Published:Updated:

இட்லி, சேவை, கொழுக்கட்டை...ஆவி உணவுகள் ஒன்லி!

கேட்டரிங் தொழிலில் கலக்கும் தம்பதி

இட்லி, சேவை, கொழுக்கட்டை...ஆவி உணவுகள் ஒன்லி!

கேட்டரிங் தொழிலில் கலக்கும் தம்பதி

Published:Updated:

‘பெசன்ட் நகருக்கு 10 கிலோ எலுமிச்சை சேவை... தி.நகருக்கு தேங்காய்ப் பூரணக் கொழுக்கட்டை ஆர்டர் போயிடுச்சான்னு கொஞ்சம் செக் பண்ணுங்க மாஸ்டர்...’

- கட்டளைகள் பறந்துகொண்டிருக்க, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது, சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ யூனிட். அந்த யூனிட்டை நடத்தும் ஸ்ரீதர் -அருணா தம்பதி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தனர்.

‘‘சேவை, கொழுக்கட்டை, இட்லினு ஆவியில் வேகவைக்கிற உணவுகளை மட்டுமே தயாரிச்சு சப்ளை பண்ணிட்டிருக்கோம். அதுதான் எங்க ஸ்பெஷல். ஆச்சு 10 வருஷம்... அமோகமா போயிட்டிருக்கு தொழில்!’’ என்று நெஞ்சில் கைவைத்து ஸ்ரீதர் சொல்ல, மெல்லிய பெருமை முகத்தில் இழையோட ஆரம்பித்தார் அருணா...

இட்லி, சேவை, கொழுக்கட்டை...ஆவி உணவுகள் ஒன்லி!

‘‘இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. ஹைதராபாத்ல இவர் கிராஃபிக்ஸ் டிசைனரா வேலை பார்த்திட்டிருந்த சமயம், எங்கப்பா ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்த்தார். கம்பெனிக்கு விசிட் வந்த சில அயல்நாட்டு அதிகாரிகளுக்கு வீட்டில் விருந்து வெச்சப்போ, நம்ம ஸ்பெஷலான சேவை பண்ணிப் பரிமாறினோம். எண்ணெயே இல்லாத அந்த ஆவி உணவு அவங்களை ரொம்பக் கவர்ந்துச்சு. ஏகத்துக்குப் பாராட்டிட்டுப் போனாங்க. அப்போதான், ‘இந்த சேவை சாப்பிடறதுக்கு ரொம்ப ருசியாக இருந்தாலும், பிழியறது ரொம்பக் கஷ்டமான வேலை. இதுக்கு ஒரு மெஷினை டிசைன் பண்ண முடியுமா மாப்பிள்ளை?’னு இவரைக் கேட்டார் எங்கப்பா. அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு மெஷினை வடிவமைச்சார். வீட்டில் சேவை செய்து பார்த்தோம். பிரமாதமா வந்தது. உண்மையில் மெஷின் உற்பத்திதான் ஆரம்பத்தில் எங்க தொழில் ஐடியாவா இருந்தது. ஆனா, சூப்பரா சேவை வந்த ஜோரைப் பார்த்ததும், பிசினஸ் ஐடியாவை ஃபுட் லைன்ல மாத்திட்டோம். சென்னையில் இடம் பார்த்து ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ தொடங்கினோம்!’’ என்றபடியே, சேவை டப்பாக்களை எடை போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார் அருணா.

‘‘சாப்பிட்டுப் பார்த்துத் திருப்தி அடைஞ்ச கஸ்டமர்ஸ் மூலமாகத்தான் மத்தவங்களுக்குப் பரவிச்சு. முதலில் மேற்கு மாம்பலத்தில் பாட்டி வீட்டு முன்னால சின்னதா ஸ்டால் போட்டு, தாளிச்ச சேவை, பிளெய்ன் சேவை, புளி சேவை, எலுமிச்சை சேவைனு வெரைட்டியா சேல்ஸ் பண்ணினோம். கஸ்டமர் ஒருத்தர், ‘பெசன்ட் நகர்ல காலையில வாக்கிங் போறவங்களுக்குக் கொண்டுவந்து சப்ளை பண்ண முடியுமா?’னு கேட்டார். அங்கே கொண்டுபோனப்போ, நல்ல ரெஸ்பான்ஸ்.

அடுத்ததா, மிளகாய்ப்பொடி தடவின இட்லி போட்டோம். அதுவும் நல்ல சேல்ஸ். பிறகு, இனிப்பு, கார பூரணம் வெச்ச கொழுக்கட்டை செய்து சப்ளை பண்ணினோம். பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, ஆயுதபூஜை மாதிரி பண்டிகைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் கொழுக்கட்டைகள் செய்து சப்ளை பண்ணுவோம். சமீபத்தில் ‘அம்மிணிக் கொழுக்கட்டை’ன்னு சொல்ற மணிக்கொழுக்கட்டை செய்து விற்க ஆரம்பிச்சோம். இது யாரும் அவ்வளவு சுலபத்தில், அதே ருசியோடு செஞ்சுட முடியாது. அதனாலதான் 10 வருஷமா இவ்வளவு கூட்டம்!’’ என்று புன்னகைக்கிறார் ீதர். மனைவியின் பிசினஸில் கைகோத்து, வெளியே விநியோகம், யூனிட்டில் இயந்திரங்கள் பராமரிப்பு என எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார்.

இட்லி, சேவை, கொழுக்கட்டை...ஆவி உணவுகள் ஒன்லி!

இட்லிக்கு அரைப்பது போல, ஊறவைத்த புழுங்கலரிசியை அரைப்பது முதல், மாவு கிளறுவது, சேவை பிழிவது, மணிக் கொழுக்கட்டைக்கு சின்னச் சின்னதாக உருட்டிப் போடுவது என எல்லாமே மெஷின்கள்தான். பூரணக் கொழுக்கட்டை மட்டும்தான் கைகளில் தயாரிக்கப்படுகிறது.

‘‘எல்லாமே இவருடைய பாட்டியின் ரெசிப்பிகள்தான். பக்குவம் ரொம்ப முக்கியம். சேவைக்கு அரைக்கிறப்போ, புழுங்கலரிசி நல்லா ஊறணும். இட்லிக்கு அரைக்கிறதைவிட ரெண்டு மடங்கு நைஸா அரைக்கணும். சின்னதா குருணை இருந்தால்கூட, சேவை பிழியும்போது உடைஞ்சிடும். மாவைக் கிளறும்போது, முக்கால் மணி நேரம் வேகணும். அதுக்கப்புறம் மெஷினில் போட்டுப் பிழிஞ்சு, ஆறவிடணும். அப்போதான் உதிர் உதிராக வரும். கடைசியாகத்தான் புளிக்காய்ச்சல், எலுமிச்சை தாளிதம், தேங்காய், தக்காளி போட்டுத் தாளிக்கிறது எல்லாம். இப்போ வரைக்கும் நாங்க எல்லாமே எங்க வீட்டுக்குச் செய்ற அளவுப்படிதான் போடறோம். இத்தனை கிலோ அரிசிக்கு இத்தனை கிலோ தேங்காய்த் துருவல், இத்தனை டம்ளர் எலுமிச்சை ஜூஸ்னு எல்லாமே அளவுப்படிதான். எதையுமே மாத்துறதில்லை!’’ என்று சக்சஸ் சீக்ரெட் சொன்ன அருணா, போனில் வரும் அடுத்த ஆர்டரைக் கேட்பதில் பிஸியாகிறார்!

பிரேமா நாராயணன்  படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்