Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:
கேபிள் கலாட்டா!

வீட்ல விசேஷங்க!

பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியரின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி காலை சினிமா நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. ‘மானாட மயிலாட’, ’நாளைய இயக்குநர்' உள்ளிட்ட டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி கீர்த்திதான் பாக்யராஜ் வீட்டு மருமகள். பெண் வீட்டாரும் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் தம்பயின் மகள்தான் கீர்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாக்யராஜின் மகள் சரண்யா சற்றுப் பொறுத்து திருமணம் செய்துகொள்வதாக கூறியதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடந்தேறியுள்ளது.

திருமணம் சென்னையின் ஈ.சி.ஆரில் உள்ள பிரபல கிருஷ்ணர் கோயிலான இஸ்கான் கோயிலில் பாரம்பர்ய முறைப்படி நடந்துள்ளது. மணப்பெண் கீர்த்தி ஆரஞ்சு மற்றும் தங்க நிறத்தில் பட்டுப் புடவையும், மணமகன் சாந்தனு வடஇந்திய பாணியிலான பட்டு தோத்தி மற்றும் டர்பனும் அணிந்திருந்தனர். நடிகர் விஜய் தாலி எடுத்துக் கொடுக்க, திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது. விஜய், மணிரத்னம், ராதிகா, பிரபு, விஜயகுமார், ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பலரும் குடும்பம் சகிதமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். நாமும் வாழ்த்துவோம்!

கேபிள் கலாட்டா!

புது வரவு... பல்லவி குல்கர்னி!

‘மௌன ராகம்’... பாலிமர் சேனலில் புதிதாக களைகட்டியிருக்கும் டப்பிங் சீரியல். சோனி டி.வியின் ‘இட்னா கரோ நா முஜே பியார்’ என்ற இந்தி சீரியலின் தமிழ் வடிவம். விவாகரத்தான தம்பதிக்கு இடையிலான உறவுப் போராட்டம்தான் கதை. ஹீரோயின் பல்லவி குல்கர்னி, சீரியலின் ஹைலைட். ‘டி.வி விளம்பரங்களில் ஆரம்பிச்சு சீரியல் வரை போயிட்டிருக்கு மீடியா பயணம்!’ என்று சொல்லும் பல்லவியின் கணவர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர். தன் குட்டிப் பையனுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் ஷூட்டிங் என்று கொள்கை முடிவோடு இருக்கிறார் ஆக்ட்ரஸ் அம்மா. இந்த 33 வயதில் பல சீரியல் வாய்ப்புகள் குவிந்தாலும், ‘ஒரே நேரத்துல பல சீரியல்கள்ல ஒப்பந்தமாகி, நான் ரொம்ப பிஸினு காமிச்சுக்கறதுல எனக்குப் பெரிசா உடன்பாடில்ல!’ என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்கிறார், பல்லவி!

பலே பல்லவி!

கேபிள் கலாட்டா!

சுஜிதா `நாட் அவுட்’!

குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தைத் தொடங்கி, புதுயுகம் டி.வி ‘அசோகவனம்’ சீரியல் வரை... சுஜிதாவுக்கு மீடியாவில் நிரந்தரமாக இருக்கிறது ஒரு நாற்காலி. ‘அசோகவனம்’ சீரியலில் இன்றைய தலைமுறை பெண்களுக்கு ரோல் மாடல் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதா அணிந்து வரும் காட்டன் புடவைகளை, சீரியல் உலக ரசிகைகள் அவ்வளவு ரசிக்கிறார்கள்!

‘‘இந்தப் புடவைகளைத் தேர்வு செய்ய நிறைய நேரம் செலவிடுறேன். ஒரு சராசரிப் பொண்ணா, அலுக்காம ஒவ்வொரு கடையா ஏறி இறங்குவேன். அதை கவனிச்சு ரசிச்சு பலரும் பாராட்டும்போது, சந்தோஷமா இருக்கு. ஆனா, பெர்சனலா எனக்கு சுடிதார்தான் பிடிக்கும்!’’ எனும் சுஜிதாவுக்கு சொந்த ஊர் கேரளா.

‘‘கோயம்புத்தூர் பையனைக் கல்யாணம் பண்ணி, சென்னையில செட்டில் ஆயிட்டேன். ஆரம்பத்தில் சாஃப்ட் கேரக்டர்களாதான் பண்ணினேன். ஒரு கட்டத்தில் எனக்கே அது அலுத்துப் போச்சு. ஒரு மாற்றம் வேணும்னு நினைச்சப்போ, ‘அசோகவனம்’ சீரியலில் ‘போல்ட் டைப்’ கேரக்டர். சொல்லப்போனா, இதுதான் என்னோட உண்மையான கேரக்டர்!’’

காட்டன் கண்மணி!

கேபிள் கலாட்டா!

ஷார்ட் சீரியல்!

ஷார்ட் ஃபிலிம்ஸ் போல, இப்போது ஷார்ட் சீரியல்கள் டிரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. ஹெச்.பி.ஓ சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்திருக்கும் ‘ஷோ மீ எ ஹீரோ’ ஷார்ட் சீரியல் அந்த ரகம்தான். ஒளிபரப்பான முதல் எபிசோடிலேயே, ‘பெஸ்ட் மினி சீரியலா’க பல ஆன்லைன் சர்வேக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது இந்த சீரியல். ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், மொத்தமே 6 எபிசோடுகள்தான். நியூயார்க் டைம்ஸ் எழுத்தாளர் லிசா பெல்கின் எழுதிய ‘ஷோ மீ எ ஹீரோ’ நாவலின் இந்த சீரியல் வடிவம், இளைஞர்களிடம் மாஸ் ஹிட். ஆஸ்கர் ஐஸாக், கார்லா க்யூவிடோ நடிப்பில், பால் ஹக்கிஸ் இயக்கும் இந்த சீரியல், ஒன்றரை மாதத்தில் முடிந்துவிடும்!

லைக்ஸ்!

கேபிள் கலாட்டா!

‘‘விஜய்க்கு நான் ஜூனியர்!’’

ஜார்ஜ் விஜய் நெல்சன், விஜய் டி.வி ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் கிச்சு கிச்சு மூட்டும் கெட்டப் சேஞ்ச் நடிகர். ராமநாதபுரத்துக்காரர். கல்லூரிப் படிப்பு, லயோலாவில் எம்.ஏ சோஷியாலஜி. ‘‘அப்போ அங்க நடிகர் விஜய், அருண் விஜய் எல்லாம் எனக்கு டைரக்ட் சீனியர்ஸ்!’’ என்று பேச்சை ஆரம்பித்தவரிடம், ‘‘உங்க சமூகசேவையைப் பத்தி உலகம் நிறையச் சொல்லுதே..!’’ என்றதும், மேலும் புத்துணர்வாகிறார்.

‘‘ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு அடிக்கடி ஈவன்ட் பண்ணுவேன். அதுக்காக சில டி.வி நடிகர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கிட்டேன். ஒரு சந்தர்ப்பத்தில், விஜய் டி.வி-யில் சந்தானம் சாரோட சேர்ந்து சகலை vs ரகளை நிகழ்ச்சியில, குரல் கொடுக்கிறது, ஸ்கிரிப்ட் பண்றதுனுது கேமராவுக்குப் பின்னாடி சில வேலைகள் பார்த்தேன். விஜய் டி.வி தாம்சன் சார் கொடுத்த ஊக்குவிப்பு, என்னை நடிகனாக்குச்சு. ‘கடல்’ படத்துல ஆரம்பிச்சு இப்போ கடைசியா ‘மாரி’ வரைக்கும் படங்கள்லயும் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். நட்பு வட்டமும் பெருசாச்சு. குழந்தைகளை சந்தோஷப்படுத்த, இப்போ நிறைய மீடியா நண்பர்கள் என்னோட சேர்ந்து ஈவன்ட்டுக்கு அவங்க நேரத்தை செலவிடுறாங்க. சந்தோஷமா இருக்கு.

மது, புகை பழக்கம் இல்லாத நல்ல பையனா இருக்கிறதால, என் மனைவி பியூலா என்னைத் தேர்ந் தெடுத்தாங்க. ஆனா... மீடியா, குழந்தைகள்னு என் நேரம் அதிகமா செலவாகிறதால அவங்களுக்கு பிரத்யேகமா நேரம் ஒதுக்க முடியலை. அதுதான் இப்போ என் வாழ்க்கையில் எனக்கிருக்கிற ஒரே வருத்தம். ஸாரிம்மா!’’

மனைவிக்கு ஒரு சமாதானத் தூது!

வாசகிகள் விமர்சனம்

 கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து!

``சமீபகாலமாக தொலைக்காட்சிகளில், அதிக பிரபலங்கள் இல்லாத போத்தீஸ் விளம்பரத்தை பார்க்கிறேன்... இது புது மாதிரியாக இருக்கிறது. ஆடித் தள்ளுபடியின்போது போத்தீஸ் ஜவுளி விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு இந்த ஆண்டு `குட்டீஸ் தர்பார்’ விளம்பரம் கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வண்ண உடைகளில் அழகாக வசனம் பேசி அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது அருமை. சிறார்களின் நடிப்பும், வசனமும் நம்மை மகிழ்விக்கின்றன. சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றன’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் குளித்தலையில் இருந்து டி.ஜானகி.

காதைக் காப்பாற்றுங்கள்!

``தொலைக்காட்சி பார்க்கும்போது ஒவ்வொரு சேனலுக்கும் ஒலி அளவை மாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு சேனலைப் பார்த்த வால்யூமில் மற்றொரு  சேனலை வைத்தால், காது அவுட்டாகிவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த வித்தியாசம்? எல்லா சேனல்களிலும் ஒலி அளவு சீராக இருக்கும்படி செய்ய, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார் திருநெல்வேலியில் இருந்து வி.திலகம்.

பெண் உள்ளத்தின் வெளிப்பாடு!

``பட்டிமன்றங்களில் பெரும்பாலும் நகைச்சுவையே முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், சுதந்திர தினத்தன்று சன் டி.வி-யில் ஒளிபரப்பான பட்டிமன்றத்தில் பேசிய பாரதி பாஸ்கரின் பேச்சில் பெண் சுதந்திரம் பற்றி சிந்திக்க நிறைய விஷயங்கள் இருந்தன. `பெண் சுதந்திரம் ஏடுகளில் இருக்கிறது; வீடுகளில் இல்லை... வாழ்க்கையில் இல்லை’ என்று அவர் சொன்னபோது அதில் உண்மை பளிச்சிட்டது. பெண்களின் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்திவிட்டார்’’ என்று பாராட்டுகிறார் சேலத்தில் இருந்து எஸ்.ராஜம்.

ரிமோட் ரீட்டா

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism