Published:Updated:

ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்பு... மாணவர்களுக்கு பிராக்டிக்கல் பயிற்சி!

பட்டையை கிளப்பும் பதினைந்து டிகிரி விஜயலக்ஷ்மி!

ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்பு... மாணவர்களுக்கு பிராக்டிக்கல் பயிற்சி!

பட்டையை கிளப்பும் பதினைந்து டிகிரி விஜயலக்ஷ்மி!

Published:Updated:

விஜயலக்ஷ்மி... 15 டிகிரி முடித்த பட்டதாரி. அதுமட்டுமல்ல அவரின் சிறப்பு அடையாளம். பெண்களின் நல்வாழ்வுக்கான ‘சீட்’ அமைப்பு, பொறியியல் மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சியளிக்கும் ‘விஜயலக்ஷ்மி ஹைடெக் சொல்யூஷன்ஸ் இந்தியா’... இப்படி தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்கு, தன்னால் முடிந்ததை மிகுந்த விருப்பத்துடனும், நேர்த்தியுடனும் செய்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த விஜயலக்ஷ்மி.

‘‘யு.ஜி எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, பி.ஜி - கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி படித்தேன். கணவரும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இருவரும் சேர்ந்து ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்று, 25 ஆண்டுகளுக்கு முன்னரே ‘விஜயலக்ஷ்மி ஹைடெக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தை தொடங்கினோம். ஆனால், திடீரென்று ஒருநாள்  என்னையும், என் இரண்டு குழந்தைகளையும் விட்டு அவர் மறைந்துவிட... வாழ்க்கை என்னைத் திருப்பிப் போட்டது.

ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்பு... மாணவர்களுக்கு பிராக்டிக்கல் பயிற்சி!

தனிமையை முதலில் விரட்ட எண்ணி, தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு டிகிரி முடிக்கும்போதும், அந்தத் துறையில் என் அறிவு விசாலமடைந்து தன்னம்பிக்கை கூடும். அப்படியே கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் (போஸ்ட் டாக்டரேட் வரை), எம்.பி.ஏ.,வில் டாக்டரேட் உட்பட 8 பட்டங்கள், எம்.எட் (டாக்டரேட்), எம்.ஏ., சைக்காலஜி உள்ளிட்ட 15 டிகிரி வரை முடித்துவிட்டேன். அந்தப் பட்டங்கள் தந்த தன்னம்பிக்கை, என் நிறுவனத்தை திறம்பட செயல்பட வைத்ததோடு, மற்றவர்களுக்கு உதவும் முயற்சிகள் பற்றியும் யோசிக்க வைத்தது!’’ என்பவர், பெண்களின் நலனில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

‘‘கல்வி, குடும்பம், பொருளாதாரம் என்று எல்லாம் இருந்த நான், கணவரை இழந்தபோது திக்குத் தெரியாமல் திணறினேன் எனில்... கல்வியறிவில்லாத, ஏழ்மையான குடும்பத்து ஆதரவற்ற பெண்கள் இப்படி ஒரு சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பார்கள் என்று நான் சிந்தித்தன் விளைவு... 17 வருடங்களுக்கு முன் ‘சீட்’ (SEED - Society for Education Enhancement and Development) என்ற அமைப்பை உருவாக்கினேன். கணவனை இழந்த பெண்கள், குடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு கணினிப் பயிற்சி மற்றும் அவர்கள் விரும்பும் துறையில் இலவசப் பயிற்சியை ‘சீட்’ வழங்கி வருகிறது. இன்னொரு பக்கம், என் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனத்தையும் திறம்பட நடத்தி வருகிறேன்!’’ என்ற விஜயலஷ்மி, தன் நிர்வாகத்திறமை மற்றும் பெண்களுக்கான சேவைக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

‘‘ஒருமுறை அப்துல்கலாம் ஐயாவிடம் ‘சிறந்த பெண் தொழிலதிபர்’ விருது பெற்றபோது அவர் என்னிடம், ‘மாணவ சமுதாயத்துக்காக என்ன செய்தாய்?’ என்று கேட்டார். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தமிழ்நாட்டில் 592 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் படிப்பை முடித்துவிட்டு வரும் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. காரணம், நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிற இண்டஸ்ட்ரியல் நாலெட்ஜ் வேறு, மாணவர்களின்  அகடமிக் சப்ஜெக்ட்கள் வேறு. களத்தில் இறங்கி வேலை செய்வதற்குரிய திறனை பாடத்திட்டம் வளர்க்கவில்லை. குறிப்பாக, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு கணினிப் பிரச்னைகளை அடையாளம் கண்டு தீர்க்கத் தெரிந்திருக்க வேண்டும், நெட்வொர்க் கனெக்ட் செய்யத் தெரிந்திருக்க வேண்டும், சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யத் தெரிந்திருக்க வேண்டும், சாஃப்ட்வேர் டெவலப் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இந்த நான்கு அடிப்படை விஷயங்களும்கூட பல பட்டதாரிகளுக்குத் தெரிவதில்லை.

இந்தத் திறனின்மையைச் சரிசெய்ய, எங்கள் நிறுவனத்தின் ‘ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்’ குழு ஆராய்ந்து சிலபஸ் ஒன்றினை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று பயிற்சியை வழங்குகிறோம். இதற்குப் பின் மைக்ரோசாஃப்ட்டின் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்டுக்கான இன்டர்நேஷனல் தேர்வு ஒன்றையும் எழுத வைப்போம். அப்படி இதுவரை எங்களிடம் பயிற்சி பெற்று இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள் எவரும் அதில் தோல்வி அடைந்ததில்லை’’ என்றார் விஜயலஷ்மி.

ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்பு... மாணவர்களுக்கு பிராக்டிக்கல் பயிற்சி!

இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர் கிருபாகரன் பேசும்போது... ‘‘நான் 14 அரியர் வெச்சிருந்தேன். இந்தப் பயிற்சிக்குப் பிறகு மீண்டும் பாடங்களைப் படிக்கும்போதுதான் தியரிக்கும் பிராக்டிக்கலுக்குமான லிங்க் புரிஞ்சது. அடுத்த செமஸ்டர்லேயே 14 பேப்பரையும் க்ளியர் செஞ்சேன். இன்டர் நேஷனல் எக்ஸாமையும் எழுதித் தேர்வானேன். அரியர் வெச்சிருக்கும் மாணவர்கள்கூட அந்த இன்டர்நேஷனல் சர்டிஃபிகேட் கொண்டு பெரிய நிறுவனங்கள்ல வேலைக்குச் சேரலாம். பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் வாங்கறதில்லை. பயிற்சிக்கான துறை சார்ந்த நிபுணர்களை அழைக்க மட்டும், குறைந்தளவு கட்டணம் வசூலிக்கறாங்க. இரண்டு மாதப் பயிற்சியும் தர்றாங்க!’’ என்றார் நன்றியுடன்.

‘‘என் கணவர், ‘நான் இறந்தால் நான் நல்லது செஞ்ச நாலு பேர் துடிச்சு ஓடி வரணும்’ என்று சொல்வார். அதேபோல அவர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டார்கள். என் இறுதி ஊர்வலமும் அப்படி நான் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்வதாக இருக்க வேண்டும்!’’

- விழிகள் மூடித் திறக்கிறார் விஜயலக்ஷ்மி!

ந.ஆஷிகா  படங்கள்: எம்.விஜயகுமார்