Published:Updated:

அயோடின் பொட்டு!

அயோடின் பொட்டு!

அயோடின் பொட்டு!

அயோடின் பொட்டு!

Published:Updated:

ம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய, குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைத்து வயதினருக்கும் அயோடின் சத்து தேவை. குறிப்பாக, சிசுவின் மூளை வளர்ச்சிக்கு இது தேவையாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கும் அயோடின் சத்து மிக அவசியமாகிறது.

அயோடின் பொட்டு!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பில் அயோடின் சத்து இருந்தாலும், ஏழை மக்களின் உணவில் அயோடின் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது. இதனை எளிமையான முறையில் தீர்க்க, சமீபத்தில் மஹாராஷ்டிராவில் ‘லைஃப் சேவிங் டாட்’ என்ற பெயரில் அயோடின் பொட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெண்களின் பாரம்பர்யப் பழக்கமான பொட்டின் மூலம் இக்குறைபாட்டை தீர்க்க, ‘க்ரே’ என்ற தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி, அலி ஷபாஸ் நினைத்தார். இந்தியாவில் பிறந்து தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஷபாஸின் ‘க்ரே’ அமைப்பும், ‘தல்வார்’ என்ற பொட்டு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து, மஹாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகளில் உள்ள மலைப்பகுதி பெண்களிடம் அயோடின் பொட்டு அட்டையை வழங்கியிருக்கின்றன. இதில் இருக்கும் ஒவ்வொரு பொட்டிலும் 150 முதல் 200 மைக்ரோ கிராம் அளவுள்ள அயோடின் சேர்க்கப்பட்டிருப்பதால், அப்பெண்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான அயோடின் சத்து கிடைத்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முயற்சி குறித்து, சென்னையைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பு மருத்துவர் டாக்டர் பரத்திடம் கேட்டபோது, முதலில் அயோடின் பற்றிய அடிப்படைகளைப் பேசினார் டாக்டர்.

‘‘ஆரம்பகாலங்களில், காய்கறிகளிலேயே உடலுக்குத் தேவையான அயோடின் சத்து இருந்தது. ஆனால், உரம், மாசுபாடு போன்ற காரணங்களால் மண்ணின் வளம் குறைந்துபோக ஆரம்பிக்க, காய்கறிகளிலிருந்து கிடைக்கும் அயோடின் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது. ஒரு கிலோ உப்பில் 30 - 40 மில்லி கிராம் அயோடின் இருக்கும். ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 முதல் 8 கிராம் அயோடைஸ்ட் உப்பு எடுத்தால், அதிலிருந்து உடலுக்குத் தேவையான அயோடின் கிடைத்துவிடும். கர்ப்பகாலத்தில் 500 மைக்ரோ கிராம் வரைகூட எடுக்கலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள் கடல் மீன் சாப்பிடலாம். சைவம் சாப்பிடுவர்கள் கண்டிப்பாக அயோடைஸ்ட் சால்ட்தான் பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்த பாதிப்பும் வராது. ஆனால், அயோடின் சத்து குறைவாக இருக்கிறதென்று மாத்திரை, சிரப் எடுத்துக்கொள்ளும்போது உடலில் அயோடின் அதிகமாகச் சேர்ந்து, தைராய்டு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நமது உடலில் தேவையான அளவு அயோடின் சத்து இருக்கிறதா என்பதை, ‘யூரின் அயோடின் டெஸ்ட்’ மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒரு லிட்டருக்கு 100 முதல் 200 மைக்ரோ கிராம் வரை அயோடின் இருப்பது அவசியமானது. கர்ப்பகாலத்தில் 150 முதல் 250 மைக்ரோ கிராம் வரை இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில், சிசு உருவான 12 வாரங்களில் அதற்கு தைராய்டு சுரப்பி வளர்ச்சியடைந்திருக்காது. தாயின் தைராய்டு சுரப்பிதான் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கும் என்பதால், கர்ப்பிணி தாய்க்கு தைராய்டு குறைபாடு ஏற்பட்டால் அது குழந்தையையும் பாதிக்கும். அயோடின் குறைபாடு இருந்தால் உதிரப்போக்கு, முடி கொட்டுவது, உடல் பருமன், குழந்தை பிறப்பு தள்ளிப்போவது போன்ற பிரச்னைகளுடன், நீண்ட நாட்களாக தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இதய நோய் வரவும் வாய்ப்பிருக்கிறது.

உப்பு டப்பாவை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும். திறந்தேயிருப்பது, ஒருமுறை வாங்கிய உப்பை நீண்ட நாட்களுக்கு திறந்து, மூடி எனப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால்கூட அதில் இருக்கும் அயோடின் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது’’ என்றவர், அயோடின் பொட்டு பற்றிப் பேசும்போது,

‘‘இந்தியாவில் சில மாவட்டங்களில் அயோடின் குறைபாடு அதிகளவில் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுபோன்ற இடங்களில் இந்தப் பொட்டு ஓரளவு பலன் தரும்; ஆனால் முழு பலனை எதிர்பார்க்க முடியாது. உப்பின் தன்மையே தண்ணீரை உறிஞ்சுவதுதான். அதனால்தான் உப்பை மூடி வைக்க வேண்டும் என்று சொல்கிறோம். பொட்டு எனும்போது, வியர்வையால் அதிலிருக்கும் அயோடின் கரைய வாய்ப்பிருக்கிறது. எந்தளவுக்கு அது முழுமையாக உடலில் உறிஞ்சப்படும் என்பது சந்தேகம்தான்’’ என்றார் டாக்டர் பரத்.

சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் தனலக்ஷ்மி இதைப் பற்றி பேசுகையில், ‘‘ஒரு மருந்து சருமத்தின் மூலமாக ஊடுருவி உடலில் கலக்க வேண்டும் என்றால், அதன் வீரியம் பாதியளவுதான் சேர்ந்தடையும். மேலும், இந்தப் பொட்டின் விலை அதிகமாக இருக்கலாம். பொட்டைத் தயாரிக்கும் செய்முறையில் கலக்கப்பட்ட பொருட்களால் சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம். மொத்தத்தில், வெளிப்புறப் பூச்சான பொட்டைவிட, மருந்து, மாத்திரைகளைவிட உணவின் வழியாக அயோடின் சத்தை எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது!’’ என்றார் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தவராக!

ந.ஆஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism