Published:Updated:

பள்ளி ஆசிரியர்களின் கனிவான கவனத்துக்கு...

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..!

பள்ளி ஆசிரியர்களின் கனிவான கவனத்துக்கு...

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..!

Published:Updated:

`மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பார்கள். அம்மா, அப்பா இருவரையும்விட  குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பது ஆசிரியரான உங்களுடன்தான். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்பது வீட்டைத் தாண்டிய இன்னொரு உலகம், அறிவுசார் உலகம். அந்த உலகம் அவர்களை அக்கறையுடன் கைப்பிடித்து அழைத்துச் செல்வதை நாங்கள் நன்கு உணர்கிறோம். அதேநேரத்தில் எங்களின் சில சின்னச் சின்ன கோரிக்கைகளை இங்கே முன்வைக்கிறோம்.

இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. உங்களில் சிலர் குழந்தைகளின் உலகம் தாண்டி இருக்கிறார்கள் என்கிற சின்ன வருத்தத்தில் இதை எழுதுகிறோம். பின்வரும் விஷயங்கள் எல்லா ஆசியர்களுக்கும் பொருந்தாது. ஒருவேளை பொருந்தும் என நினைப்பவர்கள்... எங்களுக்காக, உங்களையே அண்ணாந்து பார்த்துக் கிடக்கும் உங்கள் மாணவர்களுக்காக கொஞ்சம் யோசியுங்களேன்!

பள்ளி ஆசிரியர்களின் கனிவான கவனத்துக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாப்பாட்டில் அடம் காட்டும் குழந்தைகள் பலர் பள்ளியிலாவது ஒழுங்காகச் சாப்பிட, ஆசிரியர்களே காரணம் என்பதை அறிவோம். ஆனால், கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளில் பலர் உணவு இடைவேளையில் தாமதமாக உண்ணும்போது, ‘டைம் ஆச்சு’ என்ற சில ஆசிரியர்களின் அவசரப்படுத்தும் அதட்டலில், பாதியில் லஞ்ச் பாக்ஸை மூடிவிடுகிறார்கள். அதே அதட்டலை, ‘கிளாஸுக்கு 10, 20 நிமிஷம் லேட்டா வந்தாலும் பரவாயில்ல, லஞ்ச்சை முடிச்சிட்டுதான் வரணும்’ என்று அக்கறையுடன் வெளிப்படுத்தலாமே?

வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது தூக்கம் வரலாம்... சில குழந்தைகளுக்கு! அப்படி அவர்கள் செய்யக்கூடாதுதான். ஆனால், அது அவர்கள் தெரிந்தே செய்யும் தவறு கிடையாது. முந்தைய நாள் ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸ், பரீட்சைக்கு கண்விழித்துப் படித்தது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது என்று அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனவே, அவர்களின் உடல் அவர்களிடம் ஓய்வு கேட்கும்போது, அதை அவர்கள் நிராகரிக்க முயன்றும் முடியாமல் கண்கள் சொருகும்போதும், கொட்டாவி விடும்போதும், கோபத்தில் ‘ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச்’ என்கிறீர்கள். அது அவர்களின் களைப்பைக் கூட்டவே செய்யும்.

மாறாக, அவர்களின் சோர்வுக்குக் காரணத்தைக் கேட்டறிந்து, நியாயமானதாக இருந்தால், ஓய்வெடுக்கச் சொல்லி ‘சிக் ரூம்’ அனுப்பி வைக்கலாம். ஒருவேளை அது அவர்களின் சோம்பேறித்தனமாக இருந்தால், அவர்களை தனியே அழைத்து, சோர்வைத் தவிர்க்கும் வகையிலான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி குறித்து சொல்லித் தரலாம். தண்டனையைவிட, இந்தக் கரிசனம் அவர்களை நிச்சயம் மாற்றும்.

பிரம்பால் அடிப்பது, முட்டி போட வைப்பது, காதைத் திருகுவது என உடலை வருத்தும் தண்டனைகள் கொடுப்பது சமீபகாலமாக குறைந்து வந்தாலும், அதற்குப் பதிலாக மற்ற மாணவர்கள் முன் கடுமையான வார்த்தை களால் சாடுவது மனரீதியாக பிஞ்சு நெஞ்சங்களை சுக்குநூறாக்கும் என்பதையும் உணருங்கள்.

மூட்டை மூட்டையாய் வீட்டுப்பாடம் கொடுத்து அனுப்புகிறீர்கள். சரி, அதெல்லாம் குழந்தைகள் செய்கிற மாதிரிதான் இருக்கின்றனவா? ஒன்று அவற்றைப் பெற்றோர் சொல்லித் தர/செய்து தர வேண்டும், அல்லது டியூஷனுக்கு அனுப்ப வேண்டும். மூலைக்கு மூலை முளைவிடும் டியூஷன் சென்டர்கள் அதிகமாகிக்கொண்டே வருவதும், யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே வீட்டுப்பாடம் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் கண்கூடு. கொஞ்சம் பரிசீலியுங்கள்.

குழந்தைகளின் ப்ராஜெக்ட், இப்போதெல்லாம் குடும்பத்தின் பட்ஜெட்டில் இடம்பிடிக்கும் அளவுக்கு காஸ்ட்லியாக இருக்கிறது. அந்த ப்ராஜெக்ட்டுகளை பெற்றோர் உதவியுடன் மாணவர்கள் செய்து வர வேண்டும் என்பது உங்களின் நேரடிச் செய்தி. மிகவும் சிக்கலான, நுணுக்கமான, ஒரு ஆர்ட்டிஸ்ட்டின் மூளையுடன் செய்ய வேண்டிய அந்த ப்ராஜெக்ட்டை வீட்டில் செய்ய இயலவில்லை எனில், கடைகளில் ரெடிமேட் ப்ராஜெக்ட் வாங்கி வரலாம் என்பது மறைமுகச் செய்தி. இதில் மாணவர்களின் அறிவு வளரும் என நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?

வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக அந்தப் பாடம் புரிய வேண்டும் என்பதில்லை. அவரவரின் அறிவுத்திறனுக்கு ஏற்ப விரைவாகவோ, தாமதமாகவோ, மிகத் தாமதமாகவோ ஒவ்வொருவரும் உள்வாங்கிக்கொள்வார்கள். ‘எல்லாருக்கும்தானே சொல்லிக் கொடுத்தேன்? அவங்க எல்லாம் முடிச்சிட்டாங்க... உனக்கு ஏன் புரியலை?’ என்று ஆக்ரோஷமாகி அவமானப்படுத்தினால், பிலோ ஆவரேஜ் மாணவர்கள் உங்களிடம் எப்படி பாட சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவடைவார்கள்?

இடைவேளை தாண்டியும், இடைப்பட்ட நேரத்தில் கழிவறை செல்வதற்கு குழந்தைகளுக்கு காரணங்கள் நிறைய இருக்கலாம். வயிற்று வலி, யூரினரி இன்ஃபெக்‌ஷன் என பிரச்னை உள்ள குழந்தைகள், அல்லது நார்மலான குழந்தைகளும்கூட வகுப்பு நேரத்தில் கழிவறை செல்ல அனுமதி கேட்டால், ‘இப்போதானே போயிட்டு வந்தே?’ என்று சத்தமாய் நீங்கள் கர்ஜிப்பதில், ஒடுங்கிப்போகிறார்கள் குழந்தைகள். குறைந்தபட்சம் 12 வயதிலிருந்தே மாதவிடாயை சந்திக்க ஆரம்பிக்கும் பெண் குழந்தைகளையும் கொஞ்சம் மனதில் வையுங்கள். மாணவர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நேராக உங்கள் அருகில் வந்து, மெல்லிய குரலில் ‘பாத்ரூம்’ என்று கேட்க, உங்களின் சின்ன தலையசைப்பால் அவர்களை அனுப்பி வைக்க என... கழிவறை அனுமதிகளை சிக்கல் ஆக்காமல், இப்படி சிம்பிள் ஆக்குங்கள்.

அதேசமயம்... ஒழுங்கின்மை, ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்வது, வயதுக்கு மீறிய செயல்கள் என இருக்கும் ரக மாணவர்களுக்கும் நாங்கள்தான் பெற்றோர், நீங்கள்தான் ஆசிரியர்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். அந்த அடிப்படைப் பிழை மாணவ சமுதாயத்தை திருத்த, உங்களின் கடிவாளம் அவசியமானது. ஆனால், அவையும்கூட தகுந்த வழிமுறைகளில் இருக்கும்போதுதான் பலன் தரும். இல்லையென்றால், அது எதிர்மறையாக வேலை பார்க்க ஆரம்பித்து, அந்தக் குழந்தைகளை வேறு வழிக்குத் திருப்பிவிடும் ஆபத்து நிறைந்திருக்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல.

எங்களில் சிலர், `மார்க்தான் முக்கியம்... கண்கள் இரண்டையும் விட்டுவிட்டு தோலை உரித்தால்கூட தப்பில்லை' என்று உங்களிடம் சொல்லக்கூடும். அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கும் நீங்கள்தான் ஆசிரியர்கள்... ஆம், அவர்களுக்கும் குழந்தைகளைப் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டிய ஆசிரியர்கள் நீங்களே!

இப்படிக்கு,
உங்களை நம்பி எங்களின் உயிர்களை ஒப்படைத்துக் காத்திருக்கும் பெற்றோர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism