Published:Updated:

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

திருநங்கைகள் டைரி

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

திருநங்கைகள் டைரி

Published:Updated:

மதளத்தில் ஓடி கோட்டை எட்டுகிறவர்களின் வெற்றியைக் கைதட்டி அங்கீகரிக்கிறோம். ஆனால், பள்ளத்தாக்கில் இருந்து மேடேறி, தொடர்ந்து அந்த வலிகளோடும், வடுக்களோடும் தங்கள் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கும் திருநங்கை வெற்றியாளர்களைக் கவனித்து கைகொடுத்திருக்கிறோமா?!

அவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போம் வாருங்கள்...

ப்ரித்திகா

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

‘‘நிராகரிப்போட வலியை, நீங்க என்னிக்காவது உணர்ந்திருக்கீங்களா? எங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் அந்த வலியில்லாமக் கழியாது. ஸ்கூல் படிக்கும்போது சில திருநங்கைகளைப் பார்த்தப்போ, எனக்குள்ள நடந்திட்டிருந்த ஒரு போராட்டத்துக்கு, ‘இதுதான் நாமும்’னு ஒரு பதில் கிடைச்சது. வீட்டில், வெளியில் அதைச் சொல்ல முடியல. என்னை மறைச்சு, பி.சி.ஏ. சேர்ந்தேன். கல்லூரியில் என்னைப் பத்தி தெரிஞ்சு கிண்டல்கள் ஆரம்பமாச்சு. அப்பா, அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னவாகும்னு பயந்து, மூணாவது செமஸ்டர்லயே வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அப்போதான் ஒரு திருநங்கை எனக்குப் பழக்கமானாங்க. ‘ஒரு டிகிரியையாவது முடிச்சு வெச்சாத்தான், உன்னால தன்னம்பிக்கையோட வெளியில பேசவும், வாழவும் முடியும்’னு சொல்லி, வீட்டுக்கு அனுப்பினாங்க. ஆனா, அதுக்குள்ள வீட்டுல என் விஷயம் தெரிஞ்சு, என்னை மென்டல் ட்ரீட்மென்ட் கொடுக்கிற மருத்துவமனை வரை கொண்டுபோய் நோகடிச்சாங்க. அப்போதான் திருநங்கை கல்கியோட ஆதரவால கோடம்பாக்கத்துல தங்கியிருந்தேன். திருநங்கைகள் செல்வி மற்றும் பாரதி உதவியோட ஒரு ஹாஸ்டலில் வார்டன் வேலைக்குச் சேர்ந்தேன். ‘வெளியில யாருக்கும் நீங்க யாருனு தெரியக்கூடாது’ங்கிற கட்டுப்பாடு. வெறுத்துப்போய், திருநங்கைகளுக்கான சமூகப்பிரச்னைகளை தீர்க்கிற வேலைகளில் இறங்கிட்டேன்.

சின்ன வயசுல இருந்தே என் கனவு... எஸ்.ஐ ஆகணும் என்பது! விண்ணப்பிச்சிட்டு காத்திருந்தா, ஆன்லைன் நுழைவுச்சீட்டு லிஸ்ட்டில் என் பெயர் இல்லை. கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணி, கோர்ட் ஆர்டரோட எக்ஸாம் எழுதினேன். உடல் தகுதித் தேர்விலும் ரிஜெக்ட் பண்ணினாங்க. மறுபடியும் கேஸ் ஃபைல் பண்ணி கலந்துக்கிட்டேன். அத்லெட்டிலயும் அதே நிராகரிப்பு, அதே கோர்ட் கேஸ் ஃபைலிங். இப்படி மூணு முறையும் கோர்ட் ஆர்டரோடதான் என்னால செலக்‌ஷனில் கலந்துக்க முடிஞ்சது. அக்டோபர் மாசம் ரிசல்ட். காத்திட்டு இருக்கேன். இது எனக்கான தனிப்பட்ட போராட்டம் இல்ல... எங்க சமூகத்துக்கு நம்பிக்கை கொடுக்கிற போராட்டம்!’’

‘லிவிங் ஸ்மைல்’ வித்யா

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

‘‘இந்தியாவுலயே பொதுவெளியில வேலைபார்த்த முதல் திருநங்கை, தமிழ்நாடு கெஜட்டில் முதன் முதலில் பெயர் மாற்றிப் பதிந்து, பாஸ்போர்ட் எடுத்த முதல் திருநங்கைனு திருநங்கைகளின் நல்வாழ்வுக்கு முன்னோடியா இருப்பதில் மகிழ்ச்சி. என்னைப் பற்றி முதல் முதலில் 2006-ல் எழுதினது, அவள் விகடன்தான். 2007-ல் ‘நான் வித்யா’ என்கிற என் சுயசரிதையை எழுதினேன். அது ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, அசாமி போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அந்தப் புத்தகத்தின் கன்னட மொழிபெயர்ப்பை செய்த தமிழ்செல்விக்கு 2010-ல் சாகித்திய அகாடமி விருது கிடைச்சது. அதே வருஷம் சென்னை புத்தகக் கண்காட்சியில என்னோட புத்தகம் ரெண்டாவது ‘பெஸ்ட் செல்லிங் புக்’.

இந்த சுயசரிதையை கன்னடத்தில் ‘நானு அவனு அல்ல அவளு’ என்ற பேர்ல படமா எடுத்தாங்க. படத்தில் என்னோட ரோல் பண்ணின ஹீரோவுக்கு ‘பெஸ்ட் ஆக்டர்’ விருது கிடைச்சது. 2013-ல் பிரிட்டிஷ் கவுன்சில் எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க, லண்டனில் ஆறு மாதம் தியேட்டர் கோர்ஸ் கத்துக்கிட்டேன். கடந்த வருடம் ``பன்மை'' என்கிற தியேட்டரை ஆரம்பிச்சு திருநம்பி, திருநங்கைகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து நாடகம் போட்டுட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டின் தலைசிறந்த நாடகக்கலைஞர்களின் குரூப்பில் நடிச்சுட்டு இருந்தேன். ஆந்திரா, கேரளா தமிழ்நாடு மட்டுமில்லாம, அமெரிக்காவிலும் டிராமா போட்டிருக்கேன். பொதுவாக நாடகங்கள்ல எனக்கு க்ளவுனிங் (clowning) கேரக்டர். சென்னை, குழந்தைகள் நல மருத்துவமனையில் மாசத்துல ரெண்டு நாளாவது குழந்தைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷப் படுத்திடுவேன். நான் இவ்வளவு சுழன்றாலும், என்னைச் சுத்தி வறுமைதான். காரணம், எங்களுக்கு எந்த உரிமையும், சலுகையும் கிடைக்கிறதில்ல. அரசாங்கம்... எங்களைப் பார்க்கணும்!’’

பானு

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

‘‘ப்ளஸ் டூ படிக்கும்போதே, நான் திருநங்கைனு தெரிஞ்சு, என்னை கிளாஸுக்கு வெளிய செருப்பு போடுற இடத்துல உட்கார வெச்சாங்க. அவமானம் தாங்காம நான் ஸ்கூலுக்குப் போகல. எங்க வீட்டுல, ஸ்கூலில் சண்டை போட்டு கிளாஸில் விட்டுட்டு வந்தாங்க. ஒரு கட்டத்துல வீட்டுக்கும் என் சுயம் தெரியவர, சென்னைக்கு வந்துட்டேன். எங்க கம்யூனிட்டியில இருக்கிறவங்க துணையோட டிப்ளோமா முடிச்சு, ஒரு தனியார் கம்பெனியில மூணு வருஷம் வேலை பார்த்தேன். அப்புறம் இன்ஜினீயரிங் படிக்க சென்னை, அண்ணா யுனிவர்சிட்டியில விண்ணப்பிச்சேன். ரிஜெக்ட் பண்ணினாங்க. கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணி, `திருநங்கை இருபாலர் கல்லூரியில் மட்டும்தான் படிக்கணும், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரிகளில் மட்டுமே அனுமதி, பொறியியல் கோர்ஸ்கள் படிக்க முடியாது'னு அதுவரை எங்களைச் சுத்தியிருந்த விலங்குகளை அறுத்தெறிந்து, இன்ஜினீயரிங் காலேஜில் சேர்ந்தேன்.

திருநங்கைகள்னா யார், அவங்களுக்கு சமுதாயத்துல என்னென்ன சலுகைகள் இருக்கு என்பதை ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்துல கடைசி பக்கத்துல எழுதியிருக்காங்க. எங்களுக்கான முதல் பிரச்னையே, ஹார்மோன் மாற்றம்தான். அது பிரளயமா எங்களுக்குள்ள நடக்கும். அதை அறிவியல் பாடப்புத்தகத்தில் சொல்லியிருந்தா, அப்போ தவிக்கிற தவிப்புக்கு வழிகாட்டுதலா இருக்கும்.

திடீர்னு ஒருநாள் பெற்றோரும் சமூகமும் எங்களை ஓடஓட விரட்டும்போது எங்க போவோம்... யாரு வேலை கொடுப்பா? நாலாயிரம் ரூபாய் வாடகை வீட்டுக்கு, திருநங்கைன்னா மட்டும் ஆறாயிரம் ரூபாய் கேட்குறாங்க... என்னதான் பண்ணுவோம்? இத்தனை துயரங்களையும் துரத்தல்களையும் மீறித்தான் நான் இப்போ இன்ஜினீயரிங் தேர்ட் இயர் படிச்சுட்டு இருக்கேன். என் சகோதரிகளுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டா வாழ்ந்துகாட்ட ஆசை!’’

ரெஜினா பானு

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

‘‘குற்றாலம்தான் என்னோட சொந்த ஊர். ஸ்கூல் படிக்கும்போதே பெண் தன்மையை உணர ஆரம்பிச்சுட்டேன். நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சதால அப்பா, அம்மாவுக்கு விஷயம் தெரியாம பார்த்துக்கிட்டேன். ஆனா... ஸ்கூல், ஹாஸ்டல்ல என்னைப் பத்தி தெரிஞ்சதும், சகிக்க முடியாத செக்ஸ் டார்ச்சரை அனுபவிக்க வேண்டியதா இருந்தது. ப்ளஸ் டூ வரைக்கும் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனா இருந்த நான், பி.இ., எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்கில் சேர்ந்தேன். டிகிரியை கையில் வாங்கியதும், ஜோதிபிரகாஷ் என்ற என் பெயரை ரெஜினா பானுனு மாத்திக்கிட்டேன். சென்னைக்கு வந்து சேர்ந்தேன். படிப்பு இருந்தும், என் தோற்றம் வேலைவாய்ப்பை எனக்குத் தரல. திருநங்கைகள்னாலே பிச்சையும், பாலியல் தொழிலும்தான் என்ற பட்டியலில் நாமளும் சேர்ந்துடக்கூடாதுனு ஒவ்வொரு இடமா வேலைக்கு அலைஞ்சேன். நிறைய அவமானங்கள். ஆனாலும் பல நல்ல உள்ளங்களின் அரவணைப்பால் சென்னை, தி.நகர் டபிள்யூ.சி.எஃப்  மருத்துவமனையில் அட்மினிஸ்ட்ரேட்டரா சேர்ந்தேன். இப்போ எங்க எம்.டி. டாக்டர் ஜமீலாவுக்கு பெர்சனல் செக்ரட்டரியும் நான்தான்.

அப்புறம்... நான் ஒரு எழுத்தாளர், கவிஞர். என்னோட கவிதைகள் பல இதழ்களில் வெளியாகியிருக்கு. திருநங்கைகளோட வாழ்க்கையை முழுமையா புரியவைக்கும் ‘ஒட்டுறுப்பு’ என்கிற நாவலை எழுதிட்டு இருக்கேன். இந்த சமுதாயத்திடம் ஒரே ஒரு கோரிக்கை... எங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்க!’’

ஸ்வப்னா

இது புறக்கணிக்கப் பட்டவர்களின் வெற்றி!

‘‘பத்தாம் வகுப்புல 428 மார்க், பன்னிரண் டாம் வகுப்புல 1,021 மார்க். அப்போதான் உடல் ரீதியான மாற்றங்கள் என்னைத் தனிமைப்படுத்த ஆரம்பிச்சது. ஆனா, ‘நாம எதுக்கு விலகணும்? திக்கு தெரியாம இருக்கிற எதிர்காலத்துல கல்விதான் நம்மைக் கரையேத்தும்’னு புரிஞ்சு, டிகிரி முடிச்சேன். திருநங்கைகளுக்கு அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதுற உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதை மாற்றியெழுத வெச்சது, நானும் எனக்காக பலரும் இணைந்து நடத்தின சட்டப் போராட்டம். இப்போ குரூப்-1, குரூப்-2,  குரூப்-4 னு பரீட்சைக்குப் படிச்சிட்டு இருக்கேன். திருநங்கைத் தோழிகளே... இந்த சமூகத்தின் கிண்டலுக்கு வேதனைப்படுறதைவிடவும், அழறதைவிடவும் உருப்படியான சில வேலைகள் நமக்காகக் காத்திட்டு இருக்கு. அதை நோக்கி ஓடுவோம். நிகழ்காலப் பிரச்னைகளைப் பார்த்துப் பயந்தா, நம்ம எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கத் தவறிடுவோம். அதனால... கீப் ஆன் மூவிங்!''

வே.கிருஷ்ணவேணி, ஸ்ரீ.தனஞ்ஜெயன்  
 
படங்கள்: கே.கார்த்திகேயன்,  எம்.விஜயகுமார், தி.ஹரிஹரன், ம.நவீன்