தன்னம்பிக்கை
Published:Updated:

படிக்கும்போதே சுயதொழில் தொடங்கலாம்!

படிக்கும்போதே சுயதொழில் தொடங்கலாம்!

மாணவர்களுக்குக் கல்லூரிப் பருவத்திலேயே தொழில்பயிற்சிகளை வழங்கி வருபவர் ரோஸி ஃபெர்னாண்டோ. இவர், முன்னாள் பேராசிரியை.
 
‘‘வணிகவியல் பேராசிரியையான நான், புத்தகத்தைவிட தொழில் சார்ந்த விஷயங்களை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் படிப்பை முடித்த கையோடு அவர்களால் நம்பிக்கையுடன் ஒரு தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதுதான் காரணம்.

இதன்படி அந்த ஃபீல்டு ஸ்டடிக்கான வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தபோது, அவர்களின் ஆர்வமும் நம்பிக்கையும் பெருகியது. உதாரணமாக, கைவினைப்பொருட்கள் தொழில் பற்றிய பயிற்சியில், அந்தத் தொழிலில் இயங்கிக்கொண்டிருக்கும் பேங்கர், அக்காடமிஸ்ட், தொழிலதிபர் என பலதரப்பட்டவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு நேரடியாகப் பயிற்சிகொடுத்தபோது, அது அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது.

படிக்கும்போதே சுயதொழில் தொடங்கலாம்!

ஒருகட்டத்தில் நானும் என் தோழி வசந்தகுமாரியும் ‘வின்னர்ஸ் ஸோன்’ என்ற தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை ஆரம்பித்தோம். அதன் ஒரு செயல்பாடாக ‘ஸ்டார்ட் அப் சொல்யூஷன்’ என்ற புரோகிராம் மூலமாக, பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக்கும் பயிற்சிகளை முன்னெடுத்தோம்.

ஒரு தொழிலில் உற்பத்திப் பொருளுக்கான விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டும், ஒரு தொழில்முனைவோராக நம் தோற்றத்தில் இருந்து அணுகுமுறை வரை நம்மை எப்படி மெருகேற்றிக்கொள்ள வேண்டும், தொழிலில் லாபத்துக்கான சூத்திரங்கள் என்ன... இப்படி ஒரு தொழிலின் விற்பனை யுக்திகள் அனைத்தையும் கண்காட்சி மூலம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தோம்.

இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பும் திருப்தியும், ஆசிரியர் பணியிலிருந்து என்னை விலகவைத்து, தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியிலேயே முழு நேரமும் இயங்க வைத்தது. இப்போது தமிழகத்தின் பல கல்லூரிகளிலும், மாணவர்கள் படித்துக்கொண்டே தொழில் பயிற்சி பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்குமான ஆலோசனைகளை ‘ஈடிசெல்’ (EDCELL) மூலம் வழங்கி வருகிறோம்''என்று அக்கறையுடன் கூறும் ரோஸி ஃபெர்னாண்டோ,

கல்லூரியில் படிக்கும்போதே தொழிலதிபராகும் வழிமுறைகள், வீட்டிலிருந்தபடியே ஒரு தொழிலை தொடங்க என்ன செய்ய வேண்டும், தொழில் தொடங்கியபின் சந்தைப்படுத்துதலில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், லாபம் பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியெல்லாம் `வழிகாட்டும் ஒலி’யில் பேசுகிறார். செப்டம்பர் 8 முதல் 14 வரை 66802912* என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்... பலன் பெறுங்கள்!

வே.கிருஷ்ணவேணி  படம்: தி.ஹரிஹரன்