Published:Updated:

இஞ்சி இடுப்பழகி...

அனுஷ்காக்களே... இஷ்டத்துக்கு எடையைக் கூட்டாதீர்கள்!

இஞ்சி இடுப்பழகி...

அனுஷ்காக்களே... இஷ்டத்துக்கு எடையைக் கூட்டாதீர்கள்!

Published:Updated:

‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா. உடல் பருமனாக இருக்கும் ஒரு பெண்... கேலி, கிண்டலுக்கு ஆளாகி, பிறகு வைராக்கியத்தோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து, எப்படி தன் உடம்பை ஒல்லியாக மாற்றுகிறார் என்பதே கதை. திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார் அனுஷ்கா. காரணம்... ‘இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ வரை எடை கூடியிருக்கிறார். இதற்காக தினமும் நிறைய சாப்பிட்டதுடன், புரோட்டீன் உணவுகளை அதிகளவு சாப்பிட்டு, எடை கூட்டி இருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லப்படுவதுதான். ஸ்டில்களும், `அனுஷ்காவா இது?’ என்று மிரளும்படியாகவே இருக்கின்றன! சமீபத்திய நிகழ்ச்சிகளில் நேரில் பார்த்தவர்களும், ‘என்னம்மா இப்படி பெருத்துட்டீங்களேம்மா?’ அவரை நோக்கி அதிர்ச்சிக் கேள்வியைத்தான் வீசியுள்ளார்கள்.

இஞ்சி இடுப்பழகி...

`சரி... சினிமாவோ, நிஜமோ... இப்படியெல்லாம் திடீரென உடல் எடையைக் கூட்டுவதும் குறைப்பதும் சரியா? இதனால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?’ என்பது உள்ளிட்ட கேள்விகளுடன், சென்னையைச் சேர்ந்த விளையாட்டுத்துறை மருத்துவ (sports medicine) ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கண்ணன் புகழேந்தியைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘செயற்கையாக உடல் எடையைக் கூட்டுவதும் குறைப்பதும் நிச்சயமாக உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக காய்ச்சல், விரதம் போன்ற சமயங்களில் உடல் எடை குறையும். காரணம், அந்நேரங்களில் தசைநார்கள் உடைவதன் மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள், தசைகள் மூலம் ஈடு செய்யப்படுவதுதான். வறட்சியான நாடுகள், பிரதேசங்களில் வசிப்பவர்கள், போதிய உணவு இல்லாமல் மெலிந்த தோற்றத்துடன் இருப்பார்கள். இதற்குக் காரணம்... தசைநார்களில் சத்து இன்மையே. இது இயற்கை.

ஒருவர் உடல் எடையைக் கூட்டவும் குறைக்கவும் இன்று கள்ளச் சந்தைகளில் நிறைய மருந்துகள் விற்பனையாகின்றன. மொத்தமாக உடல் எடையை கூட்ட, உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதாக்கவெல்லாம் ஊசிகள் போட்டுக்கொள்கிறார்கள். இப்படி மூக்கு, மார்பகங்களின் அளவுக்காக ஹார்மோன் ஊசிகளைப் போட்டுக்கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்படுவதுடன் அதிகபட்சமாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இஞ்சி இடுப்பழகி...

திரைத்துறையினர் உடல் எடையைக் கூட்ட, ஒருவேளை ஹார்மோன் ஊசிகளின் மூலம் தசைகளின் எடையை அதிகரித்தால், அதற்கான விளைவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டும். ஆண்கள் ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ளும்போது ஆண்மைக்குறைவும், பெண்கள் ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ளும்போது மாதவிடாய்ச் சிக்கல், ஆண்களைப் போன்ற குரல் மாற்றம், தலையில் வழுக்கை உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். ஆனாலும் தங்கள் கதாபாத்திரத்துக்காக அந்த முயற்சியை எடுக்கும் அவர்கள், பக்கவிளைவுகளையும் தங்கள் பணபலத்தால் சந்திக்கலாம். ஆனால், இதையெல்லாம் பார்த்துப் பொதுமக்களும் முயன்றால், தேவையில்லாமல் உடலும் பணமும் வீணாகும்’’ என்று எச்சரிக்கை தந்த டாக்டர் தொடர்ந்தார்.

‘‘விளம்பரங்களில் காணும் ஊட்டச்சத்து பானங்கள் உடல் எடையைக் கூட்டும் என நம்புவதுகூட தேவையற்றதுதான். எந்த ஒரு பொருள் உடல் எடையை கூட்டும், குறைக்கும் என விற்பனை செய்யப்பட்டாலும் அது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக இருக்காது. குளுக்கோஸ் விளம்பரங்களில் ஒரு டம்ளர் நீரில் அரை பாக்கெட்டுக்கும் அதிகமாக குளுக்கோஸை கலந்து குடிப்பது போல் காட்டுவார்கள். அப்படியெல்லாம் செய்தால் சீக்கிரத்தில் நோய்கள்தான் வரும். ஒரு லிட்டருக்கு ஒரு ஸ்பூன் மட்டும்தான் கலந்து குடிக்க வேண்டும். ஒரு குளுக்கோஸ் பயன்பாட்டிலேயே இவ்வளவு தவறு இருக்கும்போது, விளம்பரங்களை நம்பி ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கலாமா என்று யோசித்துப் பாருங்கள்’’ என்று நம்முடைய சிந்தனைக்கு கேள்வியை வீசிய டாக்டர், உடற்பயிற்சி தொடர்பாக சொன்னதும் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயங்களே!

‘‘உடலில் இடுப்பு, தொடை உள்ளிட்ட இடங்களில் எடை அதிகமாக இருக்கிறது என்று அதை குறைக்க உடற்பயிற்சி செய்தால்கூட, குறிப்பிட்ட அந்த இடங்களில் மாயமாய் உடல் எடை குறையும் என நம்புவது சரியல்ல. சரியான முறையில் உடற்பயிற்சி செய்யும்போது அதிர்வுகளால் அந்த இடங்களில் தசை குறைய வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். அதனால் சரியான உணவும் சரியான உடற்பயிற்சியும் தவறாமல் இருப்பது நல்லது. இதைத் தவிர்த்து இயற்கைக்கு மாறாக எந்த வழிகளிலும் உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் செய்யாதீர்கள்!’’ என்று அக்கறையுடன் சொன்னார் டாக்டர் கண்ணன்.

பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism