Published:Updated:

``ஒவ்வொரு நிராகரிப்பும் மன வலிமையைக் கூட்டியது!’’

- ஐ.ஏ.எஸ்-ஸில் சாதித்த மாற்றுத்திறனாளி ஐரா சிங்கால்

``ஒவ்வொரு நிராகரிப்பும் மன வலிமையைக் கூட்டியது!’’

- ஐ.ஏ.எஸ்-ஸில் சாதித்த மாற்றுத்திறனாளி ஐரா சிங்கால்

Published:Updated:

“பெண்களுக்கு முன்னுரிமை என்பதெல்லாம் இன்னமும்கூட வெறும் வார்த்தை ஜாலம்தான். தகுதி இருந்தும் எனக்கான நாற்காலிக்காக நான் நடத்திய போராட்டங்கள் பலப்பல!’’

- வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதையும் தாண்டி, முதலில் தான் ஒரு பெண் என்பதையே பதியவைக்கிறார் ஐரா சிங்கால்.

``ஒவ்வொரு நிராகரிப்பும் மன வலிமையைக் கூட்டியது!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐரா சிங்கால்... இதுதான் 2014-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான அன்று பலரையும் ஆச்சர்யப்படுத்திய பெயர். இந்தத் தேர்வின் பொதுப்பிரிவில் ஒரு மாற்றுத்திறனாளி முதல் மதிப்பெண் வாங்குவது வரலாற்றிலே இது முதல் முறை. தன் சாதனையால் இந்தியாவின் புகழையே உச்சத்துக்கு கொண்டு சென்ற ஐரா சிங்காலின் உயரம், 4 அடி ஐந்து இன்ச். தன்னை முடக்க நினைத்த முதுகுத்தண்டுவடப் பிரச்னையை, தன்னுடைய தன்னம்பிக்கையால் மூலையில் முடக்கி போட்டுவிட்டு சாதித்திருக்கும் அவரது உழைப்பும், உள்ள உறுதியும் நிகரற்றது.

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டெல்லிதான். பி.இ., கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். பிறக்கும்போதே ‘ஸ்கோலியாசிஸ்’ என்ற தண்டுவடப் பிரச்னையும் கூடவே பிறந்துவிட்டது. கை, கால்களை மற்றவர்களைப் போல அசைக்க முடியாது. ஆனால், `இதெல்லாம் ஒரு குறையா’ என்று என்னைக் கொண்டாடி வளர்த்த பெற்றோர்தான் இந்த வாழ்வில் என் மிகப்பெரிய பலம்.

எனக்கு 10 வயது இருக்கும்போது என் அண்ணன் இறந்துவிட்டார். ‘கடைசிக் காலத்துல உங்களைக் காப்பாத்த உங்க பையன் இல்லாமப் போயிட்டானே’ என்று துக்கம் விசாரித்தவர்களிடம், அந்தப் பொழுதில்கூட என்னை விட்டுக்கொடுக்காமல், ‘அதைவிட பல மடங்கு சந்தோஷமா எங்களை வெச்சுக்கிற பலம் எங்க பொண்ணுக்கு இருக்கு!’ என்றார் அப்பா. இந்த நம்பிக்கைதான் எனக்கான உந்துசக்தி! டான்ஸ், டிரைவிங், டிராயிங் என்று என் ஆர்வத்தையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பதுதான் அவர்களின் சந்தோஷம்!’’ என்பவருக்கு, ஃபுட்பால் என்றால் உயிர். ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு, ஜெர்மன் என பல மொழிகள் அறிந்தவர்.

‘‘வீட்டுக்குள் எனக்கு எப்போதும் கேட்பது கைதட்டல் ஒலி என்றால், வீட்டை விட்டுத் தாண்டிவிட்டால் அதற்கு நேரெதிர்தான். என்னுடைய  குறைபாட்டை தினமும் யாராவது ஒருவர் குத்திக்காட்டிவிடுவார். அதுவும் கல்லூரி வாழ்க்கையில் எனக்கான அடையாளமே என்னுடைய உயரத்துக்கான கேலியும் கிண்டலுமான வார்த்தைகள்தான். நான் பெண் என்பதையும் குறையாகவே பார்த்தது சமுதாயம். ஆனால், அவர்கள் யாருக்கும், என் கனவைத் தடுக்கக்கூடிய சக்தி இல்லவே இல்லை!’’ என எனர்ஜெட்டிக்காக பேசும் இவருக்கு ஐ.ஏ.எஸ். கனவு நனவானது நான்காவது முயற்சியில். ஆனால், ஐ.ஆர்.எஸ். பதவி கனிந்தது முதல் முயற்சியிலேயே! 2010-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக தகுதி பெற்றார். ஆனால், உடல் குறைபாட்டை காரணமாக காட்டி இவருக்கான அங்கீகாரத்தை மறுத்துவிட்டது அரசாங்கம். 

‘‘என்னுடைய கை, கால் அசைவுகளில் இருந்த குறைபாட்டை காரணமாகச் சொல்லி, 62% உடல் குறைபாடுள்ள நான் எந்தப் பதவிக்கும் தகுதியற்றவள் என்று ஒதுக்கினார்கள். இப்படி எந்தச் சட்டமும் நமது அரசியலமைப்பிலே இல்லாத நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தீர்ப்பாயத்தில் மனு கொடுத்தேன். இரண்டு வருடங்களாக டெல்லியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏறி இறங்கினேன். ஒவ்வொரு நிராகரிப்பிலும் மனதின் வலிமை கூடிக்கொண்டே வந்தது!’’ என்று அதையும் பாசிட்டிவாகப் பார்க்கும் சிங்கால், இன்னொரு பக்கம் ஸ்பானிஷ் டீச்சர் வேலை, சாக்லேட் கம்பெனியில் வேலை, ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கான தயாரிப்பு என்று நான்கு வருடமும் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.

‘‘ஐ.ஏ.எஸ். ஆகிவிடுவேன் என்று தெரியும். ஆனால், இந்திய அளவில் முதலிடம் என்பது நானே எதிர்பார்க்காதது. இன்னொரு பக்கம், இரண்டு வருடங்களாக சட்டத்தின் கதவுகளை விடாது தட்டியதன் பலனாக, ‘சிங்கால் ஐ.ஆர்.எஸ் பதவிக்கு தகுதியானவர்’ எனச் சொல்லிவிட்டது அரசாங்கம். திறமை இருந்தும், போராட்டம் இல்லையெனில் இந்தச் சமுதாயம், சட்டம், அரசாங்கம் எல்லாம் சேர்ந்து எத்தனையோ பேரைப்போல என்னையும் மூலையில் முடக்கியிருக்கும். அப்படி தன் உறுதி வலுக்கட்டாயமாகத் தளர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சகோதரிக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளி சகோதரிக்கு நான் ஒரு புள்ளியளவு நம்பிக்கை தந்தாலும், அதை என் பெரிய பெருமையாக நினைப்பேன்!’’ - கட்டைவிரல் உயர்த்தும், ஐரா சிங்கால் தற்போது ஐ.ஆர்.எஸ்-ஸின் கீழ் வரும் கலால் மற்றும் சுங்க வரித்துறையில் உதவி கமிஷனர்!

க.தனலட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism