முதலீடு செய்வதற்கு எந்த நேரம் சிறந்தது என்று கேட்டால், ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்பவர்கள், `டெபாசிட்டுக்கு வட்டி அதிகம் கிடைக்கும் காலம்' என்பார்கள். இதுவே பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், `சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் காலம் மற்றும் நல்ல பங்கை தேர்ந்தெடுப்பது' என்பார்கள். `இவற்றை சாதாரணமானவர்கள் கணிப்பது என்பது கடினம் என்பதோடு, முதலீடு செய்ய நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை' என்கிறார்கள், பகுப்பாய்வாளர்கள்.

பணம், உங்கள் பலம்!

உலகளவில் நடந்த ஓர் ஆய்வில் முதலீட்டின் மீதான லாபம், முதலீட்டுக் காலத்தை சார்ந்து வெறும் 2 சதவிகிதம்தான் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. பிறகு எதுதான் முதலீட்டின் லாபத்தை நிர்ணயிக்கிறது என்கிறீர்களா? அதுதான் முதலீட்டுக் கலவை. இதை ஆங்கிலத்தில் ‘போர்ட்ஃபோலியோ’ என்பார்கள். இதுதான் முதலீட்டின் லாபத்தை சுமார் 90% நிர்ணயிப்பதாக இருக்கிறது. அது என்ன போர்ட்ஃபோலியோ?

உங்களின் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதுதான் போர்ட்ஃபோலியோ. அதாவது உங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், தேவை போன்றவற்றைப் பொறுத்து முதலீட்டு தொகையை ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் பிரித்துப் போடுவது (எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசிகள், வெறும் 5% அளவுக்குதான் வருமானம் அளித்து வருவதால் அதனை நல்ல முதலீடாகக் கருத முடியாது). இப்படி உங்களின் முதலீட்டைப் பிரித்துப் போடுவதால் ஒரு முதலீடு வருமானம் தரவில்லை என்கிறபோது மற்றொரு முதலீடு நல்ல லாபம் தந்திருக்கும். அப்போது உங்களின் முதலீடு பெருக்கத்தில் பாதிப்பு எதுவும் இருக்காது.

பணம், உங்கள் பலம்!

இதற்கு மாறாக ஒருவர் தன் மொத்த முதலீட்டை தங்கம் அல்லது பங்குச் சந்தையில் போட்டிருக்கிறார் என்றால், இதில் ஒரு முதலீட்டுப் பிரிவு, உதாரணத்துக்கு தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தால், அவர் போட்ட முதலீடு மதிப்பு குறைந்துவிடும். பொதுவாக, பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருக்கும்போது தங்கம் விலை இறக்கத்தில் இருக்கும். இதேபோல், தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கும்போது பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும். இதனைக் கணித்து அல்லது இவற்றில் முதலீட்டைப் பிரித்துச் செய்யும்போது நஷ்டப்பட வாய்ப்பு இல்லை என்பதோடு, முதலீடும் அதிகமாகப் பெருகும். முதலீட்டுத் தொகையைப் பிரித்து குறிப்பிட்ட இடைவெளியில் (குறிப்பாக மாதம்) தொடர்ந்து செய்துவந்தால், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைப் பெறமுடியும்.

சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு