Published:Updated:

கோடிக்கு ஒன்று குறைவு!

கோடிக்கு ஒன்று குறைவு!

கோடிக்கு ஒன்று குறைவு!

கோடிக்கு ஒன்று குறைவு!

Published:Updated:

ந்தியாவின் வடகிழக்கு மூலையில் பசுமை வளத்துடன் பொதிந்துள்ள சிறிய மாநிலமான திரிபுராவின் பேரதிசயம், புண்ணிய தலமாகப் போற்றப்படும் உனகோடி!

னகோடி... ஓங்கிய பெருங்காடு. அதில் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு; மலைச் சரிவுகள், பாறைகள். அந்தப் பாறைகளில் இருக்கும் புடைப்புச் சிற்பங்கள் (bas-relief), அந்தப் பள்ளத்தாக்கையே அதிசயமாக்குகின்றன. நிறைய தனித்து நிற்கும் சிலைகளும் பரவிக் கிடக்கின்றன. இன்னும் பக்கத்து காடுகளில் பல மறைந்தும் புதைந்தும் கிடக்கின்றனவாம். மொத்தம் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடிக்கு ஒன்று குறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது!

கோடிக்கு ஒன்று குறைவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த எண்ணிக்கைக்கு இரண்டு கதைகள் உள்ளன. ஒரு சமயம் சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் கைலாயம் செல்லும் வழியில் இங்கு இளைப்பாறினார். பரிவாரங்கள் இரவு அங்கேயே தங்க விரும்பினர். அனுமதி வழங்கப்பட்டது... ஒரு நிபந்தனையுடன். மறுநாள் சூரிய உதயத்துக்கு முன் கிளம்பிவிட வேண்டும். ஆனால், விடியலில் மகேசன் மட்டுமே எழுந்தார். சினமுற்ற ஈசன், அனைவரும் சிலைகளாகி அங்கேயே இருக்கும் படி சபித்தார். அதனால்தான் இங்கு 99,99,999 சிற்பங்கள் உள்ளனவாம்.

அடுத்தது, ஒரு சிற்பியின் கதை. குல்லு கம்ஹார் என்ற சிற்பி பெரிய சக்தி உபாசகன். சிவகணங்களுடன் பார்வதி - பரமேஸ்வரர் இந்த வழியாக வந்தபோது, தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினான் குல்லு. உமையவள் ஒரு உபாயம் செய்தாள். இரவு முடிவதற்குள் கோடி கயிலை பதியின் உருவங்களைப் பொறிக்கச் சொன்னாள். ஆனால், விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பியால் செதுக்க முடிந்தது. 

கதைகள் இப்படிச் சொல்லப்பட்டாலும், பிரமிடுகளைப் போல இவை எப்படி, யாரால் செதுக்கப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. சரித்திர சான்றுகள் இல்லை. இந்தச் சிற்பங்களின் வடிவமைப்பு, இவை 9 - 12ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சொல்வதாக உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய புடைப்புருவ சிற்பங்களாகக் கருதப்படும் இவை ஒவ்வொன்றும் 30 - 40 அடி உயரம் கொண்டவை. இவற்றுக்குள்ள முழுவடிவமற்ற நிலை தான் தனித்தன்மை வாய்ந்ததாகக் காட்டுகிறது.

சிற்பங்களின் தலையும், பெரிய காதுகளும் புத்தரின் முகத்தை நினைவுறுத்துகின்றன. ஆனால் நெற்றிக்கண், பெரிய காதணிகள் மற்றும் பழங்குடியைப் போல சற்றே பகட்டான
மீசையும், பௌத்தத்துக்கு ஒவ்வாத அகன்ற பல்லிளிப்பும், திராவிட சிற்பக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளதையும் நாம் கவனிக்கலாம். 10 அடி நீளமுள்ள மணி மகுடம் இந்து மதத்தைப் பறைசாற்றும். பௌத்த பாரம்பர்யத்தில் வந்த திரிபுரா மலைவாழ் பழங்குடியினரிடையே ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் நிரந்தரமாகக் குடியேறிவிட்டன. அதனால் இந்த சிற்பக்கலையில் பௌத்தமும் இழையோடுவதைக் காணலாம்.

கோடிக்கு ஒன்று குறைவு!

ஏற்றமும் இறக்கமுமாக உள்ள இந்த புனித தலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் செல்வதற்கு மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக ரிப்பன் போன்ற படிக்கட்டுகள் உள்ளன. மலைகளை இணைப்பதற்காக பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஈசனுக்கு காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பூசாரிகள் கொஞ்சம் உயரத்தில் குடிசை போட்டு வாழ்கிறார்கள்.

ஓடை அருவியாக விழும் பாறையில் அமர்ந்த நிலையில் கணபதி உருவம், அருகிலேயே நின்ற நிலையில் கணேசரின் உருவங்கள், நேர்த்தியுடன் விஷ்ணுவின் உருவம், ஜடா முடியுடன் சிவனின் தலை, கங்கையைக் குறிக்கும் விதமாக அந்தத் தலையிலிருக்கும் ஓட்டையில் வழிந்தோடும் தண்ணீர், இன்னும் நரசிம்மர், ஹரன்-கௌரி, ஹரிஹரன், அனுமன், துர்க்கை, கங்கை, கௌரி, வீரபத்திரர், ராமர் - சீதா, கின்னரர், பார்வதி தபஸ், சதுர்முக லிங்கங்கள், கல்யாணசுந்தரமூர்த்தி என நம் கண்ணில் பட்டதுபோக அந்த உனகோடி சிற்பங்கள் இன்னும் எங்கெங்கு ஒளிந்திருக்கின்றனவோ என்று மனமும் கண்களும் பரபரக்கின்றன. இங்கு வழிபாட்டுக்கு நாடுநாயகமாக இருக்கும் சிவனின் பெயர், உனகோடீச்வர பைரவர்.

வன நிசப்தம், அதை அவ்வப்போது கீறிசெல்லும் பறவைகளின் ஒலி, யுகங்கள் பல கடந்த சிற்பங்கள் என்று ஒரு தியான அனுபவத்தை தரும் இந்த திருத்தலம் ஏன் இன்னும் பிரபலமாகவில்லை என்று வியக்கும்போதே, ஆனால் அதுதான் இதன் மாசுபடியாத அழகை பாதுகாக்கிறது என்று திருப்தி அடைகிறது மனம்.

உனகோடி... உலகின் உன்னத அனுபவங்களில் ஒன்று!

ஜி.பிருந்தா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism