என்றெல்லாம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு, தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்த விழிப்பு உணர்வு சமூகத்துக்கு அளிக்கப்படுகிறது.

இன்னொரு பால் நிகராகுமோ..?

அதற்கு வலு சேர்க்கும் விதமாக, தாய்ப்பால் பற்றிய ஏ டு இஸட் தகவல்களை இங்கு பகிர்கிறார், ராஜபாளையத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரேமலதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னொரு பால் நிகராகுமோ..?

‘‘அண்மையில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நல அமைச்சகம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 64% பெண்கள் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுகின்றனர் என்றும், தமிழகத்தில் அது 18.8% மட்டுமே என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வேதனையான... இந்திய, நம் தமிழகப் பெண்கள் சரிசெய்துகொள்ள வேண்டிய பிழை!’’ என்று ஆரம்பித்த டாக்டர், பல்வேறு பிரிவுகளின் கீழ் தாய்ப்பாலின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வலியுறுத்தினார்.  

பசும்பால், பால் பவுடர் இணையாகுமா தாய்ப்பாலுக்கு?!

•  மாட்டுப் பால் என்பது, அதன் கன்றுக்கானது. உலகத்தில் எந்த ஜீவராசியும் தன் குழந்தைக்கு மற்ற உயிரினத்தின் பாலைத் தருவதில்லை. ஆனால், மனிதர்கள் மட்டும்தான் குழந்தைகளுக்கு மாடு, தன் கன்றுக்காக சுரக்கும் பாலை திருடித் தருகிறார்கள். அதேபோல் பால் பவுடர்களும் மாட்டின் பால் மற்றும் இன்னும் பிற பொருட்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன என்பதோடு, விலையும் மிக அதிகம். பசும்பால், பால் பவுடர் தயாரிப்புகளின்போது ஏற்படும் தவறுகளால் வயிற்றுப்போக்கு, வாந்தி தொடங்கி இன்னும் பல பிரச்னைகள் குழந்தைகளுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

•  மிக முக்கியமாக தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படுவதோடு ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளும் வரக்கூடும்.

•  புட்டிப்பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் வரக்கூடும்.

இன்னொரு பால் நிகராகுமோ..?

அழகு குறையாது!

•  பிரசவம் முடிந்த 3 முதல் 10 மாதங்களுக் குள் பெண்களுக்கு உடலும் மார்பகங்களும் 60% இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். தாய்ப்பால் கொடுப்பது முழுமையாக நிறுத்தப்பட்டதும், மார்பகங்கள் முழுமை யாக இயல்பு நிலையைப் பெறும். இதற்கு கர்ப்பகாலத்தில் இருந்தே சரியான அளவில் பிரேஸியர் அணிவது உதவும். பிரேஸியர் அணிவதால் பால் சுரக்காது, பால் கட்டும் என்பதெல்லாம் மூடநம்பிக்கைகள். பிரசவம் முடிந்த நாளிலேயே பிரேஸியர் அணியலாம், அணிய வேண்டும்.

தாய்ப்பால் நன்மை, தாய்க்கும்!

•  தாய்ப்பால் பருகுவதால் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து மட்டுமல்ல, பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பலன்களும் பல. தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு நிற்பதோடு, தொடர்ந்து தாய்ப்பாலூட்டி வருவது குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாய் கருத்தரிப்பதையும் தவிர்க்கிறது.

•  பெரும்பாலும் குழந்தைப் பேறுக்குப் பின் பெண்கள் எடை அதிகரிப்பது இயல்பே. ஆனால், அதுவே தொடர்ந்து தாய்ப் பால் கொடுக்கும்போது, உடல் பருமனானது படிப்படியாகக் குறைந்து பழைய நிலைமைக்குத் திரும்பிவிடும். மேலும், தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்களுக்கு ஆக்சிடோசின் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இதனால் கருப்பை சுருங்கி, பிரசவத்துக்கு முன்பு உள்ள நிலையை அடைய வழிசெய்யும்; கருப்பைப் புற்று நோய், மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், மனச்சோர்வு, உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும் என்பது மருத்துவ உண்மை.

•  கர்ப்பகாலத்தில், ஜெஸ்டேஷனல் டயாபடிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால், தாய்க்கு டைப் - 2 சர்க்கரை வியாதி வர நேரலாம். ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்த சர்க்கரை பாதிப்பு வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணரலாம்!’’
 
- தாய்ப்பாலின் அற்புதங்களை அடுக்கினார் டாக்டர்.

பால் சுரப்பில், பாலூட்டுவதில் ஏற்படும் பிரச்னைகள், தாய்ப்பால் சுரக்க வைக்கும் உணவுகள், பாலூட்டும் முறை, தாய்ப்பால் எடுத்துச் செல்லும் குழந்தையின் சீரான வளர்ச்சி உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை அடுத்த இதழில் தொடர்கிறார், டாக்டர் பிரேமலதா.

இன்னொரு பால் நிகராகுமோ..?

யுனிசெஃப் அறிக்கை!

• இந்திய அளவில், பெண் கல்வி சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 50% பேர் தாய்ப்பாலூட்டுகிறார்கள். ஆனால், கல்வியறிவு அதிகமாக இருக்கும் தமிழகத்தில் 18.8% தாய்மார்களே தாய்ப்பாலூட்டுகிறார்கள்.

• குறிப்பாக சென்னையில் 7%, திருவாரூர், தேனி மாவட்டங்களில் 10%, ஈரோட்டில் 12%, தஞ்சாவூரில் 13%, கன்னியாகுமரியில் 35% என உள்ளது. 2007 - 2008ம் ஆண்டு ஆய்வின்படி 22.4% என இருந்த விகிதம், 2012 - 2013ம் ஆண்டில் 18.8% எனக் குறைந்துள்ளது.

• தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 5 வயதுக்குள் நடக்கும் 13% இறப்புகளை குறைக்க முடியும். அவ்வாறு பார்த்தால் தமிழகத்தில் ஓர் ஆண்டுக்கு 3,600 குழந்தைகளின் இறப்பைத் தவிர்க்க முடியும்.

இன்னொரு பால் நிகராகுமோ..?

தாய்ப்பால் கொடுப்பதில் முதல் 5 இடத்தில் உள்ள நாடுகள்!

ருவாண்டா - 90%, இலங்கை - 76%, கம்போடியா, நேபாளம் - 74%, மலாவி - 72%, பெரு - 71%. இவையெல்லாம் இன்னும் வளரவேண்டிய நிலையில் உள்ள நாடுகள். வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா போன்ற நாடுகளும்... வளர்ந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் பிற நாடுகளும்... தாய்ப்பால் விஷயத்தில் கொஞ்சம்கூட வளராமல் இருப்பதுதான் வேதனை!

சா.வடிவரசு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism