Published:Updated:

வீட்டுச் சாப்பாடு ரெடி!

இல்லத்தரசிகளை இணைக்கும் லாபகர பிசினஸ்

வீட்டுச் சாப்பாடு ரெடி!

இல்லத்தரசிகளை இணைக்கும் லாபகர பிசினஸ்

Published:Updated:

‘‘சென்னைக்கு வேலைநிமித்தமா வந்தவங்களுக்கு, வீட்டுச் சாப்பாடு கிடைக்காதது பெரிய குறை. ஹோட்டல், ரெஸ்டாரன்ட், தெருவோரக் கடைனு வயிற்றை நிரப்பி, ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கிட்டவன்தான் நானும். என்னைப் போன்றவங்களுக்கு வீட்டுச் சாப்பாடு கிடைச்சா எப்படி இருக்கும் என்ற ஆசையிலும், முயற்சியிலும் உருவானதுதான் ‘ஃப்ரம் எ ஹோம்' (fromahome) வெப்சைட்!’’

- சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் சுப்ரமணியன், சிநேகமாக அறிமுகமானார்.

வீட்டுச் சாப்பாடு ரெடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘எவ்வளவு சம்பாதிச்சாலும், சாப்பாடு பிரச்னையா இருக்கிற பலர் ஒரு பக்கம். வீட்டில் இருந்தே வருமானத்துக்கு வழி பார்க்க முடியுமானு காத்திருக்கிற இல்லத்தரசிகள் ஒரு பக்கம். இந்த ரெண்டு தரப்பையும் ஒரு புள்ளியில் இணைக்கிறதுதான் ‘ஃப்ரம் ஏ ஹோம்!’ நாங்க சில இல்லத்தரசிகளை பல கட்ட தேர்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து, அவங்க வசிக்கும் ஏரியா, அவங்களுக்கு சமைக்கத் தெரிந்த உணவு வகைகள், சமைக்க முடிந்த அளவு, சமைக்க ஏதுவான நேரம் எல்லாம் கேட்டு வாங்கி, எங்க வெப்சைட்டில் பதிவிடுவோம். கஸ்டமர்கள், இதில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து, ‘வீட்டுச் சாப்பாடு’ மீல்ஸ் டெலிவரி பெறலாம்!’’ என்று சுருக்கமாக அறிமுகம் தந்தவர், தொடர்ந்தார்.

‘‘முதல் வேலையா, ‘கைப்பக்குவ’ இல்லத்தரசிகளைத் தேர்ந்தெடுக்க, களத்தில் இறங்கினோம். கேட்டரிங்கில் விருப்பமுள்ள இல்லத்தரசிகளை எங்களை தொடர்புகொள்ளச் சொல்லி, லோக்கல் ஏரியாக்களில் பிட் நோட்டீஸ் கொடுத்தோம், பொதுவிடங்களில் நோட்டீஸும் ஒட்டினோம். முன்வந்தவங்களை எல்லாம் தேர்ந்தெடுக்கல. முதலில் அவங்க வீட்டு கிச்சனின் சுத்தத்தைப் பார்வையிட்டு, பெண்களோட ஆரோக்கியத்தை கேட்டறிந்து, அவங்களோட உணவு வகைகளை ருசிச்சுப் பார்த்து, அப்புறம்தான் ஆர்டர் கொடுப்போம்.
 
ஆரம்பத்தில் இல்லத்தரசிகளுக்கு முன்பணமா ஆயிரம் ரூபாய் தந்து, ‘தினமும் நீங்க உங்க வீட்டுக்கு சமைக்கிற சாப்பாட்டையே, இன்னும் ரெண்டு, நாலு பேருக்கு சேர்த்து சமைக்கப் போறீங்க... அவ்வளவுதான்!’னு தைரியம் கொடுத்ததோட, ‘கேட்டரிங்கை நாடாம, வீடு வீடா பெண்களைத் தேடி வரக் காரணமே வீட்டுச் சாப்பாடு என்ற ருசி, சுகாதாரம் மற்றும் செயற்கைப் பொருட்கள் சேர்க்காத ஆரோக்கியத்துக்காகத்தான். அதனால, வீட்டு உறுப்பினர்களுக்குச் சமைக்கிற அந்த அக்கறைதான் உங்க சாப்பாட்டோட ப்ளஸ் என்பதையும் மறந்துடாதீங்க!’னு வலியுறுத்திச் சொன்னோம்!’’ எனும் வினோத், இந்த வெப்சைட்டை ஆரம்பித்தது ஐந்து மாதங்களுக்கு முன்புதான். இப்போது பேக்கிங், ஆர்டர், டெலிவரிக்கு 10 பணியாட்கள் கொண்ட டீம், 200  இல்லத்தரசிகள், 100-க்கும் மேற்பட்ட கஸ்டமர்கள் என்று சட்டென பிக்-அப் ஆகியிருக்கிறார்!

‘‘இப்போதைக்கு மேடவாக்கம், சோழிங்கநல்லூர், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், சந்தோஷபுரம், வேளச்சேரி, துரைப்பாக்கத்தில் உள்ள இல்லத்தரசிகளை மட்டும் எங்க வெப்சைட்டில் இணைச்சிருக்கோம். காலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, ஊத்தப்பம், மதியம் சைவ, அசைவ உணவு வகைகள், இரவு உணவுக்கு சப்பாத்தி, இடியாப்பம்னு ஒவ்வொரு இல்லத்தரசியும் அசத்துறாங்க. ஆர்டருக்கு ஏற்ப அவங்க சமைத்ததை, நாங்க வழங்கின பேக்கிங் செட்ல பேக் செய்து வெச்சுட்டா, எங்க டீம் அதை எடுத்துட்டு வந்து, சுடச்சுட கஸ்டமருக்கு டெலிவரி கொடுத்துடுவாங்க!’’ என்று சொன்னவர்,

‘‘8 - லிருந்து 15 சதவிகிதம் கமிஷன் போக, இப்போ எங்ககூட டைஅப்-ல இருக்கிற ஒவ்வொரு இல்லத்தரசியும் மாசம் 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரம் வரை லாபம் பார்க்கிறாங்க. கஸ்டமர்களுக்கு, அவங்க மனசுக்கும் வயிற்றுக்கும் பிடிச்ச வீட்டுச் சாப்பாடு கிடைக்குது. இப்போதைக்கு வெப்சைட், ஃபேஸ்புக் என்ற அளவில்தான் எங்க தொழில் இயங்குது. இதை சென்னை முழுக்க கொண்டு வருவதுதான் அடுத்த திட்டம்!’’ என்றார் வினோத் சுப்ரமணியன் நம்பிக்கையுடன்.

வீட்டுச் சாப்பாடு ரெடி!

‘ஃப்ரம் எ ஹோம்’-ல் இணைந்துள்ள, சந்தோஷபுரத்தைச் சேர்ந்த இல்லத்தரசி ரத்னா வெங்கடேசன், ‘‘கன்னிமரா ஓட்டல்ல சூப்பர்வைசரா இருக்கிற எங்க வீட்டுக்காரருக்கு சமையல் ருசியா இருக்கணும். அப்படியே நானும் சமையலில் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். சில மாசங்களுக்கு முன்னால, ‘ஃப்ரம் எ ஹொம்’ நோட்டீஸ் பார்த்து, அவங்களுக்கு போன் பண்ணினேன். அவங்க வீட்டுக்கு வந்து கிச்சனைப் பார்த்துட்டு, என் சமையல் பத்தி எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, என்னை `ஓ.கே' பண்ணினாங்க. ஹோட்டலா இருந்தா சாம்பார், ரசம், சாதம்னு இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்களேனு, எப்பவும் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாவேதான் பேக் பண்ணுவேன். கஸ்டமர்கிட்ட நல்ல ஃபீட்பேக் வாங்கின சந்தோஷமே, அடுத்த நாளுக்கு உற்சாகமா காய்கறி பட்டியல் போட வைக்குது. தொழிலில் எந்த பிராப்ளமும் இல்லை, நல்ல லாபம்!’’ என்றார் சுவாரஸ்யமாக.

பணியாளர் முத்துக்குமார், ‘‘எம்.காம் முடிச்சி ருக்கேன். இந்தத் தொழிலின் புதுமையான ஐடியாவும், எதிர்கால உத்தரவாதமும் பிடிச்சு, வேலைக்குச் சேர்ந்துட்டேன். பேக்கிங் அண்ட் டெலிவரி என்னோட வேலை. கஸ்டமர்களோட மெனு லிஸ்ட் இரண்டரை மணி நேரத்துக்கு முன்னாடி என் கைக்கு வந்துடும். ஒவ்வொரு வீட்டிலும் சமைச்ச 10 நிமிஷத்துக்குள்ள அதை எடுத்து, சூடு குறையாம டெலிவரி செய்திடுவேன்!’’ என்றார் சுறுசுறுப்புடன்.

கஸ்டமர்களில் ஒருவரான பாலாஜி, ‘‘முதலில் டிரயலா இட்லி, பொங்கல்தான் ஆர்டர் பண்ணினேன். முதல் டெலிவரியிலேயே பேக்கிங், டெலிவரி, ருசினு எல்லாம் பிடிச்சிப்போக, இப்போ மூணு மாசமா நான் ரெகுலர் கஸ்டமர். சைவம், அசைவம்னு எல்லாம் சூப்பர்! ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கும் பேச்சிலரான எனக்கு, இப்போ தினம் தினம் வீட்டுச் சாப்பாடுதான். கேஷ் ஆன் டெலிவரி. சூப்பர் சர்வீஸ்!’’ என்றார் திருப்தியுடன்!

‘‘அதுதான் எங்க வெற்றி!’’ என்று புன்னகைக் கிறது ‘ஃப்ரம் எ ஹோம்’ டீம்!

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism