Published:Updated:

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

Published:Updated:

‘‘மிச்சிகன் மாகாணத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் இருக்கு. ரொம்ப வருஷங்களாவே இங்க செட்டில் ஆன அவங்கள்ல பலர் வீட்டில் தமிழ் பேசறதே இல்லை. சில வீடுகளில் பெற்றோர்கள் தமிழில் கேட்டாலும், பிள்ளைகள் ஆங்கிலத்தில் பதில் சொல்வாங்க. இதனால, இந்தத் தலைமுறை பிள்ளைங்களுக்கு தமிழ் தெரியாமலேயே போயிடுது. இந்த வருத்தம் என்னைப்போல இங்கே இருக்கிற தமிழர்கள் சிலருக்கும் இருந்தது. மிச்சிகன் மாகாண தமிழ் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் பேசி, ‘நம்ம பிள்ளைங்க நம் தாய்மொழியைக் கத்துக்கிட்டுப் பேசணும்’னு முடிவெடுத்து, 2011-ல் விஜயதசமி அன்னிக்கு ஆரம்பிச்சதுதான் மிச்சிகன் தமிழ்ப் பள்ளி!” - அழகாகப் பேசுகிறார், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் முதல்வர் அபிராமி சுவாமிநாதன்.

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

செட்டிநாட்டில் பிறந்தவர். இவரும் இவருடைய கணவரும் இப்போது மிச்சிகனில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அலுவலகப் பணி, வீடு, இரண்டு பெண் குழந்தைகள் என அனைத்துக் கடமைகளையும் தாண்டி, வார இறுதியில் தமிழ்ப் பள்ளிக்கெனத் தன் நாளைச் செலவிடுகிறாராம் அபிராமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘முதலில் மிச்சிகன், ட்ராய் நகரில் கம்யூனிட்டி சென்டரில், குறைந்த வாடகையில் அறையைப் பிடிச்சு பள்ளியை ஆரம்பிச்சோம். 16 குழந்தைகளுடன் சனிக்கிழமை மட்டும் வகுப்புகள் இருக்கும். நான்தான் ஆசிரியர். எந்த சிலபஸ்ஸும் இல்லாம, உயிரெழுத்துக்களில் தொடங்கி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம். 16, 32, 50னு கொஞ்சம் கொஞ்சமா மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான பிறகு, பிற நகரங்களிலும் பள்ளியைத் தொடங்கினோம். அடுத்த வருஷம் 79 மாணவர்கள் சேர்ந்தாங்க.

இப்போ கலிஃபோர்னியா தமிழ் அகாதமியில் பேசி, அவங்களுடைய பாடத்திட்டத்தின்படி பள்ளியை நடத்துறோம். தேர்வுகள் வெச்சு, சான்றிதழ் கொடுக்கிறோம். இப்போ 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற விகிதத்தில் ஆசிரியர்களே 40 பேர் இருக்காங்க. எல்லோருமே வாலன்டியர்ஸ். யாருக்கும் ஊதியம் கிடையாது. பள்ளி வாடகைக்காக மாணவர்களிடம் மிகக் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கிறோம்.

வகுப்புகளை பேஸிக் 1, பேஸிக் 2, அட்வான்ஸ்டு என்று பிரிச்சு, தமிழ் பேசவும் எழுதவும் கத்துத் தர்றோம். வருடம் முழுவதும் போட்டிகள், விழாக்கள் நடத்துறோம். பொங்கல் விழாவில் எங்க பிள்ளைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினப்போ, எல்லோருக்கும் நெகிழ்ச்சி. அது மட்டுமில்ல, திருக்குறளை அழகாகச் சொல்லவும் கத்துக்கிட்டிருக்காங்க. மிச்சிகன் தமிழ்ச் சங்க ‘தமிழ்மாலை’ விழாவில் இப்போ பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கதை எழுதும் போட்டினு எங்க பசங்க கலக்குறாங்க!’’

- தொலைபேசி அழைப்பிலும் உணர முடிந்தது அபிராமியின் உள்ளப் பூரிப்பை.

‘‘நிர்வாகப் பொறுப்பில் நித்யா முத்துராமன், ராம் இவங்களோட நானும் இருக்க, மேலும் என் கணவர் சுவாமிநாதன், நண்பர்கள் வினோத் புருஷோத்தமன், பால்ராஜ், கணபதி ராமன், நித்யா, சுதாகர்னு பலர் தங்கள் நேரத்தை இதுக்காக செலவழிக்கிறாங்க. இப்போ 17 வகுப்பறைகளில் இயங்கும் பள்ளி, அடுத்த வருஷம் 21 அறைகளா விரிவாகுது. இப்போது 5-வது கிரேடு வகுப்புகள் வந்திருக்கு. இங்கே படிச்சு முடிச்ச பிள்ளைகளே (கல்லூரி மாணவர்கள்), இங்கே உதவி ஆசிரியர்களாகச் சேர்ந்து எங்களுக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்காங்க. மூணு வருஷம் முன்னால பள்ளிக்காக ஒரு நூலகமும் தொடங்கினோம். இப்போது அதில் 2,000 தமிழ்ப் புத்தகங்கள் இருக்கு!’’ என்றவர்,

‘‘வருஷக்கணக்கில் இங்கேயே செட்டில் ஆகி, கிட்டத்தட்ட அமெரிக்கர்கள் போல ஆகிவிட்ட தமிழர்கள் என்னிடம் வந்து, ‘எங்க பொண்ணு/பையன் இப்போ நல்லா தமிழ் பேசுறாங்க. இந்த லீவில் நாங்க ஊருக்குப் போனப்போ, பிள்ளைங்க தமிழ் பேசியதைக் கேட்டு, எல்லோரும் ஆச்சர்யப்பட்டாங்க. மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்துச்சு!’ன்னு ரொம்ப எமோஷனலா சொல்றாங்க. தமிழை, வளரும் தலைமுறைகிட்ட சேர்த்துட்டோம். இதுதான் நாங்க விரும்பினது!’’ என்கிறார் அபிராமி, மட்டற்ற மகிழ்ச்சியுடன்!

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளி... அசத்தும் அபிராமி!

குழந்தைகள் எழுதும் கதைகள்!

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர், மிச்சிகன் தமிழர்களுக்காக வெளிவரும் ‘கதம்பம்’ தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்திருக்கிறார், அபிராமி. தமிழ் பள்ளியின் நூலகத்துக்கென தனி இடம் இல்லாததால், தன் வீட்டிலேயே 2,000 நூல்களையும் பத்திரப்படுத்தி, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் பள்ளிக்குக் கொண்டு சென்று, ஒரு வகுப்பறையில் அடுக்கி வைத்து, மீண்டும் கொண்டுவரும் பணியை அலுக்காமல் செய்கிறார். தமிழ் நன்கு கற்ற குழந்தைகளை, கதை எழுத ஊக்கப்படுத்தி, அந்தக் கதைகளைத் தொகுத்து, புத்தகமாக வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.

பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism